சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கே 150 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 140 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்கிறது.
‘ஃபெஞ்சல்’ புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தற்போது இன்று மாலை கரையைக் கடக்கலாம் என்று கணித்துள்ளது. புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக அடுத்த சில மணி நேரங்களுக்கு வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கணித்துள்ளது. மரக்காணம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கல் வீட்டிலிருந்தே பணி புரிய அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை – பழைய மகாலிபுரம் சாலையில் இன்று மதியம் தற்காலிகமாக பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை, புறநகர்ப் பகுதிகளில் இன்று நகைக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கடலோர மாவட்டங்களைப் போல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினத்தில் 2,229 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 470 பேர் 6 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கத்திவாக்கத்தில் 68.4 மில்லி மீட்டர் மழை.. நவ 29 காலை 6 மணி தொடங்கி இன்று நவ.30 காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சென்னையில் 34.92 மில்லிமீட்டர் அளவு மழை பெய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 68.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக வேளச்சேரியில் 17.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அறிவிப்பு: சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைய அறிவிப்பில், மெட்ரோ ரயில் சேவைகள் எவ்வித தடை, தாமதமும் இன்றி வழக்கம் போல் இயங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிலையப் படிகள், லிஃப்ட்களைப் பயன்படுத்தும்போது பயணிகள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். கோயம்பேடு, செயின்ட் தாமஸ் மவுன்ட், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உதவிக்கு 1860 425 1515 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், பெண்களுக்கான ஹெல்ப்லைன் 155370 என்று அறிவித்துள்ளது.
18 விமானங்கள் ரத்து.. புயல் காரணமாக சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. சென்னையில் இண்டிகோ விமான நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.