3
வீட்டில் இட்லி மீதமிருந்தால், பெரும்பாலும் அதை உப்புமா செய்து பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அந்த உப்புமா அனைவருக்கும் பிடிக்காமல் போகலாம். அதற்கு பதிலாக மீதமான இட்லியை பயன்படுத்தி சுவையான சில்லி இட்லி செய்து பார்க்கலாம். இது ருசியாக இருப்பதுடன், மிகக் குறைந்த நேரத்தில் எளிதாக தயாரிக்கக்கூடிய உணவாகும்.
சில்லி இட்லி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான ஸ்நாக்ஸ் வகையாகும். இதை சரியான முறையில் செய்தால் உடனே காலியாகிவிடும் அளவுக்கு சுவையாக இருக்கும். குறிப்பாக மாலை நேர சிற்றுண்டியாகவும் அல்லது காலை உணவாகவும் இது சிறந்த தேர்வாக அமையும்.
இந்த சில்லி இட்லி செய்வது மிகவும் எளிதானது. வீட்டில் உள்ள சில சாதாரண பொருட்களை பயன்படுத்தியே இந்த உணவை தயாரிக்கலாம். இதற்கு துணையாக செட்டிநாடு முறையில் தயாரிக்கப்படும் கொத்தமல்லி சட்னி சேர்த்தால் சுவை இன்னும் அதிகரிக்கும். இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற இந்த சட்னி சில்லி இட்லியுடனும் சிறப்பாக பொருந்தும்.
சில்லி இட்லியை எப்படி தயாரிப்பது என்பதை அறிந்து கொண்டு வீட்டிலேயே செய்து சுவைத்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
மீந்து போன இட்லி – 4
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
தாளிப்பதற்கு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு – சுவைக்கேற்ப
கறிவேப்பிலை – 1 கொத்து
மஞ்சள் தூள் – 1/4
மிளகாய் தள் – 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1/4
கரம் மசாலா – 1/2
மிளகுத் தூள் – 1/4
சர்க்கரை – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மீந்து போன இட்லியை சற்று நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், இட்லி துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
அதன் பின் அதில் சர்க்கரை சேர்த்து, 3 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கிளறி, நன்கு கொதிக்க ஆரம்பித்தும், ப்ரை செய்து வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து நன்கு மசாலா இட்லியுடன் ஒன்று சேரும் வரை கிளறி விட்டு, எலுமிச்சை சாற்றினை சேர்த்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சில்லி இட்லி தயார்.