ராமேசுவரம்: மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்தியா-இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் தரணி முருகேசன் இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று ராமநாதபுரம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்களுக்கு காலையில் எழுந்ததும் என்னை திட்டுவது தான் முதல் வேலை. யார் அதிகமாக திட்டுவது என்பது தான் அவர்களுக்குள் போட்டி. மேடையை போட்டு பிரதமரை திட்டுவது, பாஜகவை திட்டுவது மட்டுமே முழுநேர வேலையாக திமுகவினர் வைத்துள்ளனர். இதனால் தான் சட்ட ஒழுங்கிலிருந்து அனைத்தும் தமிழகத்தில் சந்தி சிரிக்கிறது.
தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் பொழுது தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் வராது. தொகுதி மறுவரையறை என்பது விகிதாச்சார அடிப்பைடயில் மேற்கொள்ளப்படும், என பிரதமரும், உள்துறை அமைச்சரும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு சட்ட ஒழுங்குக்காக முதல்வர் கூட்டினால், நாங்கள் அறிவாலயம் வாசலிலிருந்தே தலைமைச் செயலகத்திற்கு செல்லவோம்.

இலங்கையின் புதிய அதிபர் வந்த பிறகு கைதுகள் அதிகரித்துள்ளது. மீனவ பிரச்சினையை சட்டம் ஒழுங்காகவோ, எல்லை பிரச்சினையாகவோ அணுகாமல் மனிதாபிமான பிரச்சினையாக அணுக வேண்டும், என்றே இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறது. மீனவர் பிரச்சினை தொடர்பாக நான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்திற்கு, அவர் எழுதிய பதில் கடிதத்தில் இந்தியா-இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் நடைபெறும், என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாக, அண்ணாமலை கூறினார்.
மேலும், இருமொழிக் கொள்கையில் படித்து ஐபிஎஸ் ஆனதை அண்ணாமலை மறந்துவிட்டாரா? என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அண்ணாமலை, “நான் படித்த பள்ளியில் மூன்று மொழிகள் இருந்தன. நான் தாய் மொழி தமிழை எடுத்து படித்தேன். 26 வயதில் கன்னடமும், இந்தியும் கற்றுக் கொண்டேன். தற்போது தெலுங்கு கற்றுக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன். பாலகணபதி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.