• Thu. Oct 9th, 2025

24×7 Live News

Apdin News

மின் கட்டண திருத்தம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Byadmin

Oct 9, 2025


மின் கட்டணத்தை குறைப்பதை இலக்காகக் கொண்டே இலங்கை மின்சார சபையை நான்கு தொகுதிகளாக்குவததற்கான மறுசீரமைப்பினை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் பொது மக்களிடம் கருத்து கோரல் இடம்பெற்று வருகிறது. எனினும் கட்டண திருத்தம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின் கட்டணத்தை குறைப்பதை இலக்காகக் கொண்டே இலங்கை மின்சார சபையை நான்கு தொகுதிகளாக்குவததற்கான மறுசீரமைப்பினை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் மின் கட்டணம் தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானமொன்று எடுக்கப்படவில்லை. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இது குறித்து மக்கள் கருத்துக் கோரல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பதை ஆணைக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. எனவே மின் கட்டணம் குறைக்கப்படுமா அல்லது அதிகரிக்கப்படுமா என்பதை தற்போது கூற முடியாது. முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்துறை சார்ந்தவர்களின் கோரிக்கைகளுக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்படும். எனவே தீர்மானம் எதுவாக இருந்தாலும், அது மின்சார ஊழியர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பாக அமையாது.

அரசாங்கத்தின் தீர்மானங்களை ஏற்க முடியாதவர்களுக்கு நாம் ஏற்கனவே சில தெரிவுகளை வழங்கியிருக்கின்றோம். எனவே அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் வேறு தொழிலை தேடிக் கொள்ளலாம் என்றார்.

By admin