பட மூலாதாரம், Getty Images
முகத்தில் ஏற்படும் பருக்கள் என்பது பதின்ம வயதில் மட்டுமல்லாது, அதற்குப் பிறகும் பலருக்கும் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது.
ஆங்கிலத்தில் ‘ஆக்னே’ (Acne), ‘பிம்பிள்ஸ்’ (Pimples) ஆகிய இரு சொற்களும் ஒரே பொருளில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்படுகின்றன.
முகப்பரு (acne) என்பது ஒரு தோல் நோயாகும், இதில் கரும்புள்ளிகள் (Blackheads), வெள்ளைப் புள்ளிகள் (Whiteheads), நீர்க்கட்டிகள் (Cysts), கட்டிகள் (Nodules) எனப் பல வகைகள் உள்ளன.
தோலில் உள்ள துளைகளில் எண்ணெய், தூசி, அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் அடைத்துக் கொள்ளும்போது, சிறிய சிவந்த, வலி மிகுந்த மற்றும் சீழ் நிறைந்த கொப்புளங்கள் உருவாகின்றன.
அவை பருக்கள் (pimples) என்று அழைக்கப்படுகின்றன.
தற்காலத்தில், இந்தப் பருக்களில் இருந்து விடுபட மக்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றனர்.
இதில் சில வீட்டு வைத்தியங்களும் அடங்கும். ஆனால், தவறான முறையைப் பின்பற்றினால் இப்பிரச்னை இன்னும் மோசமடையக்கூடும்.
குறிப்பாக, உங்கள் தோல் அதிக உணர்திறன் கொண்டதாக இருந்தால் பாதிப்பு அதிகமாகும். எனவே, நீங்களாக எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெறுவது அவசியம்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை தமன்னா பாட்டியா இது குறித்துக் கூறிய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நேர்காணலில், “காலையில் பல் துலக்குவதற்கு முன்பு, எனது முகப்பருவின் மீது எனது உமிழ்நீரைத் தடவுவேன், அது பருக்களைக் குணப்படுத்துகிறது. இரவு நேரத்தில் நமது வாயில் பாக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் உருவாகின்றன. இது பருக்களைக் குணப்படுத்த உதவுகிறது” என்று தமன்னா பாட்டியா கூறினார்.
அவரது பேட்டியின் போது பல சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பப்பட்டாலும், முகப்பரு ஏற்படுவதற்கான உண்மையான காரணங்கள் என்ன மற்றும் உமிழ்நீரில் என்னென்ன கூறுகள் உள்ளன என்பதை நாம் தெரிந்துகொள்வது முக்கியம்.
முகப்பரு என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
சருமத்தில் உள்ள துளைகளில் அதிகப்படியான எண்ணெய், இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்கள் சேரும்போது அவை அடைத்துக்கொள்கின்றன.
மேலும், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அந்தப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதுவே முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் நீர்க்கட்டிகள் உருவாகக் காரணமாகிறது.
“முகப்பருக்களுக்கு மிகவும் பொதுவான காரணம் ஹார்மோன் மாற்றங்கள் தான். இது பருவமடைதல், மாதவிடாய், கர்ப்பகாலம் மற்றும் மன அழுத்தம் நிறைந்த காலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த மாற்றங்கள் தோலில் எண்ணெய் உற்பத்தியைத் தூண்டி துளைகளை அடைக்கின்றன. பலருக்குத் தொடர்ந்து பருக்கள் வருவதற்கு ஹார்மோன்களே முக்கியக் காரணம்” என்கிறார் மும்பையைச் சேர்ந்த தோல் மருத்துவர் ஷரிஃபா சௌஸ்.
இது 13 முதல் 19 வயது வரையிலான பதின்பருவத்தினரிடையே அதிகம் காணப்பட்டாலும், இருபது, முப்பது மற்றும் நாற்பதுகளில் இருக்கும் நபர்களிடமும், குறிப்பாகப் பெண்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.
முகப்பரு எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும், இந்த வயதினரிடையே இது மிகவும் பொதுவானது.
மாசுபாடு மற்றும் தூசு தோலில் உள்ள துளைகளை அடைத்து வீக்கத்தை உண்டாக்குகின்றன. காற்றில் உள்ள மாசுக்கள் ‘ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை’ அதிகரித்து, தோலை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றுகின்றன.
“உணவு, மன அழுத்தம் மற்றும் தூக்கம் போன்ற அனைத்தும் முகப்பருவுடன் தொடர்புடையவை. அதிக சர்க்கரை, பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது வீக்கம் மற்றும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறது. மன அழுத்தம் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களை அதிகரிக்கிறது, இது முகப்பரு நிலையை மோசமாக்குகிறது. போதிய தூக்கமின்மை தோலில் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்யும் திறனைக் குறைக்கிறது. எனவே, ஆரோக்கியமான உணவு, சரியான தூக்கம் மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறை அவசியம்” என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் ஷரிஃபா.
உங்கள் சருமத் துளைகளை சுத்தமாக வைத்திருக்க மென்மையான கிளென்சரால் ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தைக் கழுவ வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், முகப்பருவை அழுத்தி உடைப்பதை தவிர்க்குமாறும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
“முகத்தில் அதிகமாக மேக்கப் போடுவது அல்லது துளைகளை அடைக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது சருமத்தில் எண்ணெய் மற்றும் பாக்டீரியாக்களைச் சிக்க வைத்து முகப்பருவுக்கு வழிவகுக்கும். முகத்தை அடிக்கடி கழுவுவதும், தீவிரமாக தேய்ப்பதும், சொறிவதும் சருமத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி நிலைமையை மோசமாக்கும்” என்று மருத்துவர் ஷரிஃபா சௌசே விளக்குகிறார்.
மேலும் “வலுவான மணம் கொண்ட, ஆல்கஹால் சார்ந்த பொருட்கள் சருமத்தை சேதப்படுத்தும் மற்றும் முகப்பரு ஏற்படுவதை அதிகரிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
முகப்பருவுக்கும் வயிற்றுக்கும் என்ன தொடர்பு உள்ளது?
பட மூலாதாரம், Getty Images
நமது குடலின் ஆரோக்கியத்திற்கும் நமது சருமத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது. குடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உடலில் வீக்கம் அதிகரித்து, அது சருமத்தையும் பாதிக்கிறது.
சுகாதாரமற்ற குடல் மற்றும் குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது ஹார்மோன்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது, இது முகப்பருவுக்கும் வழிவகுக்கும்.
உமிழ்நீர் பயன்படுத்துவது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை கொல்லுமா?
பட மூலாதாரம், Getty Images
முகப்பரு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருப்பது போலவே, அவற்றைக் குறித்து மக்களிடையே பல தவறான கருத்துகளும் நிலவுகின்றன.
பருக்களைக் கிள்ளினால் அவை விரைந்து குணமாகும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், அவ்வாறு செய்வது வீக்கத்தை அதிகரிப்பதோடு, முகத்தில் நிரந்தரமான தழும்புகளை உண்டாக்கும்.
எண்ணெய் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தக் கூடாது என்றொரு கருத்து உள்ளது. ஆனால், மாய்ஸ்சரைசர் பயன்படுத்தாமல் இருப்பது, முகப்பரு நிலையை மேலும் மோசமாக்கும் என்றும் நம்பப்படுகிறது.
முகப்பரு மீது எச்சிலைத் தடவுவது அதைக் குணப்படுத்தும் என்றொரு கருத்தும் உள்ளது.
இது குறித்து மருத்துவர் கதிஜா நாசிகாவிடம் கேட்டோம். சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் தோல் மருத்துவப் பிரிவில் ஆலோசகராக மருத்துவர் கதிஜா பணிபுரிகிறார்.
“உமிழ்நீர் சுரப்பிகளில் சுரக்கும் நொதிகள் (Enzymes), முகப்பருவை உண்டாக்கும் ப்ரோக்னிபாக்டீரியம் ஆக்னே (Procnibacterium acnes) போன்ற பாக்டீரியாக்களைக் கொல்லும் திறன் கொண்டது என்று சில நூல்களில் கூறப்பட்டிருப்பது உண்மைதான். இருப்பினும், நாம் உமிழ்நீரை முகத்தில் தடவும்போது, வாயில் உள்ள மற்ற தேவையற்ற பாக்டீரியாக்களையும் சேர்த்தே சருமத்தில் பரப்புகிறோம். இது நன்மையை விட தீமையையே அதிகம் விளைவிக்கும். எனவே, முகப்பரு மீது உமிழ்நீரை தடவுவதால் எந்தப் பயனும் இல்லை” என்று அவர் விளக்கினார்.
“பருக்களைக் குறைக்க, மருத்துவரை பரிசோதித்து மருந்துகளை பரிந்துரைப்பார். இந்த மருந்துகள் நபருக்கு நபர் மாறுபடும். ஒரு மருந்து அனைவருக்கும் வேலை செய்யாது. கொலாஜன் அல்லது நிறமி மற்றும் மெலனின் குறைவதால் முகப்பரு வடுக்கள் ஏற்படுகின்றன, மேலும் அவை உமிழ்நீரைப் பயன்படுத்துவதால் மறைந்துவிடாது” என்று மருத்துவர் கதிஜா குறிப்பிட்டார்.
உமிழ்நீரில் என்ன இருக்கிறது?
பட மூலாதாரம், Getty Images
மனித உமிழ்நீரில் முக்கியமாக 98 சதவிகிதம் நீர் உள்ளது.
மீதமுள்ள இரண்டு சதவிகிதம் பல வேதிப்பொருட்களின் கலவையாகும். அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பணிகளைச் செய்கின்றன.
இதில் உள்ள அமைலேஸ் போன்ற நொதிகள் உணவைச் செரிக்க உதவுகின்றன. உணவை மெல்லும்போது மாவுச்சத்தை உடைக்க இது உதவுகிறது. நாவில் உள்ள லிபேஸ் (Lipase) கொழுப்பைச் செரிக்க உதவுகிறது.
உமிழ்நீரில் லைசோசோம்கள், லாக்டோஃபெரின் மற்றும் இம்யூனோகுளோபுலின்கள் போன்ற பாதுகாப்பு புரதங்களும் உள்ளன. இது வாய்வழி தொற்றுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
“உமிழ்நீரில் எலக்ட்ரோலைட்டுகள் (சோடியம், பொட்டாசியம், கால்சியம், பைகார்பனேட்), ஈரப்பதத்தை வழங்கும் மியூசின்கள் (Mucins) மற்றும் சிறிய அளவிலான வளர்ச்சி காரணிகள் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், உமிழ்நீர் என்பது வாய்வழிச் சூழலுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சமச்சீர் திரவமாகும்,” என்கிறார் புனேவின் அப்பல்லோ மருத்துவமனையின் காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை ஆலோசகர் சுஷ்ருத் தேஷ்முக்.

“உணவின் சுவையை அறியவும், விழுங்கவும் உதவுவதுடன், உமிழ்நீர் வாய் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது வாயை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்கிறது, சாப்பிட்ட பிறகு அமிலத்தன்மையைக் குறைக்கிறது, மற்றும் பற்சிதைவு அல்லது ஈறு நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்துகிறது”
“தோலில் உமிழ்நீரைப் பயன்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. உமிழ்நீரில் சில கிருமி நாசினிகள் இருந்தாலும், அது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களையும் கொண்டுள்ளது. முகப்பருவுக்கு இதைப் பயன்படுத்துவது பிரச்னையை மோசமாக்கும் அல்லது புதிய பாக்டீரியாக்கள் நுழைய வழிவகுக்கும்” என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் சுஷ்ருத் தேஷ்முக்.
“சருமத்திற்கெனத் தனிப்பட்ட பாதுகாப்பு அடுக்கு மற்றும் குணப்படுத்தும் வழிமுறைகள் உள்ளன. இவை எதுவும் உமிழ்நீரைச் சார்ந்து இருப்பதில்லை.”
“எனவே, முகப்பருவுக்கு சிகிச்சையாக உமிழ்நீரைப் பயன்படுத்துவதில் மருத்துவ ரீதியாக எந்த அடிப்படையும் இல்லை. மாறாக, இது புதிய சிக்கல்களை உருவாக்கவே அதிக வாய்ப்புள்ளது.”
உணவுமுறை மாற்றம், புதிய சிகிச்சை, மருந்துகள் அல்லது உடற்பயிற்சி போன்ற உங்கள் வாழ்க்கை முறையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய விரும்பினால், ஒரு மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த பயிற்சியாளரின் உதவியைப் பெறுவது அவசியம்.
உங்கள் உடல்நிலை மற்றும் அறிகுறிகளை மருத்துவர் முறையாகப் பரிசோதித்து அளிக்கும் ஆலோசனையின் பிறகே மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு