0
உலகம் முழுவதும் தமிழர்களிடம் பிரபலமான சமையல் கலை நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜ் கதையின் நாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி வணிக ரீதியாகவும் ஓரளவிற்கு வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.
இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.விரைவில் படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் பெயரிடப்படாமல் மூன்று படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்திருப்பதாகவும், அது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகும் என்றும், 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தப் படத்தின் பணிகளை படக்குழுவினர் முழுமையாக நிறைவு செய்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.