சென்னை: வரும் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் டிஜிபிக்கள் அபாஷ் குமார் மற்றும் அமரேஷ் புஜாரிக்கான பிரிவு உபச்சார விழா நேற்று நடைபெற்றது. இதில், டிஜிபி சங்கர் ஜிவால் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கி இருவரையும் பாராட்டினார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக அபாஷ் குமார் பணியாற்றி வருகிறார். இவரது பணி காலம் இந்த மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. பிஹார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபாஷ் குமார் பாட்னாவில் 07.03.1965-ல் பிறந்தார். பி.ஏ பட்டப்படிப்பு முடித்திருந்த அவர் தமிழக கேடரில் 1990-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார்.
மதுரை காவல் ஆணையர், தென் மண்டல ஐஜி, மேற்கு மண்டல ஐஜி, தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றினார். தற்போது தீயணைப்புத்துறை இயக்குநராக பணியில் உள்ளார். தமிழ், இந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கைதேர்ந்தவர். பல்வேறு பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
இதேபோல், பணி ஓய்வு பெற்ற டிஜிபி அமரேஷ் புஜாரி ஒடிசாவை சேர்ந்தவர். 1965 மார்ச் 04-ல் பிறந்த அவர் 1991-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக கேடரில் தேர்வு செய்யப்பட்டார்.
கோவை காவல் ஆணையர், மத்திய உளவு பிரிவு, தமிழக போலீஸ் அகாடமி இயக்குநர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தற்போது தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக உள்ளார். மேலும், குடியரசு தலைவர் விருதை 2 முறை பெற்றுள்ளார். முதல்வர் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், பணி ஓய்வுபெறும் அபாஷ் குமார் மற்றும் அமரேஷ் புஜாரியின் பிரிவு உபசார விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், டிஜிபி சங்கர் ஜிவால் கலந்து கொண்டு இருவருக்கும் நினைவு பரிசை வழங்கி வாழ்த்தினார். இதில், இந்நாள் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்களுக்கு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.