• Tue. Dec 30th, 2025

24×7 Live News

Apdin News

மீண்டு வருவானா | கேசுதன் – Vanakkam London

Byadmin

Dec 30, 2025


 

வலிகளை கடந்து நடக்கின்றேன்
சிந்திவிட்ட கண்ணீரின் துளிகள்
காய்ந்து விட முதல் தொலைத்து விட்ட
நினைவுகள் மீண்டும்
பற்றிக்கொள்கின்றது.

தினமும்
இந்த இரவுகள் மட்டும் ஏன்
என் வலிகளை மட்டும்
பல்கிப்பெருகி
அள்ளித் தெளிக்கின்றது

வாசல் கதவுகளை தாண்டிய
வலிகளை இன்று
இரத்தத்தினாலும் சதைகளாலும்
மூடப்பட்ட இதய கதவுகளில்
அடைபட்டு தகிக்கின்றது

அன்று தொலைத்து விட்ட என்னவனை
தினந்தோறும் நினைந்துருகையில்
அந்த நிலவும் குழைந்துவிட்டு
கடக்கின்றது

புன்னகை மறந்த
என் மனச்சிறையில் பூட்டிவைத்த
அவன் முகம்
நான் காண இன்னும் எத்தனை
யுகங்கள் காத்திருப்பேன்

பேருந்து கண்ணாடிக்குள் இருந்து
இறுதியாக கையசைத்துச் சென்ற
அவன் வலிகளை
அந்த சாளரங்களும் அறிந்திடும்

மௌனித்துப்போன தேசத்தில்
என் வாழ்க்கையும்
முடிவுற்று போனது

அன்று
எனக்கானவனை
பறிகொடுத்து விட்டேன்
இன்று
அவன் தடயங்களை மட்டும்
இரட்சித்து விட்டேன்

இருளடைந்து போன
என் இதயச் சுவற்றில் மட்டும்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
அவனின் இறுதி கையசைப்பு

இந்த பூமியில் அவதரித்துவிட்ட அந்நாள்
அவனுக்காய் வருடம் தோறும்
செவ்வரத்தம் செடிகளை
நட்டு வைத்துள்ளேன்

அன்று அவன் வரும் நாள்
செவ்வரத்தம் பூக்களாய்
மலர்ந்திருக்கும்

அன்று
என் மௌனச் சிறையுடைத்து
உன் வருகையினை கூறிடுவேன்

இல்லையென்றால்
செவ்வரத்தம் பூ மாலையோடு
சுவற்றில் பூத்திருப்பேன்
அதற்குள் மீண்டு வந்திடுவாயா.

கேசுதன்

By admin