ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தங்கள் மூவருடனும் கலந்துரையாடத் தீர்மானித்திருந்தோம்.
இந்தக் கலந்துரையாடல், ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தங்களது கட்சிகளும் எமது கட்சியும் இணைந்து ஒன்றாகப் போட்டியிட்டது போல் இந்தத் தேர்தலிலும் சில இடங்களிலாவது ஒன்றாகப் போட்டியிடுவது பற்றி ஆராய்வதற்கே ஆனது.
இது சம்பந்தமாகக் கலந்துரையாட 02/3/2025 ஆம் திகதியை செல்வம் அடைக்கலநாதனுடன் நிர்ணயித்திருந்தோம்.
எனினும், அந்த முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது தாங்கள் எமது கட்சியைத் தவிர்த்து வேறு ஒரு கூட்டணியை 23/2/2025 ஆம் திகதி உருவாக்கியமை ஏமாற்றம் அளிப்பதாகவும் கவலை அளிப்பதாகவும் அமைந்தது. இது எமக்குத் தனித்துப் போட்டியிடும் சூழலை உருவாக்கியமை இயல்பானதும் தவிர்க்க முடியாதாதமாகும்.
நாம் இந்த முயற்சியை மேற்கொண்டது தனிய தேர்தலுக்காக அல்ல. எமது முயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய இந்த நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்துடனே ஆகும் என்பதை மீண்டும் பதிவு செய்கின்றேன்.
இந்த முயற்சியை மேலும் தொடரவே விரும்புகின்றேன். இதற்கான தங்களது இணக்கம் இருக்குமானால் நாம் தொடர்ந்து பேசலாம்.
அதேநேரம் நாம் தனித்துப் போட்டியிட்டாலும் தேர்தலுக்குப் பின் இணைந்து வடக்கு – கிழக்கில் உள்ள சகல தமிழ் உள்ளூராட்சி மன்ற நிர்வாகங்களையும் நாம் கைப்பற்றும் முகமாக தேர்தலுக்குப் பின் செயற்படுவதற்கான உடன்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன்னரே ஏற்பாடு செய்தல் வேண்டும். இதற்கும் தங்களது உடன்பாடு இருக்கும் என்றால் நாம் தொடர்ந்து பேசலாம்.
தங்களது துரித பதிலுக்கு நன்றி உடையவராவோம்.” – என்றுள்ளது.