‘மின்வாரியத்துக்கு மத்திய நிதி நிறுவனங்கள் வழங்கி உள்ள கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும்’ என, மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில், அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென் மாநில மின்துறை அமைச்சர்களின் மாநாடு, மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழக மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பங்கேற்று பேசியதாவது:
ஊரக மின்மயமாக்கல் கழகம் (ஆர்இசி)) மற்றும் மின் நிதிக் கழகம் (பிஎஃப்சி) ஆகிய மத்திய நிதி நிறுவனங்கள், தமிழக மின்வாரியத்துக்கு வழங்கியுள்ள கடனுக்கான வட்டி விகிதங்களை குறைந்தபட்சம் ஒன்றரை சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டும். இந்த நிதி நிறுவனங்கள் பெற்றுவரும் மிகை ஊதிய வரம்பானது, இத்துறையின் ஒட்டுமொத்தக் கடன் தாங்குதிறனை நேரடியாகப் பாதிக்கிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் மேம்பட்ட செயலாக்கத் திறனையும், வணிக நம்பகத் தன்மையையும் கருத்தில்கொண்டு, சில மாநிலங்களின் மீது மட்டும் சமமற்ற நிதிப் பொறுப்பு சுமத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மின் செலுத்தமைப்புக் கட்டணங்களிலிருந்து அளிக்கப்பட்டு வரும் விலக்கைத் திரும்பப்பெற வேண்டும்.
ராய்கர் – புகளூர் – திருச்சூர் உயர் மின்னழுத்த நேர்திசை மின் தொடரமைப்பானது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாகக் கருதப்பட்டு, அதற்கேற்ப கட்டண விகிதங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையேயான மின் செலுத்தமைப்புக் கட்டணங்கள் ‘பயன்படுத்துவோர் செலுத்தும்’ எனும் கொள்கையின் அடிப்படையில், உண்மையான பயன்பாட்டு அளவின்படி விதிக்கப்பட வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் இலக்குகள், ஒவ்வொரு குறிப்பிட்ட எரிசக்தி ஆதாரங்களின் அடிப்படையில் வரையறுக்கப்படாமல், மாநிலங்கள், தங்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடியதும், தங்களின் பிராந்திய சூழலுக்கு மிகவும் உகந்ததுமான எரிசக்தி ஆதாரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த மாநாட்டில், மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன் ஆகியோர் பங்கேற்றனர்.