மாஸ்க் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : த ஷோ மஸ்ட் கோ ஆன் & பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்
நடிகர்கள் : கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா, பவன், சார்லி, ரமேஷ் திலக், ‘கல்லூரி’ வினோத், ரெடின் கிங்ஸ்லி , ‘ஆடுகளம்’ நரேன், சுப்பிரமணிய சிவா மற்றும் பலர்.
இயக்கம் : விகர்ணன் அசோக்
மதிப்பீடு : 2.5/5
தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் பூமி( ஆண்ட்ரியா) – தனியார் துப்பறியும் நிபுணராக பணியாற்றும் வேலு( கவின்) – அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தனி கட்சி தொடங்கும் அமைச்சர் மணிவண்ணன்( பவன்) – சமூகத்திற்கு நன்மை செய்ய விரும்பாத இந்த மூன்று கதாபாத்திரங்களுக்குள் இடையே நடைபெறும் ஆடு புலி ஆட்டம் தான் படத்தின் கதை.
கதையின் நாயகனான வேலு தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்துகிறார். ஒரு குழந்தைக்கு தந்தையாக இருந்தாலும் ரதி ( ருஹானி சர்மா) என்ற பெண்மணியுடன் கள்ளக்காதலில் ஈடுபடுகிறார். இருவரும் நெருக்கமாக பழகும் காட்சியின் போது, ‘பாதுகாப்பு உறை’ ஒன்றினை வாங்குவதற்காக பூமி நடத்தி வரும் சுப்பர் மார்க்கெட்டுக்கு நுழைகிறார். அங்கு அரசியல்வாதியான மணிவண்ணனின் சட்டத்திற்கு புறம்பான இந்திய மதிப்பில் 440 கோடி ரூபாய் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை அறிந்த ஒரு கும்பல்- நடிகவேள் எம் ஆர் ராதாவின் முகமூடியை பாவித்து கொள்ளை அடிக்கிறது. இந்த கும்பல் பணய கைதியாக பிடித்து வைத்திருக்கும் பொதுமக்களில் வேலுவும் இடம் பெறுகிறார். அந்த கும்பல் பணத்தை கொள்ளை அடித்து சென்ற பிறகு தன் கள்ளக்காதலை தொடர்வதற்காக வேலு, ரதியின் வீட்டிற்கு செல்ல .. அங்கு அவருடைய கணவர் வந்துவிட.. அந்த களேபரமான தருணத்தில் வேலு தப்பிக்க நினைக்க.. அங்கு சுப்பர் மார்க்கெட்டில் காணப்பட்ட எம் ஆர் ராதாவின் முகமூடி அங்கு இருக்க.. அதிர்ச்சி அடைகிறார் வேலு. அத்துடன் அந்தப் பணத்தை களவாடிக் கொண்டு தன் இருப்பிடத்திற்கு வருகிறார். தன்னுடைய காவல்துறை நண்பர்- சட்டத்தரணி நண்பர் – ஆகியோருடன் பணம் கிடைத்த விடயத்தை பகிர்ந்து கொள்ள.. பணத்தை பறிகொடுத்த பூமி… இந்தப் பணத்தை கண்டுபிடித்து தருமாறு துப்பறியும் நிபுணரான வேலுவை அணுக ..அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் விறுவிறு திரைக்கதை.
தற்போதுள்ள சமூகத்தில் வாழும் மக்களிடத்தில் தனிநபர் ஒழுக்கம் பாரிய அளவில் குறைந்துவிட்டது என்பதை இந்த படம் பிரதிபலிப்பதால் இதனை ஒரு பிரிவு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் அறத்துடன் வாழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களும்.. குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்களும்.. இதுபோன்ற கதைகள் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என கவலை கொள்கிறார்கள்.
440 கோடி ரூபாய் கொள்ளை அடித்ததன் பின்னணி சுவாரசியமாக இருப்பது ஆறுதல். அதிலும் உச்சகட்ட காட்சியில் இயக்குநர் வைத்திருக்கும் டிவிஸ்ட் சிறப்பு.
வில்லத்தனமும், கடுகளவு மனிதாபிமானமும் கொண்ட வேலு கதாபாத்திரத்தில் நடிகர் கவின் கச்சிதமாக பொருந்துகிறார். எமோஷனல் காட்சிகளில் நடிப்பை வெளிப்படுத்தவும் தவறவில்லை. ஆண்ட்ரியா உடனான குளோசப் காட்சியில் நான் ஒரு ‘நட்சத்திர கலைஞர்’ என்பதை நிரூபிக்கிறார்.
ஆபாசமான கன்டென்டுகளும், புகைப்படங்களும் பிரதானமாக இடம் பிடித்திருந்தாலும்.. டைட்டிலில் ஆன்மீக பெயரைக் கொண்ட வலைதளம் போல்… சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டே சமூக சேவகி என்ற நல்ல பெயருடன் வலம் வரும் பூமி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஆண்ட்ரியா… தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரட்டுகிறார்.
அரசியல்வாதியாக நடித்திருக்கும் பவன் அந்த கதாபாத்திரத்திற்காக ஆடையின்றி ஆடியிருப்பது… அவருடைய ஈடுபாட்டை தான் காட்டுகிறது.
கவினின் மாமனாராக நடித்திருக்கும் சார்லி- சட்டத்தரணியாக நடித்திருக்கும் ரமேஷ் திலக் – காவலராக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத் – கவினின் தந்தையாக நடித்திருக்கும் சந்திரன் – தங்களின் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து ரசிகர்களை வசீகரிக்கிறார்கள்.
கவினை திருட்டுத்தனமாக காதலிக்கும் ரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ருஹானி சர்மாவும் நடிப்பில்… நடனத்தில்… பாஸ் மார்க் வாங்குகிறார்.
முதல் பாதியில் எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறது என துல்லியமாக அவதானிக்க தடுமாறும் பார்வையாளர்கள்… இரண்டாம் பாதியில் அதி விரைவாக செல்லும் திரைக்கதையால் இயக்குநர் சொல்ல விரும்புவதை பார்ப்போம் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். இதனால் பல லாஜிக் மீறல்கள் காணாமல் போய்விடுகின்றன.
முதல் பாதியில் இடம்பெறும் ‘கண்ணு முழி..’ எனும் பாடல் ரசிகர்களை உற்சாகமாக நடனமாட வைக்கிறது. ஆனால் படத்தின் ஒலி கலவை பொறியாளரின் கவனமின்மை காரணமாக பல உரையாடல்கள் காதை வந்தடையவில்லை. இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் பின்னணி குரல் விவரணம் நன்றாக இருந்தாலும்.. பல தருணங்களில் தொழில்நுட்ப கலைஞர்களின் குளறுபடியால் எதிர்மறை விமர்சனத்தை எதிர்கொள்கிறது.
‘நான் கெட்டவன் தான்.. ஆனா எச்ச இல்ல’ என்ற உரையாடல் கவினின் கதாபாத்திர வடிவமைப்பை விவரிக்கும் வகையில் இருந்தாலும்… கெட்டவன் கெட்டவன் தான். அதில் என்ன கொஞ்சம் கெட்டவன்… அதிகம் கெட்டவன்…! என்ற பாகுபாடு. இதற்கு இயக்குநர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
இளையராஜா இசையில் வெளியான ‘ராஜ ராஜ சோழன் நான் தான்…’ என்ற என்ற பாடலை பயன்படுத்தி, அமைக்கப்பட்டிருக்கும் காட்சி…. ஆபாசத்தை அதிகமாக விரும்பும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து.
வேலுவின் மனைவி கயல் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகையை ஒரு புகைப்படமாகக்கூட திரையில் இடம்பெறாமல் செய்தது ஏன்? புத்திசாலித்தனமா அல்லது …?
ஆர் .டி . ராஜசேகரின் ஒளிப்பதிவும், ஜீ. வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் படத்தை ரசிக்க வைக்கிறது.
பேராசை பிடித்த சுயநலவாதிகளை அறத்துடன் வாழும் எளிய மக்கள் சாமர்த்தியமாக எதிர்க்கத் தொடங்கினால்.. என்ன ஆகும் ? என்பதை விவரித்திருக்கும் இந்த முகமூடி – ஜஸ்ட் லைக் தட் பாஸிங் க்ளவுட்ஸ்.
மாஸ்க் – ரிஸ்க்
The post மாஸ்க் | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.