படக்குறிப்பு, மிங் குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 39 பேருக்கு திங்கட்கிழமை அன்று தண்டனை விதிக்கப்பட்டது.கட்டுரை தகவல்
எழுதியவர், ஜோனதன் ஹெட்
பதவி, தென்கிழக்கு ஆசியா செய்தியாளர்
எழுதியவர், டெஸ்ஸா வாங்
பதவி, ஆசிய டிஜிட்டல் செய்தியாளர்
மியான்மரில் மோசடி மையங்களை (online scam centre) நடத்தி வந்த ஒரு பிரபல மாஃபியா குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்குச் சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மிங் குடும்பத்தைச் சேர்ந்த டஜன் கணக்கான உறுப்பினர்கள் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பலருக்கு நீண்ட கால சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
சீன எல்லைக்கு அருகில், மியான்மரின் அமைதியான நகரமான லாவ்கைங்கை (Laukkaing) சூதாட்டம், போதைப்பொருள் மற்றும் மோசடி மையங்களின் மையமாக மாற்றிய நான்கு குடும்பங்களில் ஒன்றுக்காக இந்த மிங் குடும்பம் செயல்பட்டு வந்தது.
இதையடுத்து, மியான்மர் கடும் நடவடிக்கைகளை எடுத்து, இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பலரை 2023-ஆம் ஆண்டில் கைது செய்து சீன அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
சீன அரசு தொலைக்காட்சியான சிசிடிவி (CCTV) வெளியிட்டுள்ள செய்தியின்படி, கிழக்கு நகரமான வென்சோவில் திங்களன்று மிங் குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 39 பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 உறுப்பினர்களைத் தவிர மேலும் 5 பேருக்கு இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை வழங்கப்பட்டது. 11 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். மீதமுள்ளவர்களுக்கு 5 முதல் 24 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டன.
நீதிமன்றத்தின் விசாரணையில், 2015-ஆம் ஆண்டு முதல் மிங் குடும்பம் மற்றும் பிற கிரிமினல் குழுக்கள் தொலைத்தொடர்பு மோசடி, சட்டவிரோத சூதாட்ட விடுதிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழில் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அவர்களது சூதாட்டம் மற்றும் மோசடி நடவடிக்கைகள் மூலம் 10 பில்லியன் யுவானுக்கும் (1.4 பில்லியன் டாலர்கள்) அதிகமாகச் சம்பாதித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மற்ற மதிப்பீடுகளின்படி, நான்கு குடும்பங்களின் சூதாட்ட விடுதிகள் ஒவ்வொன்றும் ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர்கள் சம்பாதிக்கின்றன
மேலும் மிங் குடும்பம் மற்றும் பிற கிரிமினல் குழுக்கள், பல மோசடி மைய ஊழியர்களின் மரணத்துக்குக் காரணம் என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது. ஒரு சம்பவத்தில், ஊழியர்கள் சீனாவுக்குத் திரும்புவதைத் தடுக்க, அவர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் தெரியவந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மியான்மரின் ஆன்லைன் மோசடி மையங்களில் இருந்து மீட்கப்பட்டவர்கள்
சூதாட்ட நகரத்தில் சீன மாஃபியாவின் வீழ்ச்சி
சீனா மற்றும் பல அண்டை நாடுகளில் சூதாட்டம் சட்டவிரோதமானது என்பதால், சீனர்களின் சூதாட்டத் தேவையைப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட லாவ்கைங் சூதாட்ட விடுதிகள், பின்னர் பணமோசடி, கடத்தல் மற்றும் டஜன் கணக்கான மோசடி மையங்களுக்கான லாபகரமான இடமாக மாறின.
ஐ.நா. “மோசடி பெருந்தொற்று” (Scamdemic) என்று அழைக்கும் இந்தச் செயல்பாட்டின் முக்கிய மையமாக இந்த நகரம் காணப்பட்டது. இதில் 1,00,000-க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள், அவர்களில் பலர் சீனர்கள், மோசடி மையங்களுக்கு ஈர்க்கப்பட்டு, அங்குச் சிறை வைக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள இலக்குகளைக் குறிவைத்துச் சிக்கலான ஆன்லைன் மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்பட்டனர்.
மிங் குடும்பத்தினர் ஒரு காலத்தில் மியான்மரின் ஷான் மாகாணத்தில் மிகவும் சக்திவாய்ந்த குடும்பங்களில் ஒன்றாக இருந்தனர், மேலும் லாவ்கைங்கில் குறைந்தது 10,000 ஊழியர்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்த மோசடி மையங்களை நடத்தினர். இதில் ‘க்ரெளச்சிங் டைகர் வில்லா’ (Crouching Tiger Villa) என்று அழைக்கப்படும் வளாகம் மிகவும் மோசமனது, அங்கு ஊழியர்கள் சாதாரணமாகத் தாக்கப்பட்டனர் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிளர்ச்சிக் குழுக்களின் கூட்டணி தாக்குதலைத் தொடங்கி, மியான்மர் ராணுவத்தை ஷான் மாகாணத்தின் பெருவாரியான பகுதிகளிலிருந்து வெளியேற்றி, லாவ்கைங்கின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. இந்த குழுக்களின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கு வைத்திருக்கும் சீனா, இந்தத் தாக்குதலுக்குப் பச்சைக்கொடி காட்டியதாக நம்பப்படுகிறது.
இந்த குடும்பத் தலைவரான மிங் ஸுச்சாங் (Ming Xuechang) தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மற்ற குடும்ப உறுப்பினர்கள் சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிலர் மனம் வருந்தி வாக்குமூலங்கள் அளித்துள்ளனர்.
மோசடி மையங்களில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கானோரும் சீனப் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தண்டனைகள் மூலம், தனது எல்லையில் உள்ள மோசடி வணிகத்தை கடுமையாகக் கையாள்வதில் உறுதியாக உள்ளதை சீனா காட்டுகிறது. சீனாவின் அழுத்தத்தின் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாய்லாந்தும் மியான்மர் எல்லையில் உள்ள மோசடி மையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையும் மீறி இந்த மோசடி வணிகம் தன்னை தகவமைத்துக்கொண்டிருக்கிறது. தற்போது அதன் பெரும்பகுதி கம்போடியாவில் செயல்பட்டு வருகிறது, இருப்பினும் மியான்மரில் இன்னும் இது பரவலாக உள்ளது