மிராய் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : பீப்பிள் மீடியா ஃபேக்டரி
நடிகர்கள் : தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஸ்ரேயா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு மற்றும் பலர்.
இயக்கம்: கார்த்திக் கட்டமனேனி
மதிப்பீடு: 3/ 5
‘ஹனுமான்’ படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக உயர்ந்த நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகி, பான் இந்திய திரைப்படமாக வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘மிராய்’ . பட வெளியீட்டிற்கு முன்னதாக ரசிகர்களுக்கு பிரம்மாண்ட திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக் குழுவினர் வாக்குறுதி அளித்தனர். அதனை அவர்கள் காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கலிங்க பேரரசனான அசோகர் – போரில் வெற்றி பெற்றாலும்.. போர்க்களம் ரத்தக்களரியாகி மனித பேரழிவிற்கு ஆளான பிறகு, இந்த உலகை பாதுக்காப்பதற்காக.. அழியாமை குறித்த ரகசியத்தை – ஒன்பது புனித நூல்களாக முத்திரையுடன் உருவாக்கி, அதனை தன்னுடைய விசுவாசமான பாதுகாவலர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்.
பல தலைமுறைகளை கடந்து 2000 ஆண்டில் இந்த புத்தகத்தின் குறிப்பாக ஒன்பதாவது புத்தகத்தின் பாதுகாவலராக அம்பிகா ( ஸ்ரேயா சரண்) நியமிக்கப்படுகிறார். அந்த தருணத்தில் ஒன்பது புத்தகங்களை அடைந்து, அழியாமையை அடையவும் , இந்த உலகை ஆளவும்.. இரக்கமற்ற மனிதனான தி பிளாக் வாள் என குறிப்பிடப்படும் மகாபீர் லாமா ( மனோஜ் மஞ்சு) முயற்சிக்கிறார். இந்த முயற்சி குறித்து தெரிந்து கொண்ட அம்பிகா, அதை தடுப்பதற்கான வழிகளில் ஈடுபடுகிறார். இருப்பினும் மகாபீர் லாமா அந்த ஒன்பது புத்தகங்களில் சிலவற்றை கைப்பற்றி, மீதமானதை தொடர்ந்து தேடுகிறார்.
இந்நிலையில் அம்பிகா- ஒன்பதாவது நூலினை மகாபீர் லாமாவின் கைகளுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் சில சூட்சம ஆற்றல்கள் கொண்ட ஹைதராபாத்தில் உள்ள எதற்கும் கவலைப்படாத அனாதையான வேதா பிரஜாபதி ( தேஜா சஜ்ஜா) எனும் இளைஞரை தெரிவு செய்கிறார். இதைத்தொடர்ந்து பல வினாக்கள் ரசிகர்களிடம் எழுப்பி… அதற்கான விடையை கண்கள் வியக்கும் அளவிற்கு பிரம்மாண்டமான காட்சி அமைப்பு மற்றும் எளிமையான கதை சொல்லல் மூலம் பதிலளிக்கிறார்கள். குறிப்பாக மகாபீரை வேதாவால் தடுக்க இயலுமா? புத்தகங்கள் உண்மையிலேயே ஆற்றல் படைத்தவையா? மகாபீர் அதனை ஏன் அடைய விரும்புகிறார்? வேதாவை இந்த விடயத்தில் ஈடுபடுத்தும் விபா ( ரித்திகா நாயக்) எனும் சாது யார்? அவர் எப்படி இந்த மர்மமான பின்னணியுடன் இணைக்கப்படுகிறாள்? அத்துடன் மிராய் என்றால் என்ன? அது ஒரு புத்தகமா? அல்லது ஆயுதமா? அல்லது வேறு ஏதேனுமா? என்ற வினாவையும் எழுப்பி.. இதற்கு ஆச்சரியமூட்டும் வகையில் விடையளிக்கிறார்கள்.
புராணக் கதைகளை நவீனத்துவத்துடன் கலந்து நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான பழங்கால போரை மையப்படுத்தி… பார்வையாளர்களுக்கு தரமான பொழுதுபோக்கு படைப்பை வழங்கி இருக்கிறார்கள்.
அனுமான் படத்தில் தன்னுடைய அதிர்ஷ்டத்தையும், திறமையையும் நிரூபித்த நடிகர் தேஜா சஜ்ஜா – மீண்டும் அதே போன்று ஒரு எளிமையான மற்றும் இறை நம்பிக்கை கொண்ட ‘மிராய்’ எனும் கதையை தெரிவு செய்ததிலிருந்து … அவருடைய புத்திசாலித்தனம் பளிச்சென தெரிகிறது. அதற்கேற்ப தன்னுடைய நடிப்பை வழங்கி சுப்பர் ஹீரோவாக தொடர்கிறார்.
மகாபீர் லாமாவாக நடித்திருக்கும் மனோஜ் மஞ்சு சக்தி வாய்ந்த வில்லனாக தோன்றுகிறார். இருப்பினும் அவரிடமிருந்து பார்வையாளர்கள் இன்னும் அதி தீவிரமான வில்லனிசத்தை எதிர்பார்க்கிறார்கள். அது காட்சி மொழிகளில் திரையில் இல்லாததால் சிறிய ஏமாற்றமும் ஏற்படுகிறது.. அவர் இயக்குநர் சொன்னதை பொருத்தமாக செய்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்.
அம்பிகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா சரண் – திரையில் அற்புதத்தையும் , ஆச்சரியத்தையும் நிகழ்த்துகிறார். வி எஃப் எக்ஸ் துணையுடன் இவருடைய நடிப்பு பாராட்டை பெறுகிறது. கதையின் அழுத்தமும், மைய புள்ளியும் இவர் தான் என்பதால் ..அதனை உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஜெயராம், ஜெகபதிபாபு ஆகியோரும் திரையில் தோன்றி, தங்களுக்கான பங்களிப்பை அனுபவத்துடன் கலந்து வழங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார்கள்.
முதல் பாதி நிறைவடைவதற்கு முன்பான காட்சி மொழிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதுடன் வியப்பையும் அளித்து அற்புதமான படமாளிகை அனுபவத்தை உறுதிப்படுத்துகிறது.
புராணக் கதைகள் – அது தொடர்பான கற்பனைகள் – ஸ்ரீ ராமபிரானின் தெய்வீக தோற்றம்- சம்பாதி எனும் பறவையின் காட்சி மொழி – என பல தருணங்களை தொழில்நுட்ப ரீதியாக நேர்த்தியாக வழங்கி ரசிகர்களுக்கு அற்புதமான பட மாளிகை அனுபவத்தை படக் குழுவினர் வழங்குகிறார்கள்.
திரைக்கதை ஓரளவு யூகிக்க முடிவதாக இருந்தாலும் அதில் புராணத்தையும், தெய்வீக அம்சங்களையும் துல்லியமாக கலந்து ரசிகர்களுக்கு வியப்பான அனுபவத்தை வழங்குகிறார்கள்.
விபா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரித்திகா நாயக் – புதுமுகமாக இருந்தாலும்.. இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார். அழகு+ இளமை + நடனம் + இவரை ரசிக்க வைக்கிறது. ஆனால் அவருடைய தமிழ் மொழி பின்னணி சில இடங்களில் பொருத்தமற்றதாக இருக்கிறது.
ஒளிப்பதிவு- பின்னணி இசை – பாடல்கள் – படத்தொகுப்பு – என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்குகிறார்கள்.
மிராய் என்றால் ஸ்ரீ ராமபிரானின் கைகளில் உள்ள கோதண்டம் எனும் வில்லின் மூல வடிவம் மற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம் என குறிப்பிடப்பட்டிருப்பது… அதாவது தீமைகளை அளிக்கும் வல்லமை வாய்ந்த ஆயுதம் என குறிப்பிடப்பட்டிருப்பது பார்வையாளர்களுக்கு புதுமையான உணர்வை வழங்குகிறது.
மிராய் – டிஜிட்டல் சாமுராய்
The post மிராய் | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.