1
குண்டுகள் பாய்ந்த தேசம்-அங்கே
நாடோடிகளாய் திரிந்த
தமிழர்கள் நாம்
சொல்லி விட வார்த்தைகள் இல்லை -எம்
சொல்லணாத் துயரங்களை
கேட்டிடவும் இப்போது
நாதியில்லை
பாய்ந்தோம் புரண்டோம் ஒழிந்தோம்
சன்னங்களின் குறிகள் தப்பவில்லை
வலிகள் பல உணர்ந்தோம்
வல்வை மகன் வழி
தவறவில்லை
கடல் கரையிலும் தாகம்
தீர்த்தோம் -ஆனாலும்
அடங்கிடவில்லை நெஞ்சறு
தாகங்கள்
புயல்கள் போல பாய்ந்தது வரிகள்
எமக்காய் துடித்திறந்தது பல
வரிகள்
வீழ்ந்தாலும் விடவில்லை
தாகங்கள் கண்ணீராய் சொரிகிறது
வான் சென்ற வரிகள்
சன்னங்கள் கெளவ்விய தேகங்களும்
சீழ்பட்டு வழிந்தது இருந்தாலும்
இடம் கொடுக்கவில்லை
வரிகளை கழற்றி விட
விண்ணுலகம் வியந்த தேசத்தின் நடுவே
பல்தேச ஆயுததரிகள் அடைகாக்க
முகாம்கள் முளைக்கத் தொடங்கிற்று
மார்பறுந்த முலையில் பால் அருந்திடும்
குழந்தையின் மூச்சுமட்டும் மிச்சம்
எங்கோ ஓர் தேசத்தில் முளைத்த
குண்டுகள் காவுகொண்ட தாயின்
கச்சையோடு அறுத்த மார்புகள்
கூச்சமில்லாது துடித்தது
வந்தோரால் வலியவனாகி விட்டான்
நம் குல எதிரி -அவன்
பாசறைகள் மட்டும் சாராய போத்தல்களால்
நிரம்பிவழிந்தது
ஓடும் தமிழ் மக்களின் செங்குருதி
அவன் கால்களை நனைத்தது கூட
தெரியாத போதை
இருந்தாலும் கொடூரன் தானே
போதையில் சிவந்திட்ட கண்களுக்கு
தெரியவில்லை ஒட்டிய குருதியின்
இரங்கல்கள்
மண்டியிட்ட பெண்களும் அவனுக்கு
தொட்டிட ஊறுகாய் ஆனது
கைகளை உயர்த்தி கும்பிட்ட – எம்
குலதாயவள் பெண்குறியுடைத்து
துப்பாக்கி முனை செலுத்தி
வெடித்தழித்த – அவன்
வேடிக்கையல்லவா
எப்படி மறப்பது
வன்புணர்ந்து மார்பறுத்து
கடல் கரையினில் வீசப்பட்ட
என் தேச பெண்களின் நீதி
யாரிடம் கேட்டிடுவோம்
என் அண்ணாக்களின் கைகளை கட்டி
நெற்றியில் சுட்ட கொடூரம்
அறிந்திட்ட தேசமிது கலங்கித்துடிக்கிறது
ஆண்டாண்டு காலம்
படைக்கட்டி வந்த பல்லாயிரம்
கொடூரர்கள் மேவிய தேசமிது
இன்னும் அவன் தேச வாடை
வீசத்தான் செய்கிறது
உன் குறியில் தப்பித்த மறவன்
நான் நாதியற்ற தேசத்தில்
புதைகுழியின் நடுவே விட்டுச்
செல்ல காரணம் என்னவோ
இருந்தாலும் என்புகளாய் போராடும்
என் தேசத்தில் அவர்களுக்காய்
மீண்டும் போராடுவேன் – என்
மார்பறுந்த தேசத்தில்.
கேசுதன்