இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சுப்ரமணி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் வின்சென்ட் செல்வா தனது பெயரை ஆர். கே. செல்வா என மாற்றி வைத்துக்கொண்டு இயக்கி வரும் ‘சுப்ரமணி’ எனும் திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், மிஷ்கின், திவ்யா, ஜாஸ்பர் , சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அகிலேஷ் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணன் இணைந்து ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சனுக்யா இசையமைக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்து விடும் என்றும், தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும், இதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் ஆகியவை வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இயக்குநர் வின்சென்ட் செல்வாவின் உதவியாளரான மிஷ்கின்- குருவின் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் நடித்து வருவதும், இதில் அவர் காவல்துறை உயரதிகாரியாக தோன்றுவதும் ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post மிஷ்கின் நடிக்கும் ‘சுப்ரமணி’ appeared first on Vanakkam London.