0
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், தனித்துவமான நடிப்பின் மூலம் சர்வதேச திரை ஆர்வலர்களின் விருப்பத்திற்குரியவருமான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வரும் இயக்குநரான எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன், பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், பவெல் நவகீதன், ரமேஷ் இந்திரா, பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிரத்யேக காணொளி , கிளர்வோட்டம் , முதல் பாடல் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது.
அத்துடன் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலையும் தூண்டியது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சீயான் விக்ரமின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான் ‘விமர்சன ரீதியாக பாரிய வரவேற்பை பெற்றாலும், வசூலில் வெற்றி பெறவில்லை. இதனால் வணிக ரீதியான வெற்றியை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சீயான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என ரசிகர்களும், திரையுலகினரும் உறுதியாக அவதானிக்கிறார்கள்.