மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண முன்பதிவு சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடவுளுக்கே கல்யாணம் நடத்தும் ஊரான மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கடவுளின் திருமணத்தை காட்சி பொருளாக்கும் விதமாக 200, 500 ரூபாய் என்று ஆன்லைனில் முன்பதிவு சிறப்பு கட்டணம் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்திருப்பதை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த வருடம் திருக்கல்யாணத்திற்க்கு இது போன்று சிறப்பு கட்டணம் என்ற பெயரில் 200, 500 என பணம் செலுத்தி ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் பெரும்பாலனோருக்கு திருக்கல்யாண டிக்கெட் (பாஸ்) கிடைக்கவில்லை.ஒரு குடும்பத்தில் மூன்று பேர் பதிவு செய்தால் ஒருவருக்கோ அல்லது இரண்டு நபர்களுக்கோ மட்டும் தான் டிக்கெட் கிடைத்தது. ஏதேனும் காரணத்தை கூறி டிக்கெட் கொடுக்க கோயில் நிர்வாகம் மறுத்தது.
இதனால் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் குடும்பத்துடன் திருக்கல்யாணத்தை காண முடியவில்லை.மேலும் அதிகமானவர்கள் முன்பதிவு செய்துவிட்டார்கள் என்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது என்பது கண்துடைப்பு நாடகமாக உள்ளது. ஆன்லைனின் முறையாக பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் முறைகேடாக செல்வந்தர்களுக்கும்,அரசியல் கட்சியினருக்கும் 200, 500 ரூபாய் கட்டண டிக்கெட்டை 5000, 10,000 ரூபாய்க்கு தியேட்டர்களில் திரைப்படம் பார்க்க பிளாக்கில் விற்பது போல் பிளாக்கில் சிலர் டோக்கனை விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டது கடந்த ஆண்டு நடைபெற்றது.
அதேபோல் இந்த வருடமும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு சிறப்பு கட்டணம் என்ற பெயரில் டிக்கெட்கள் விற்பது பல்வேறு முறைகேடுகள் நடைபெற அதிக வாய்புகள் உள்ளது. கடந்த ஆண்டு கட்டணமில்லா பக்தர்கள் திருக்கல்யணத்தை நேரில் காண முடியாமல் நீண்ட நேரம் வரிசையில் நின்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மயங்கியும், அவதிக்குள்ளாகியும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வேதனை அடைந்தார்கள்.
இது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக பக்தர்கள் மத்தியில் எழுந்தது. கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடந்து விடக்கூடாது என்று திருக்கோயில் நிர்வாகம் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே, மதுரையில் நடைபெறும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காட்சி பொருளாக்கி திருக்கல்யாணத்தை வியாபார நோக்கில் பார்க்காமலும், முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக ஆன்லைன் முன்பதிவு சிறப்பு கட்டண முறையை ரத்து செய்தும் ஏழை பணக்காரர்கள் என்று வித்தியாசம் இல்லாமல் கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை அனைவரும் காணும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும்.
மேலும் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் திருக்கல்யாணம் உள்பட தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவதால் இத்திருவிழாவை காண தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்களுக்கு ஆங்காங்கு போதுமான குடிநீர் வசதிகளும்,கழிப்பறை வசதிகளும், போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டும்.
இந்த வருடம் திருக்கல்யாணத்தின் போது எந்த ஒரு குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் திருக்கல்யாணத்தை சீறும் சிறப்போடும் நடைபெற மீனாட்சி அம்மன் திருக்கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.