இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி வரும் ‘சக்தி திருமகன்’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகர் கண்ணன் மீண்டும் கலை சேவை செய்ய தொடங்கியிருக்கிறார். இவர் ‘இயக்குநர் இமயம் ‘ பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘காதல் ஓவியம்’ எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர். இவரை கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்ததால் தேடி, கண்டறிந்து மறுபிரவேசம் செய்ய வைத்திருக்கிறார்கள்.
‘அருவி’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘ சக்தி திருமகன் ‘எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிருபளானி, செல் முருகன், ரவீந்தரா ,கிரண், ரியா ஜித்து, சோபா விஸ்வநாத், மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் முக்கியமான வேடத்தில் ‘காதல் ஓவியம்’ பட புகழ் கண்ணனும் இணைந்திருக்கிறார். ஷெல்லி காலலிஸ்ட் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேசன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
நடிகர் கண்ணன் மீண்டும் நடிக்க தொடங்கி இருப்பது குறித்து பட குழுவினர் விவரிக்கையில், ” கதையில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பொருத்தமான முகத்தை தேடிக் கொண்டிருந்தோம். இந்த தருணத்தில் ‘காதல் ஓவியம்’ படத்தில் நடித்த கண்ணன் அவர்களை சந்தித்தோம். அவரிடம் இப்படத்தின் கதையை விவரித்து, விஜய் அண்டனியின் 25-வது படத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற எங்களது விருப்பத்தையும் தெரிவித்தோம். அதன் பிறகு அவர் சம்மதம் தெரிவித்து எங்களுடன் இணைந்தார். ” என்றனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாகவும், விரைவில் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை வெளியிடுவோம் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
The post மீண்டும் நடிக்கும் ‘காதல் ஓவியம்’ புகழ் நடிகர் கண்ணன் appeared first on Vanakkam London.