• Sun. Apr 27th, 2025

24×7 Live News

Apdin News

மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்காமல் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்! – தமிழ் மக்களிடம் சார்ள்ஸ் வேண்டுகோள்

Byadmin

Apr 27, 2025


“தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய அடையாளங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக எமது வரலாற்றை நாங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பது எமக்குக் காலம் தந்த கடமையாக உள்ளது. எனவே, தமிழ் மக்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்காது வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாட்டான் பிரதேச வேட்பாளர்களை ஆதரித்து நானாட்டான் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்ட இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. சார்ள்ஸ் மேலும் உரையாற்றுகையில்,

“மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் தமிழரசுக் கட்சியில் இருக்கின்றார்கள். அவர்களுடைய எண்ணம் எல்லாம் நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதே.

மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை உள்ளிட்ட நான்கு சபைகளையும் நாங்கள் கைப்பற்றுவதற்கு உழைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

எனவே, தமிழ் மக்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்காது வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து தமிழர்களாக நாங்கள் தொடர்ந்து இந்தப் பிரதேசத்தில் எமது அடையாளங்களுடன் வாழ வேண்டும் .

இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ன செய்தது என்று பலருக்குக் கேள்வி உள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழர்களுடைய கட்சி என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒப்பிட முடியாது. நாட்டின் ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இருக்கட்டும். அது வேறு. இது எங்களுடைய உள்ளூர் அரசு. இது தமிழரசு. இது எமது ஆட்சி. எமது ஆட்சியையும், அடையாளத்தையும் நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது.

நாங்கள் தமிழர்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்காது தொடர்ச்சியாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே, நானாட்டான் பிரதேச சபை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துடன் செயற்பட வேண்டும். இதற்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.” – என்றார்.

The post மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்காமல் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்! – தமிழ் மக்களிடம் சார்ள்ஸ் வேண்டுகோள் appeared first on Vanakkam London.

By admin