ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 விசைப்படகுகளைப் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அவற்றில் இருந்த 32 மீனவர்களைக் கைது செய்தனர்.
இதையடுத்து, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகே மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மீனவப் பிரதிநிதி சகாயம் தலைமை வகித்தார். இதில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம்விடுவதைத் தடுத்து நிறுத்தி, அவற்றை மீட்டுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (பிப். 24) முதல் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அண்ணாமலை கடிதம்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், “ராமேசுவரத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபகாலமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக கைது செய்து வருவது வருத்தம் அளிக்கிறது. எனவே, இந்தப் பிரச்சினையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தலையிட்டு, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா-இலங்கை கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும். இல்லையென்றால். மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக மீனவர்களைத் திரட்டி, கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்கள் மீது தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிக்கும் விவகாரத்தை வாழ்வாதாரம் சார்ந்த மனிதநேய பிரச்சினையாகத்தான் பார்க்க வேண்டும் என்று இந்திய-இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இலங்கை கடற்படையினர் இதை மதிக்காமல், தமிழக மீனவர்களை கைது செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக அரசும் இதை வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீனவர்கள் கைது செய்யப்படுவதால், அவர்களது குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இலங்கை அரசின் முறையற்ற நடவடிக்கைகளை மத்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில், இலங்கை அரசோடு கண்டிப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.