படக்குறிப்பு, திப்பிரி திருப்பதி என்கிற தேவ் ஜிகட்டுரை தகவல்
மாவோயிஸ்ட் தலைவர் திப்பிரி திருப்பதி என்கிற தேவ்ஜி தெலங்கானா காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் இருந்து வரும் தகவல்களின்படி, மாவோயிஸ்ட் உயர்மட்டத் தலைவர் தேவ்ஜியுடன், மல்லா ராஜிரெட்டி என்கிற சங்கிராமும் சரணடைந்துள்ளதாக சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யிடம் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா ஏஎன்ஐ-யிடம் கூறுகையில், “பசவராஜ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிறகு நக்சலைட் கமாண்டராகப் பொறுப்பேற்ற தேவ்ஜி, தெலங்கானா காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தெலங்கானாவிலிருந்து தகவல் கிடைத்து வருகிறது. சத்தீஸ்கரில் தீவிரமாக இருந்த மல்லா ராஜிரெட்டி என்கிற சங்கிராமும் சரணடைந்துள்ளதாகத் தெரிகிறது. இது மகிழ்ச்சிக்குரிய விஷயம். 2026 மார்ச் 31-க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய கூற்றை நிறைவேற்றும் நோக்கில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்றார்.
இந்த தகவலை உறுதிப்படுத்துவதற்காக பிபிசி தெலங்கானா காவல்துறையைத் தொடர்பு கொண்டது. அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும், தெலங்கானா காவல்துறைத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி, “தேவ்ஜியுடன் மேலும் சில மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்,” என்று பிபிசியிடம் கூறினார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
முன்னதாக மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த நம்பால கேசவராவ் என்கிற பசவராஜ், கடந்த ஆண்டு மே மாதம் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பிறகு தேவ்ஜி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
திப்பிரி திருப்பதி என்கிற தேவ் ஜி யார்?
மாவோயிஸ்ட் கட்சி கட்டமைப்பின்படி, கட்சியின் உயர்மட்டத் தலைவராக இருப்பவர் திப்பிரி திருப்பதி என்கிற தேவ் ஜி. அவர் தற்போது மத்தியக் குழுவின் பொதுச் செயலாளராக உள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நம்பால கேசவராவ் என்கிற பசவராஜ் கொல்லப்பட்ட பிறகு, தேவ்ஜி பொறுப்பேற்றார்.
தற்போதைய ஜகித்யால் மாவட்டத்தைச் சேர்ந்த கோருட்லாவில் உள்ள திப்பிரி திருப்பதியில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த இவர், 80-களில் கரீம்நகர் எஸ்ஆர்ஆர் கல்லூரியில் பி.எஸ்சி படிக்கும் போது அரசியல் பக்கம் திரும்பினார்.
கல்லூரியில் படிக்கும் போது மாணவர் சங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அவர் தலைமறைவானார்.
பின்னர், மாவோயிஸ்ட் கட்சியில் படிப்படியாக உயர்ந்தார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
தண்டகாரண்யா காடுகளில்…
திருப்பதி, கரீம்நகர் பகுதியில் தீவிர மாணவர் அமைப்பின் ஒரு பகுதியாக இருந்து செயல்பட்டு வந்தார்.
“1981-82 இல், ‘ரைது குல்லி சங்கம்’ ஒரு பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அது அந்த நேரத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டமாக இருந்தது. அதை இவர்தான் ஏற்பாடு செய்தார். பின்னர், 1983-84 இல் கட்சி அவரை தண்டகாரண்யத்துக்கு அனுப்பியது,” என்று மாவோயிஸ்ட் கட்சியில் இருந்து விலகிய கரீம்நகரைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அவர் கரீம்நகர் நகரத்திலும் பின்னர் சிரோஞ்சா பகுதியிலும் கட்சி அமைப்பாளராகப் பணியாற்றினார். திருப்பதி கட்ச்ரோலியில் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு அவர் ஒரு பிரிவு குழு உறுப்பினராக பணியாற்றினார்.
பின்னர், 1993-94 காலகட்டத்தில் தண்டகாரண்ய சிறப்பு மண்டலக் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
90-களின் நடுப்பகுதி வரை கட்சி கட்டமைப்பு பணிகளில் இருந்த தேவ்ஜி, பின்னர் ஆயுத பிரிவில் கவனம் செலுத்தினார். அன்றிலிருந்து அவர் கட்சியின் ஆயுதப் பிரிவிலேயே இருந்து வருகிறார்.
மாவோயிஸ்ட் கட்சி தனது முதல் பிளாட்டூனை 1996 வாக்கில் தண்டகாரண்யத்தில் உருவாக்கியது. அது ஒரு ஆயுதக்குழு கட்டமைப்பாகும். திருப்பதி அதன் முதல் தளபதியாகப் பணியாற்றினார்.
பின்னர், 2001-இல் அவர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரானார். அந்த நேரத்தில் மத்தியக் குழுவின் மிக இளைய உறுப்பினர்களில் ஒருவராக அவர் இருந்தார். மத்தியக் குழுவுடன் இணைந்து, தேவ்ஜி மத்திய ஆயுதக்குழு ஆணையத்தின் உறுப்பினராகவும் ஆனார்.
மாவோயிஸ்ட் கட்சியில் சஞ்சீவ், சேத்தன், சுதர்ஷன் மற்றும் ரமேஷ் போன்ற பெயர்களில் அவர் பணியாற்றினார்.
“2004-இல் பீப்பிள்ஸ் வார் குழு மாவோயிஸ்டாக மாறிய பிறகும், அவர் மத்தியக் குழுவிலும் மத்திய ஆயுதக்குழு ஆணையத்திலும் தொடர்ந்து இருந்தார். பசவராஜ் மத்திய ஆயுதக்குழு ஆணையத்தின் தலைவராக இருந்தபோது, திருப்பதி அதில் முக்கியப் பங்கு வகித்தார். 2018-இல் பசவராஜ் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, தேவ்ஜி மத்திய ஆயுதக்குழு ஆணையத்தின் தலைவரானார்,” என்று முன்னாள் மாவோயிஸ்ட் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், NIA
தாக்குதல் நடவடிக்கைகள்
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட முக்கியத் தாக்குதல்களில் தேவ்ஜியின் பெயர் முக்கியமாக இடம்பெற்றிருந்தது.
மாவோயிஸ்ட் ஆயுத பயிற்சி மற்றும் நடவடிக்கைகளில் தேவ்ஜி முக்கியப் பங்கு வகித்ததாகக் கட்சியை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் கூறுகின்றனர்.
பிஎல்ஜிஏ (PLGA – People’s Liberation Guerrilla Army) உருவாக்கத்திற்குப் பின்னாலும் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தேசிய புலனாய்வு முகமையின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் தேவ்ஜியின் பெயர் உள்ளது. அவரது பெயரில் வெகுமதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.