பட மூலாதாரம், Getty Images
“ஏற்கெனவே புதைக்கப்பட்ட ஒருவரை நான் அடக்கம் செய்வது இதுவே முதல் முறை” என்று மிக் மீனியின் இறுதிச் சடங்கை நடத்திய திருத்தந்தை கூறியதாக மிக் மீனியின் மகள் மேரி தெரிவித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான “You can’t eat roses, Mary!” என்ற புத்தகத்தில், தனது தந்தை மிக் மீனியின் இறுதிச்சடங்கின் போது ஒரேயொரு உள்ளூர் பத்திரிகையாளர் மட்டுமே இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
இதற்கு நேர்மாறாக, அதற்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு, சாதனை செய்வதற்காக அவர் சவப்பெட்டியில் புதைக்கப்பட்டபோது பெருந்திரளான மக்களும், சர்வதேச பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டனர். ஆனால், அப்போது அவர் உயிருடன் இருந்தார்.
இது, மரணத்தைச் சான்றளிப்பதற்கான தரப்படுத்தப்பட்ட அளவுகோல்கள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இல்லாததால் நடந்த தவறுகளில் ஒன்று இல்லை.
மிக் மீனி என்பவரின் இறுதிச் சடங்கு, அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட, திட்டமிட்டு முன்னறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்வாக இருந்தது. அது, பொதுமக்களை வசீகரிக்கவும் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி.
அன்றைய காலகட்டத்தில் சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தும் தீவிரமான சாதனைகளை மேற்கொள்வதற்காகப் பலர் தங்களை உயிருடன் புதைத்துக்கொள்ளவும்கூட முன்வந்தனர்.
இந்தப் போக்கு, பிரிட்டனில் மட்டுமல்ல, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தது.
மிக் மீனி என்ற அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரின் அசாதாரணமான இந்தக் கதை அயர்லாந்தில் இருந்து வெகு தொலைவில் இருந்த ஒரு ஐரிஷ் மதுபான விடுதியில் தொடங்கியது.
இந்தக் கதையின் நாயகன், மிக் மீனி, டிப்பரரியை சேர்ந்த விவசாயி ஒருவரது மகன். இரண்டாம் உலகப் போருக்கு பின் வாழ்வாதாரம் தேடி பிரிட்டனுக்கு சென்றவர்.
உலக குத்துச்சண்டை சாம்பியனாக வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. ஆனால், குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர் கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்தார்.
பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, குத்துச்சண்டை சாம்பியனாகும் அவரது கனவு கலைந்தது.
ஆனால் மற்றொரு விபத்து, அவரது சிந்தனையை தடம் மாற்றியது. சுரங்கப் பாதை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த போது இந்தப் புதிய கனவுக்கான விதை முளைவிட்டதாகக் கூறப்படுகிறது. ‘உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கப்பட்டவரின் சாதனையை முறியடிக்க வேண்டும்’ என்பதுதான் அந்தக் கனவு.
இது, இன்று விசித்திரமாகத் தெரியலாம். ஆனால், 1920கள் முதல் அமெரிக்காவில் ‘அசாதாரண சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தும்’ போட்டிகள் பிரபலமாக இருந்தன. 1966ஆம் ஆண்டு மாலுமி ஒருவர் இந்த அசாதாரண சாதனை முயற்சியை அயர்லாந்தில் மேற்கொண்டிருந்தார். அங்கு மண்ணில் புதைக்கப்பட்ட சவப்பெட்டிக்குள் அவர் பத்து நாட்கள் இருந்தார்.
இருப்பினும், அமெரிக்கரான டிகர் ஓ’டெல், டென்னஸியில் 45 நாட்கள் நிலத்தடியில் சவப்பெட்டிக்குள் இருந்ததே சாதனையே இருந்தது. இந்த 45 நாட்கள் சாதனையை முறியடிக்கும் முயற்சியில் தான் மிக் மீனி இறங்கினார்.
பட மூலாதாரம், Getty Images
கடும் சவால்
வரலாறு முழுவதும் சித்ரவதை செய்வதற்கான வழியாக இருந்த ஒன்றை, நம்மில் பலருக்கும் சிம்மசொப்பனமாக இருக்கும் ஒரு விஷயத்தை செய்வதில் ஒரு சிலருக்கு மட்டும் தீவிர ஆர்வம் இருந்தது ஏன்?
உயிருடன் மண்ணில் புதைக்கப்படும் ‘சவ அடக்கக் கலைஞர்கள்’ என்று அழைக்கப்படுவோர் பல்வேறு காரணங்களுக்காக இந்த முயற்சியில் ஈடுபட்டனர். உலக சாதனைகளை முறியடிப்பது, பணம் சம்பாதிப்பது, சில குறிப்பிட்ட பிரச்னைகளின் மீதான கவன ஈர்ப்பு முயற்சி எனப் பல காரணங்கள் இதற்கு இருந்துள்ளன.
உதாரணமாக, ஓ’டெல் என்பவர், தனது வாழ்நாளில் 158 முறை தாமாக முன்வந்து தன்னைத் தானே மண்ணுக்குள் புதைத்துக்கொண்டார். இடங்களை அல்லது பொருட்களை விளம்பரம் செய்வதற்காகவே அவர் பெரும்பாலும் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு, பணம் சம்பாதித்தார்.
கடந்த 1971ஆம் ஆண்டு, பெட்ரோல் விலையைக் குறைப்பதற்காக அவர் உருவாக்கிய திட்டம் ஒன்றை விளம்பரப்படுத்த அவர் கடைசி முறையாகத் தன்னைத் தானே புதைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல, தன்னைத் தானே மண்ணுக்குள் புதைத்துக்கொள்ளும் முடிவுக்கு மிக் மீனி வந்ததற்கும் சில காரணங்கள் இருந்தன.
தனது 33 வயதில், எவ்வித சிறப்புத் தகுதிகளோ, உயர் கல்வியோ, திறமைகளோ இல்லாமல் இருந்த அவர், வாழ்க்கை முழுவதும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கட்டுமானத் தொழிலாளியாகத் தொடர்வதற்கான சாத்தியங்கள் மட்டுமே இருப்பதாக நினைத்தார்.
எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், தான் செய்யக்கூடிய முயற்சி, கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்து, தனது தாய்நாடான அயர்லாந்துக்கு திரும்பி அங்கு வீடு கட்டும் அளவுக்கு அவரை பணக்காரர் ஆக்கக்கூடும் என்று நினைத்தார்.
“எனக்கு நிஜ வாழ்வில் எதிர்காலம் இல்லை. அதனால்தான் என் திறமையை நிரூபிக்க விரும்பினேன்,” என்று அவர் அறிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை சாம்பியனாக வேண்டும் என்ற கனவு, கானல் நீரானதால், அசாதாரண சகிப்புத்தன்மையை நிரூபிக்கும் சாதனையில் சிறந்தவர் என்ற பெருமையைப் பெற வேண்டுமென்று அவர் தீர்மானித்தார்.
அவரது நோக்கம் அசாதாரணமாக இருந்தாலும், அதை அவர் நிறைவேற்றினார் என்பதும், அதற்கான சூழல் சரியாக அமைந்தது என்பதும் ஆச்சரியமானது.
பட மூலாதாரம், Getty Images
வடக்கு லண்டனில் உள்ள கில்பர்ன் என்ற பகுதியில் வசித்து வந்தார் மீனி. அது அயர்லாந்து மக்கள் அதிகம் வாழும் பகுதியான “ஐரிஷ் என்க்ளேவ்” ஆக இருந்தது.
அங்கு, தி அட்மிரல் நெல்சன் என்ற மதுபான விடுதி ஒன்றை மைக்கேல் ‘புட்டி’ சுக்ரூ என்பவர் நடத்தி வந்தார். அவர் ஒரு விசித்திரமான மனிதர். நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவரைத் தனது பற்களை மட்டுமே பயன்படுத்தி தூக்கிச் செல்வது போன்ற வித்தைகளை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.
தொழிலதிபரான அவர், அவ்வப்போது குத்துச்சண்டைக்கான விளம்பரங்களையும் செய்வார். டப்ளினில் சண்டையிட முகமது அலியை அழைத்து வந்தவரும் இவரே.
அவரது மதுபான விடுதியில் பீர் குடித்துக் கொண்டிருந்த போது, உயிருடன் தன்னைப் புதைத்துக்கொண்டு சாதனை செய்ய விரும்புவதாக சுக்ரூவிடம் மீனி கூறினார். உடனே, சுக்ரூ அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்.
தனது தந்தையின் சாதனைக்கு முந்தைய நாட்களை நினைவுகூர்ந்த அவரது மகள் மேரி, 45 நாட்களுக்கும் மேலாக பூமிக்கு அடியில் தங்கியிருந்து ஒருவர் ஏற்கெனவே செய்திருந்த உலக சாதனையை முறியடிக்கும் முயற்சி மேற்கொள்ளபடுவதாக வானொலியில் செய்தி ஒலிபரப்பானது.
அதைக் கேட்ட மேரியின் தாய், தனது கணவர் தன்னிடம் கூறாவிட்டாலும்கூட, “அது அவர்தான் என்று புரிந்துகொண்டதால், அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்” என்று மேரி கூறுகிறார்.
இந்தச் சாதனையை அயர்லாந்தில் செய்யவே மீனி விரும்பினார். ஆனால், அவர் மிகவும் கொடூரமான மரணத்தைச் சந்திக்க நேரிடும் என்றும், கத்தோலிக்க திருச்சபை சாதகமாக இருக்காது என்றும் அஞ்சிய குடும்பத்தினர் அவரைத் தடுத்தனர்.
மேரியின் கூற்றுப்படி, அவரது தந்தை மீனி அந்தக் காரணங்களைப் புரிந்துகொள்ளவே இல்லை. குடும்பத்தினரின் கவலைகளையும் ஆலோசனைகளையும் புறந்தள்ளி, 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி தான் விரும்பியதைச் செய்யத் தொடங்கினார்.
பட மூலாதாரம், Getty Images
நிலத்தடி சவப்பெட்டியில் மீனி
சுக்ரூ பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். சவப்பெட்டியின் மூடி மூடப்படுவதற்கு முன்பு, உலக ஊடகங்கள் முன்னிலையில் அந்த மது விடுதியிலேயே மீனி தனது ‘இறுதி விருந்தை’ உண்ண வேண்டும் என்று சுக்ரூ நினைத்தார்.
இந்த சவாலுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட, நுரைபஞ்சு மெத்தை விரிக்கப்பட்ட 1.90 மீட்டர் நீளமும் 0.78 மீட்டர் அகலமும் கொண்ட சவப்பெட்டிக்குள், நீலநிற பைஜாமா அணிந்திருந்த வருங்கால சாதனையாளர் ஏறி அமர்ந்தார்.
அவர் தன்னுடன் ஒரு சிலுவையையும் ஜெபமாலையையும் எடுத்துச் சென்றார். பெட்டிக்குள் பூட்டப்படுவதற்கு முன்பு பேசிய மீனி, “இதை என் மனைவி மற்றும் மகளுக்காகவும், அயர்லாந்தின் கௌரவம் மற்றும் புகழுக்காகவும் செய்கிறேன்” என்று கூறினார்.
அந்தச் சடங்கு முடிந்ததும், ஐரிஷ் டெனர் பாடகர் ஒருவர் பாட, அங்கிருந்த பார்வையாளர்கள் மற்றும் தொலைக்காட்சிக் குழுவினரின் ஊர்வலம் மீனியுடன் கில்பர்ன் வீதிகள் வழியாகச் சென்றது. இறுதியில், அவர் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கும் மேல் இருக்க வேண்டிய இடத்திற்கு மீனி அழைத்துச் செல்லப்பட்டார்.
பல டன் எடையுள்ள மண்ணுக்கு அடியில் 2.5 மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்ட பிறகு, அந்த அயர்லாந்து மனிதர் இரண்டு வார்ப்பு இரும்புக் குழாய்கள் மூலம் சுவாசித்தார். அந்தக் குழாய்கள் வழியாகவே அவருக்கு நாளிதழ்கள் மற்றும் டார்ச் வெளிச்சத்தில் வாசிப்பதற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதோடு உணவு, பானங்கள் மற்றும் சிகரெட்டுகளும் அனுப்பப்பட்டன.
தேநீர் மற்றும் டோஸ்ட், ரோஸ்டட் பீஃப் மற்றும் அவருக்குப் பிடித்த கருப்பு நிற பீர் என அனைத்தையும் அவர் படுத்த வாக்கிலேயே சாப்பிட்டார்: “அது ஒன்றும் பூமிக்கு அடியில் இருக்கும் ஹோட்டல் அல்ல” என்று அவர் பின்னாளில் குறிப்பிட்டார்.
இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக, சவப்பெட்டிக்கு அடியில் இருந்த குழி ஒன்றுக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு சிறிய கதவு கழிப்பறையாகப் பயன்படுத்தப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
இந்த விசித்திரமான சவால், குத்துச்சண்டை வீரர் ஹென்றி கூப்பர், நடிகை டயானா டோர்ஸ் போன்ற நட்சத்திரங்களையும் ஈர்த்தது. அவர்கள் மீனி புதைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்தனர்.
மீனி புதைக்கப்பட்ட இடத்திலேயே நன்கொடைப் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அவரிடம் பேசுவதற்குப் பணம் செலுத்த வேண்டியிருந்தது.
சவப்பெட்டியுடன் பொருத்தப்பட்டிருந்த தொலைபேசி மூலம் ‘தி அட்மிரல் நெல்சன்’ மதுபான விடுதியின் தொலைபேசியில் மீனி வெளி உலகத்தினருடன் பேசினார். ஒவ்வோர் அழைப்புக்கும் சுக்ரூ கட்டணம் வசூலித்தார்.
சில காலம் மீனியை தொடர்ந்து கவனித்து வந்த செய்தி ஊடகங்கள், வியட்நாம் போர், மார்ட்டின் லூதர் கிங் படுகொலை போன்ற நிகழ்வுகளால் திசைமாறிவிட்டன.
இருந்த போதிலும், அவர் பூமிக்கு அடியிலிருந்து வெளியே வரும் ‘உயிர்த்தெழுதல்’ நாள் வந்தபோது, அது மக்கள் கவனத்தைப் பெறாமல் போய்விடக் கூடாது என்பதில் சுக்ரூ உறுதியாக இருந்தார்.
புகழின் உச்சியிலிருந்து மறதிக்கு
மீனி புதைக்கப்பட்ட 8 வாரங்கள் மற்றும் 5 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் 22-ஆம் தேதி சவப்பெட்டி தோண்டி எடுக்கப்பட்டது.
இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பெரும் கூட்டத்திற்கு மத்தியில் லாரி ஒன்றில் ஏற்றப்பட்ட சவப்பெட்டி மதுபான விடுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சவப்பெட்டியின் மூடியை அகற்றியபோது, ஒளியில் இருந்து கண்களைப் பாதுகாக்க சன்கிளாஸ் அணிந்திருந்த மீனி புன்னகைத்தார். முகத்தில் தாடியுடன், அழுக்காக, அலங்கோலமாகக் காணப்பட்டாலும், மறுக்க முடியாத ஒரு வெற்றியாளராகத் திகழ்ந்தார்.
“என்னால் இன்னும் 100 நாட்கள்கூட அங்கே இருந்திருக்க முடியும். உலக சாம்பியன் ஆனதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று மீனி தெரிவித்தார். மருத்துவப் பரிசோதனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தான் சவப்பெட்டியில் வைக்கப்பட்ட நாளைப் போலவே மீண்டும் ஒருமுறை, மக்களின் பாராட்டைப் பெற்ற மீனி, அந்த தருணத்திற்காகவே ஏங்கிக் கொண்டிருந்தார். தனது கனவு நனவாகிவிட்டதாக மகிழ்ந்த அவர், பெரும் செல்வமும் வந்து சேரும் என்று எதிர்பார்த்தார்.
அவரது மகள் மேரியின் கூற்றுப்படி, ஓ’டெல்லின் சாதனையை முறியடித்தால், அவர் பயன்படுத்திய சவப்பெட்டியுடன் உலகப் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் ஒரு லட்சம் யூரோ ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அது மிகப்பெரிய தொகை. 1970களில் டப்ளினின் வசதியான பகுதியில் மூன்று மாடி வீட்டின் விலையே சுமார் 12,000 யூரோ தான் (யூரோ என்பது ஐரோப்பிய நாடுகள் பலவும் 1990களின் இறுதி முதல் பயன்படுத்தும் பொது நாணயம்).
மீனி, 61 நாட்கள் பூமிக்கு அடியில் இருந்ததன் மூலம், முந்தைய சாதனையைவிட வெகுதூரம் முன்னேறிச் சென்றார். முந்தைய சாதனையை முறியடிக்க அவர் 46 நாட்கள் சவப்பெட்டிக்குள் இருப்பதே போதுமானதாக இருந்த நிலையில், அவர் கூடுதலாக 15 நாட்கள் புதைந்திருந்தார்.
“இருப்பினும், மீனி எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. அவருக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. உலகப் பயணத்திற்கு அவர் அனுப்பப்படவில்லை, பணமும் வந்து சேரவில்லை, அவர் வெறும் கையோடு அயர்லாந்து திரும்பினார்” என்று மீனியின் மகள் மேரி நினைவு கூர்கிறார்.
அதுமட்டுமல்ல, தனது சாதனை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படும் என்ற அவரது நம்பிக்கையும் பொய்த்துப் போனது. கின்னஸ் உலக சாதனை நிறுவனம், அவரது சாதனையை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. இவரது சாதனையைச் சரிபார்க்கவும் அங்கு கின்னஸ் பிரதிநிதிகள் யாரும் வரவில்லை. இருப்பினும், உலக ஊடகங்கள் சாட்சியாக இருந்ததால், அவரது 61 நாள் சாதனையை யாராலும் கேள்வி எழுப்ப முடியாது.
மறுபுறம், உலக சாதனைக்காக அவர் சவப்பெட்டியில் பூமிக்கு அடியில் 61 நாட்கள் இருந்துவிட்டு வெளியே வந்த சில மாதங்களிலேயே, அதே ஆண்டில், எம்மா ஸ்மித் என்ற முன்னாள் கன்னியாஸ்திரி, இங்கிலாந்தின் ஸ்கெக்னஸ் என்ற இடத்தில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் 101 நாட்கள் புதைந்து இருந்தார். எனவே மீனியின் சாதனை சில மாதங்களிலேயே முறியடிக்கப்பட்டது.
மீனி இறந்து உண்மையிலுமே சவப்பெட்டிக்குள் அடக்கம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கழித்து, 2003ஆம் ஆண்டில், மிக் மீனியின் கதை “Buried Alive / Beo Faoin bhFód” என்ற ஆவணப்படமாக மீண்டும் உயிர் பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வரும் இந்த ஆவணப்படம், அவரது முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரமாக மாறிவிட்டது.
அவர் இறந்த பிறகு அவரது சாதனை ஆவணமாகப் பதிவாகியிருப்பதை அவர் பார்த்திருந்தால், ஒருவேளை அவர் மகிழ்ச்சி அடைந்திருக்கக் கூடும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு