• Fri. Oct 11th, 2024

24×7 Live News

Apdin News

மின்வாரியம், போக்குவரத்து, ஆவின் உட்பட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் | tn government announced bonus for eb transport aavin employees

Byadmin

Oct 11, 2024


சென்னை: அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’, ‘டி’ பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம், கருணை தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, மிகை ஊதியம் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21,000-ஐ தளர்த்தி, அனைத்து ‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம், கருணை தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி – பகிர்மான கழகம், அரசு போக்குவரத்து கழகங்கள், நுகர்பொருள் வாணிப கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் (ஆவின்) பணிபுரியும் தகுதியுடைய ‘சி’, ‘டி’ பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33 சதவீத மிகை ஊதியம், 11.67 சதவீத கருணை தொகை என மொத்தம் 20 சதவீதம் மிகை ஊதியம், கருணை தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் – கழிவுநீர் அகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீத மிகை ஊதியம், 1.67 சதவீத கருணை தொகை வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீத மிகை ஊதியம் வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணை தொகையாக வழங்கப்படும்.

இதனால் மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் அதிகபட்சம் ரூ.16,800 வரை பெறுவார்கள். மொத்தத்தில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 75 ஆயிரத்து 670 தொழிலாளர்களுக்கு ரூ.369.65 கோடி மிகை ஊதியம், கருணை தொகையாக வழங்கப்படும். இதுதவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியாக வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



By admin