• Wed. Nov 6th, 2024

24×7 Live News

Apdin News

மீன்பிடி அமைச்சராக இருந்து என்னத்தைச் சாதித்தீர்?

Byadmin

Nov 6, 2024


மீன்பிடி அமைச்சராக ஒரு தமிழ் அமைச்சர் (டக்ளஸ் தேவானந்தா) 4 ஆண்டுகள் பதவி வகித்தும் கடல் கடந்த தீவுகளில் வாழும் சுமார் 1,500 மீனவர்களின் பிரச்சினையைக்கூடத் தீர்த்து வைக்கவில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் கலந்துரையாடலில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், மேலும் கூறுகையில்,

“இலங்கை ஒரு தீவாகக் காணப்படுவதால் மீன்பிடித் தொழிலுக்கு உகந்த நாடாகக் காணப்படுகின்றது. ஆனால், போர் அதனைப் பின்கொண்டு சென்றிருக்கலாம். போர் முடிந்து 15 ஆண்டுகளாகியும் அந்த மீனவர்களின் வாழ்வாதாரம் மீளாதமைக்குப் போரைக் காரணம் கூறுவது மட்டுமே ஆட்சியாளர்களின் பணியாக இருக்கின்றது.

இலங்கையில் காணப்படும் கடற்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி கடல் வடக்கில் காணப்படுகின்றது. இதிலே யாழ்ப்பாணத்தில் மட்டும் 1983 ஆம்  ஆண்டில் 63 ஆயிரம் மெற்றிக்தொன் கடல் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இன்று உலகில் நவீன கடல் அபிவிருத்தி என்கின்றனர். 2024 ஆம் ஆண்டில்கூட 37 ஆயிரம் மெற்றிக்தொன் கடல் உற்பத்தியைத் தொட முடியவில்லை. மீனவர்களுக்கான எந்தவொரு அடிப்படைத் தேவையாவது நூறு வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினால் வீதக் கணக்கே கூறப்படுமே அன்றி முழுமை செய்யப்படவில்லை.

குறைந்த பட்சம் யாழ். குடாநாட்டின் கடல் கடந்த 4 தீவுகளில் காணப்படும் 1,500 மீனவர்களின் தேவைகளேனும் நிவர்த்திக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை.

நான்கு தீவுகளிலும் 1,500 மீனவர்கள் உள்ளனர். ஆனால் இன்று வரை ஒரு எரிபொருள் நிலையம்கூட அங்கே கிடையாது. தீவகத்துக்குக் கொண்டு செல்ல முடியாவிட்டாலும் உடனடியாக கடல் கடந்த தீவுகளான நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு போன்ற இடங்களின் படகு துறைகளை அண்டியேனும் குறிகட்டுவான், கண்ணகியம்மன் இறங்குதுறைகளுக்கு அருகில் எரிபொருள் நிலையத்தை அமைக்கவும், மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றக் காலங்களில் மீனவர்களின்  படகுகளை நங்கூரம் பாய்ச்சிப் பாதுகாக்கவும் துறைமுக வசதியை ஏற்படுத்தி வழங்கியிருந்தால் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை பெருக்கியிருப்பர். மாறாக அவர்களைத் தொடர்ந்தும் தமது சேவகர்களாக வைத்திருக்கவே விரும்பியுள்ளனர்.” – என்றார்.

By admin