பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், விநாயக் ஹோகடே
- பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
-
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வியாழக்கிழமையன்று (ஜூலை 31) சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் நடந்த 7/11 குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றமும் ரத்து செய்தது.
முன்னதாக, நான்டெட் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டனர்.
2025 ஆம் ஆண்டில் இந்த மூன்று முக்கியமான வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதன் மூலம், ‘இந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணமான குற்றவாளிகள் எப்போது பிடிபடுவார்கள்?’ என்ற கேள்வி எழுகிறது.
நீதிமன்ற தீர்ப்புகளும் பதில் இல்லாத கேள்விகளும்
மூன்று குண்டுவெடிப்புகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா உளவுத்துறையின் முன்னாள் கூடுதல் துணை ஆணையர் ஷிரிஷ் இனாம்தாரிடம் பேசினோம்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்ற காரணத்தால் விடுவிக்கப்பட்டார்களா, அல்லது போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்களா என்ற கேள்வி முக்கியமானது என்று ஷிரிஷ் இனாம்தார் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
“இரண்டிற்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால், விசாரணை அமைப்புகள் ஏன் வலுவான ஆதாரங்களை சேகரிக்கவில்லை? அல்லது ஏன் அவர்கள் அதை நீதிமன்றத்தில் முறையான முறையில் சமர்ப்பிக்கவில்லை?” என்ற கேள்வி எழுகிறது.
“மும்பை மற்றும் மாலேகான் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்ட நிலையில், சாதாரண மக்களின் மனதில் எஞ்சியிருக்கும் ஒரே கேள்வி ‘நீதி’ என்ற சொல் இன்னும் இருக்கிறதா இல்லையா என்பதுதான்?” என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.
மும்பை, மாலேகான் மற்றும் நான்டெட்: மூன்று குண்டுவெடிப்பு வழக்குகள்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு:
முதலில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குறித்துப் பார்க்கலாம்.
செப்டம்பர் 29, 2008 அன்று, மாலேகானில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் மோட்டார் சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் 7 பேரைக் கொன்றன. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை முன்னதாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) விசாரித்தது, ஆனால் 2011 ஆம் ஆண்டில், வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் பாஜக தலைவர் பிரக்யா தாகூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித், மேஜர் ரமேஷ் உபாத்யாய் (ஓய்வு பெற்றவர்), அஜய் ரஹிர்கர், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்னி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜூலை 31, 2025 அன்று விடுவிக்கப்பட்டனர்.
வேண்டுமென்றே விசாரணையில் தவறுகளைச் செய்ததாகவும், போதுமான ஆதாரங்களை வேண்டுமென்றே சேகரிக்கவில்லை என்றும் வழக்கறிஞர் நிதின் சத்புடே, விசாரணை முகமையின் மீது குற்றம் சாட்டுகிறார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பொது நல வழக்குத் தொடரப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு:
மாலேகான் குண்டுவெடிப்புக்கு முன்பு, ஜூலை 11, 2006 அன்று, மும்பையில் 7 உள்ளூர் ரயில்களில் 7 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
ஜூலை 11, 2006 அன்று நடந்த இந்த கொடூரமான தாக்குதலில் 189 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 824 பேர் காயமடைந்தனர்.
மும்பையில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களில் இதுவும் ஒன்று.
‘7/11 குண்டுவெடிப்பு’ என்று இந்தத் தாக்குதல் மக்களிடையே அறியப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
2015 ஆம் ஆண்டு, குண்டுவெடிப்பு தொடர்பாக, சிறப்பு அமர்வு நீதிமன்றத்தால், ஐந்து பேருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பதின்மூன்றாவது குற்றவாளியான அப்துல் வாஹீத் 2015 இல் விடுவிக்கப்பட்டார்.
தண்டனை பெற்ற 12 குற்றவாளிகளில் ஒருவரான கமல் அகமது முகமது வக்கீல் அன்சாரி 2021 இல் இறந்தார்.
தாக்குதல் நடந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகும், செஷன்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகும், ஜூலை 21, 2025 அன்று 12 குற்றவாளிகளின் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஆனால், இந்த வழக்கின் தீர்ப்பை ஒரு நீதித்துறை முன்னுதாரணமாகக் கருதி, உச்ச நீதிமன்றம் அதை உடனடியாக அமல்படுத்த வேண்டாம் என்று தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
நான்டெட் குண்டுவெடிப்பு வழக்கு:
ஏப்ரல் 6, 2006 அன்று, நான்டெட் நகரின் பட்பந்தரே நகர் பகுதியில் உள்ள நரேஷ் ராஜ்கொண்ட்வாரின் வீட்டில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.
அக்குண்டுவெடிப்பில் நரேஷ் ராஜ்கோந்த்வார் மற்றும் ஹிமான்ஷு பான்சே ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மரோதி வாக், யோகேஷ் தேஷ்பாண்டே, குருராஜ் டோப்திவார் மற்றும் ராகுல் பாண்டே ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
ஆரம்பத்தில், அந்த வெடிப்புச் சம்பவம் பட்டாசுகளால் ஏற்பட்டதாக நம்பப்பட்டது. ஆனால் மறுநாள் வீட்டைச் சோதனையிட்ட பிறகு, வழக்கு ஏடிஎஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
பட மூலாதாரம், AFP
பின்னர் விசாரணை ஏடிஎஸ்-இலிருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பூர்ணா, பர்பானி மற்றும் ஜல்னாவில் நடந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் மற்றும் இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை கூறியிருந்தது.
இந்த வழக்கில், சிபிஐ 2,000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்தது, அதில் 12 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாகக் குறிப்பிடப்பட்டனர்.
பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 4, 2025 அன்று நான்டெட் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
ஆனால், நரேஷ் ராஜ்கொண்ட்வாரின் வீட்டில் குண்டுவெடிப்பு நடந்ததை சிபிஐயால் நிரூபிக்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து, அந்த இடத்தில் பட்டாசுகள் வெடித்ததால் தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்ற கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது.
கேள்விக்குறியாகும் ஏடிஎஸ் விசாரணை
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை, முன்னதாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) விசாரித்தது.
ஆனால், 2011 ஆம் ஆண்டில், இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தேசிய புலனாய்வு அமைப்பு (NIA)-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கையும் ஏடிஎஸ் விசாரித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (MCOCA) கீழ் விசாரிக்கப்பட்டனர்.
அதேபோல், நான்டெட் குண்டுவெடிப்பு வழக்கும் ஆரம்பத்தில் ஏடிஎஸஸிடம் தான் ஒப்படைக்கப்பட்டது.
சுருக்கமாகச் சொன்னால், 2025 ஆம் ஆண்டில் நடந்த இந்த மூன்று முக்கியமான வழக்குகளும் அம்மாநில பயங்கரவாதத் தடுப்புப் படையால் (ATS) விசாரிக்கப்பட்டவை.
இந்நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பொது நல வழக்கு தொடரப்போவதாக வழக்கறிஞர் நிதின் சத்புடே தெளிவுபடுத்தியுள்ளார்.
“விசாரணை அமைப்பு வேண்டுமென்றே விசாரணையில் தவறுகளைச் செய்துள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவவும், காப்பாற்றவும், பாதுகாக்கவும் போதுமான ஆதாரங்களை வேண்டுமென்றே சேகரிக்கவில்லை. புலனாய்வு நிறுவனம் குறைபாடுள்ள குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது,” என்று வழக்கறிஞர் நிதின் சத்புடே கூறுகிறார் .
“குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் காப்பாற்ற, ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் முறையான விசாரணை நடத்தாத காவல்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த புலனாய்வு முறைக்கு எதிராக நான் பொது நல வழக்கு தொடருவேன்” என்றும் சத்புடே கூறியுள்ளார்.
இந்த வழக்குகள் தொடர்பான விசாரணையைப் பற்றி பேசிய ஷிரிஷ் இனாம்தார், “இதுபோன்ற முக்கிய வழக்குகளில் சவால் என்னவென்றால், சாட்சிகள் கொடுக்கும் வாக்குமூலம் வலுவாக இருக்க வேண்டும். ஆனால், காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் மாற்றியோ, மறுத்தோ விட்டால், அந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சேகரிக்கப்பட்ட மற்ற சூழ்நிலை ஆதாரங்கள் தானாகவே செல்லாததாகி விடும்” என்கிறார்.
“இந்த வழக்குகளிலும், சாட்சிகள் கொடுத்த சாட்சியங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்ததாக காணப்படுகிறது. சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டன. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதைத் தவிர நீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை.”
மறுபுறம், 2015-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட அப்துல் வாஹீத், “குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலங்களை பெற, போலீசார் ‘மூன்றாம் தர’ முறைகளை பயன்படுத்துகிறார்கள்” என குற்றம் சாட்டுகிறார்.
7/11 குண்டுவெடிப்பு வழக்கில் தனது வாக்குமூலம் கட்டாயப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக அப்துல் கூறியுள்ளார்.
விசாரணையின் போது அரசு வழக்கறிஞர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
பிபிசியிடம் பேசிய அவர், “ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பங்களைப் பெற இந்த சித்திரவதை பயன்படுத்தப்பட்டது என்றும் தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை, அவர்கள் இதை மறுத்து வருகின்றனர்” என்று கூறுகிறார்.
“ஒப்புதல் வாக்குமூலம் தன்னார்வத்தோடும், திறந்த சூழலிலும் வழங்கப்பட வேண்டும். அது தன்னிச்சையாக வழங்கப்பட வேண்டும். மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரும் உறவினர்களும் வாக்குமூலம் அளிக்கும் போது உடனிருக்க வேண்டும். அப்படி எதுவும் இங்கு நடக்கவில்லை.”
நான்டெட் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் போது வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
ஆனால், சிபிஐ-யால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. எனவே, வலுவான ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மறுபுறம், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்த தீர்ப்புக்குப் பிறகு, முன்னாள் ஏடிஎஸ் தலைவர் கே.பி. ரகுவன்ஷி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசியபோது, “நாங்கள் மிகவும் வலுவான வழக்கை நடத்தியுள்ளோம் என்று நினைக்கிறேன். இந்த வழக்கின் அடிப்படையில்தான் விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “விசாரணையை முறையாக நடத்தி போதுமான ஆதாரங்களை சேகரித்துள்ளோம் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதனால்தான் விசாரணை நீதிமன்றம் முன்னதாகவே குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது” என்றும் அவர் கூறினார்.
விசாரணையில் என்ன தவறுகள் செய்யப்பட்டிருக்கலாம்?
இந்த வழக்குகளின் விசாரணையில் சரியாக என்ன தவறு நடந்தது என்பதை ஷிரிஷ் இனாம்தார் விளக்குகிறார்.
“விசாரணை முறையாக நடக்கவில்லை என்று நான் நேரடியாக சொல்ல மாட்டேன். ஏனெனில், ஒரு விசாரணையை முறையாக நடத்துவது, அவ்வளவு சுலபம் அல்ல. அது நாம் சொல்வதை விட கடினம்” என்று அவர் கூறுகிறார்.
“நமது சட்டத்தின் கொள்கைப்படி, நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது. குற்றம் சாட்டப்பட்டவரின் ஒரே வேலை, நீதிமன்றத்தின் மனதில் ஒரு சிறிய சந்தேகத்தை உருவாக்கி, சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்குவதுதான். இந்த விசாரணையில் ஓட்டைகளைக் கண்டறிவது எளிது” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இது தவிர, சிறப்புச் சட்டங்களின் கீழ் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் செயல்முறையையும் அவர் குறிப்பிடுகிறார்.
தடா, மோகா, யுஏபிஏ போன்ற சிறப்பு குற்றவியல் சட்டங்கள் விசாரணை அதிகாரி முன் செய்யப்படும் வாக்குமூலத்தை முன்னிறுத்துகின்றன.
“குற்றம் சாட்டப்பட்டவருக்கு அத்தகைய ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரிக்க உரிமை உண்டு என்றும் இந்த சட்டங்கள் கூறுகின்றன. அத்தகைய ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டால், அதன் அடிப்படையில், சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிடும். எனவே, முழு ஆதாரங்களும் சரிந்துவிடும், அதுதான் இந்த வழக்குகளில் நடந்துள்ளது” என்று ஷிரிஷ் இனாம்தார் கூறுகிறார்.
விசாரணை மற்றும் நீதித்துறை செயல்முறைக்கு ஏன் அதிக நேரம் தேவைப்படுகிறது?
இந்த மூன்று குண்டுவெடிப்புகளும் 2006 மற்றும் 2008 க்கு இடையில் நடந்தன.
அதாவது, இந்த சம்பவங்கள் நடந்து, குறைந்தது 16 முதல் 18 ஆண்டுகள் கடந்துவிட்டன.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அப்துல் வாஹித், 2006-ல் கைது செய்யப்பட்டு 2015-ல் விடுதலை செய்யப்பட்டார்.
பட மூலாதாரம், Getty Images
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வளவு நீண்ட காலம் இருந்தபோதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை.
இத்தனை முக்கியமான வழக்குகளின் நீதித்துறை செயல்முறைக்கு ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறது? மிகக் குறுகிய காலத்தில் இதைச் செய்ய முடியுமா? இந்த சிறப்புச் சட்டங்களின் விதிகளை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க முடியுமா?
போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்த ஷிரிஷ் இனாம்தார், அமைப்புக்கு அதிக அதிகாரம் வழங்காமல், மனித உரிமைகளை மீறாமல் இந்தச் சட்டங்களை எவ்வாறு மிகவும் பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பதை பரிசீலிக்க வேண்டும் என்கிறார்.
(கூடுதல் அறிக்கை: அல்பேஷ் கர்கரே)
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு