0
இங்கிலாந்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர், இதனால் இன்று வெள்ளிக்கிழமை (19) இந்த விடுமுறை காலத்தின் பரபரப்பான நாளாக அமைய உள்ளது. வீதிகளில் சுமார் 2.44 மில்லியன் கார்கள் செல்லக்கூடும் என்று AA நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டு இங்கிலாந்து வீதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் 100 மைல்களுக்கும் குறைவான தூரமே பயணம் செய்வதால், நெடுஞ்சாலை சந்திப்புகள் மற்றும் முக்கிய வணிக வளாகங்களுக்கு அருகில் கடும் நெரிசல் ஏற்படலாம். “இந்த ஆண்டு பொறுமையே உங்களுக்குச் சிறந்த பரிசாக இருக்கும்” என்று AA ரோந்து நிபுணர் ஷான் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பயணிகள் தங்கள் பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
குறிப்பாக, ஹாம்ப்ஷயரில் (Hampshire), M27 நெடுஞ்சாலை சந்திப்பு 9 மற்றும் 11-க்கு இடையே கிறிஸ்மஸ் முதல் ஜனவரி 4 வரை மூடப்பட்டிருக்கும் என்பதால், பயணிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டும்.
பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாகப் பல ரயில் பாதைகள் மூடப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்வது அவசியம். கிறிஸ்மஸ் தினத்தன்று ரயில்கள் இயங்காது. எனவே, பாக்ஸிங் டே அன்று மிகக் குறைவான சேவைகளே இருக்கும்.
விமான நிலையங்களைப் பொறுத்தவரை, வெள்ளிக்கிழமை அன்று மட்டும் சுமார் 4,60,000 பயணங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. பயணிகள் தங்கள் பாதுகாப்புச் சோதனையை எளிதாக்க, பொருட்களைப் பேப்பர் கொண்டு சுற்றாமல் (unwrapped) எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில், அவை சோதனைக்காகப் பிரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.