மியான்மரை 7.7 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளாது.
நில நடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பாங்காக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வின் கூற்றின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பர்மிய நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில், அமைந்திருந்தது. இந்த பகுதி தலைநகர் நேபிடோவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பட மூலாதாரம், Reuters
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஒரு கட்டடத்தின் கூரை மீது இருந்த தண்ணீர் தெறித்து பல தளங்களை தாக்கி இறுதியாக கீழே தெருக்களில் விழுந்தது.
பிபிசி குழுவினர் பாங்காங்கில் கட்டடங்கள் அசைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நில அதிர்வு தலை சுற்றலை தருமளவு இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாங்காக்கில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இந்த கட்டடத்தில் 50 கட்டுமான தொழிலாளர்கள் இருந்தனர். ஏழு பேர் தப்பித்த நிலையில், 43 பேர் இடித்த கட்டடத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
தாய்லாந்து நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இல்லை என்பதுடன் அங்கு அபூர்வமாக உணரப்படும் அனைத்து நிலநடுக்கங்களும் அண்டை நாடான மியன்மாரில் ஏற்படுகின்றன.
பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தாங்ககூடியவகையில் வடிவமைக்கப்பட்டவை அல்ல என்பதால், கட்டமைப்புக்கு ஏற்படும் பாதிப்பு முக்கியமானதாக இருக்கலாம்.
நிலநடுக்கம் ஏற்பட்ட போதுதான் வீட்டில் சமைத்துக்கொண்டிந்ததாக பாங்காங்கில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் புய் து பிபிசி உலக சேவையின் நியூஸ்டே நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
“நான் மிகவும் பதட்டத்தில் இருந்தேன், நான் அச்சமடைந்திருந்தேன்,” என்கிறார் அவர். “அது என்னவென்றே எனக்கு தெரியவில்லை, ஏனென்றால், பாங்காங்கில் இது போன்ற ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்.”
“எனது அபார்ட்மெண்டில் சுவர்களில் சில வெடிப்புகளை மட்டும் பார்த்தேன், நீச்சல் குளங்களிலிருந்து தண்ணீர் வெளியே தெளித்தது, மற்றும் மக்கள் கத்திக்கொண்டிருந்தனர்,
பின்னதிர்வு ஏற்பட்டவுடன் அவர் மேலும் பலருடன் சேர்ந்து தெருவுக்கு ஓடினர். “என்ன நடந்தது என புரிந்துகொள்ள நாங்கள் முயன்றுகொண்டிருந்தோம்,” என்கிறார் அவர்.
“பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும்வகையில் கட்டமைக்கபடவில்லை, எனவே பெரிய அளவு சேதம் இருக்கப் போகிறது என நான் நினைக்கிறேன்,”