இன்று யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் பதில் நீதிபதி எஸ்.கணதீபன் முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி ஜனவரி 7ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் எதிராளிகளாக மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் எம்.பி., கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் மற்றும் கட்சியின் நாடாளுமன்றத் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா நீடிக்க முடியுமா என்பது தொடர்பான விடயம் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட இருக்கையில் இந்த வழக்கு நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மத்திய குழு கூட்டத்தில் மாவை சேனாதிராஜாவின் தலைமைப் பதவிக்கு பங்கம் ஏற்படுத்தும் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இருப்பதற்கான இடைக்காலத் தடை உத்தரவு வழங்கவும் இந்த வழக்கில் கோரப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.
யாழ். மாவட்ட நீதிபதி சதீஸ்வரன் கொழும்பில் சட்டத்துறை சார்பாக உத்தியோகபூர்வ விடயங்களில் பங்குபற்றச் சென்றிருப்பதால் இன்றும் நாளையும் பதில் நீதிபதி முன்னிலையில் வழக்குகள் எடுக்கப்பட்டு திகதி இடப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இந்த வழக்கும் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது வரும் திங்கட்கிழமை முதல் நீதிமன்றங்களுக்கு வருடாந்த இறுதி விடுமுறை இருப்பதால் புதுவருடத்தில் முதலாவது நீதிமன்ற வேலை நாளான ஜனவரி 7ஆம் திகதிக்கு பதில் நீதிவான் வழக்கை ஒத்திவைத்தார்.