பட மூலாதாரம், Getty Images
இன்றைய (28/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
என்சிஇஆர்டி பாடநூலில் மகாகும்பமேளா உள்ளிட்ட பல புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பல வருடங்களாக பாடநூலில் இடம்பெற்ற முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் வரலாறு நீக்கப்பட்டுள்ளதாகவும் தி இந்து ஆங்கில நாளிதழின் செய்தி கூறுகிறது.
“தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள 7ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாடப் புத்தகம், வரலாறு, புவியியல், சமூக மற்றும் அரசியல் அறிவியல் என மூன்று தனித்தனி புத்தகங்களை ஒன்றாகச் சுருக்கியுள்ளது. 4 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்கள் 2025-26 கல்வியாண்டிற்கான புதிய பாடப் புத்தகங்களைப் பெறுகின்றனர்” என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், “மத்திய அரசின் கீழான என்சிஇஆர்டி கல்விமுறையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 7ஆம் வகுப்பு பாடநூலில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது, பெரிய அளவிலான மறுசீரமைப்புகளை உள்ளடக்கிய புதிய பாடநூலாகக் கருதப்படுகிறது. இதில், பல புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு ஏற்கெனவே இருந்தவை நீக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுப் பாடங்களில் இந்திய வம்சங்கள், புவியியல் அம்சங்கள் மற்றும் மகாகும்பமேளா பற்றிய புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில், சுமார் 65 கோடி மக்கள் வந்து புனித நீராடினர் என்ற குறிப்பு உள்ளது,” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, “இந்தப் பாடப்பகுதியில் முன்பிருந்த முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் அதன் வெளியே உள்ள நாடுகளிலும் இருக்கும் புனிதத் தலங்கள் மற்றும் புனித யாத்திரைகள் பற்றியும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயத்தில் 12 ஜோதிர்லிங்கங்கள், சார்தாம் யாத்திரை, சக்தி பீடங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
‘புனித புவியியல்’ என்ற அத்தியாயத்தில் இந்திய நதிகளின் சங்கமங்கள், மலைகள் மற்றும் காடுகள் போன்ற இடங்களின் விவரங்கள் உள்ளன. என்சிஇஆர்டியின் 7ஆம் வகுப்பு பாடநூலின் இரண்டாம் பகுதி அடுத்த சில மாதங்களில் வெளியிடப்பட உள்ளது” என்று தி இந்து ஆங்கில நாளிதழின் செய்தி கூறுகிறது.
ரூ.64,000 கோடியில் 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்
பட மூலாதாரம், Getty Images
இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் இடையே திங்கள்கிழமை (ஏப்ரல் 28) ஒப்பந்தம் கையெழுத்தானதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடற்படையின் ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ போர்க் கப்பலில் நிலைநிறுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடம் இருந்து இந்த விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ய உள்ளதாகவும் இந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், “இந்த நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் படைக்காக 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்த நிலையில், தற்போது கடற்படை பயன்பாட்டுக்காக ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கைகள் கொண்ட 4 போர் விமானங்கள் என மொத்தம் 26 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இந்த ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் கடந்த 9ஆம் தேதி நடந்த பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையொப்பமானது,” என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஒப்பந்தம் கையொப்பமான 5 ஆண்டுகளில் போர் விமான விநியோகத்தை டசால்ட் நிறுவனம் தொடங்கும். 2030ஆம் ஆண்டுக்குள் 26 விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைத்துவிடும்.
போர் விமானங்களுடன் அதன் துணை உபகரணங்கள், ஆயுதங்கள், உதிரிபாகங்கள் மற்றும் ஆவணங்களையும் டசால்ட் நிறுவனம் இந்திய கடற்படைக்கு விநியோகிக்க உள்ளது என்றும், அதோடு போர் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை அந்த நிறுவனம் அளிக்க உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
‘வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை’
பட மூலாதாரம், Getty Images
தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்ற ஒரு விவாதத்தில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், “தமிழகத்தில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்ததாக தினத்தந்தி நாளிதழின் செய்தி கூறுகிறது.
மேலும் அச்செய்தியில், “தமிழக சட்டப் பேரவையில் காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பண்ருட்டி வேல்முருகன், ‘தமிழகத்தில் வேலை தேடி வரும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும், அவர்கள் காவல்துறைக்குப் பெரிய தலைவலியாக மாறி உள்ளதாகவும்’ கூறினார். மேலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வடமாநிலத்தவர்கள் பிரச்னைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
தர்மபுரியில் சுற்றுலா வந்த வடமாநிலத்தவர்களின் வாகனத்தில் ‘பெர்மிட்’ இருக்கிறதா என சோதனை செய்ய முயன்ற காவல்துறை அதிகாரியை அடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போனால் மத்திய உள்துறையில் இருந்தும் டெல்லியில் இருந்தும் தமிழக காவல்துறைக்கு அழுத்தங்கள் வருவதாகவும்” குறிப்பிட்டார்.
எனவே வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல தமிழகத்துக்கு வரும் பிற மாநில தொழிலாளர்களைக் கண்காணிக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ‘அதுபோன்று நம்முடைய காவல்துறைக்கு எந்த அழுத்தமும் வரவில்லை’ என்று மறுப்பு தெரிவித்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.
அதோடு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், “வட மாநிலத்தவர் வருகை குறித்தும், தமிழகத்தில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது பற்றிப் பரிசீலிக்கப்படும்” என்றும் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13இல் தீர்ப்பு
பட மூலாதாரம், Getty Images
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ஆம் தேதி இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் செய்தி கூறுகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பான புகாரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அண்மையில் 9 பேரும் மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் சாட்சி விசாரணை குறித்து நீதிபதி நந்தினிதேவி கேள்விகள் கேட்டார்.
தொடர்ந்து எதிர்த்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர துணை ஆய்வாளர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு மற்றும் எதிர்த்தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் தேதி வழங்கப்படும் என மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவியை, கரூர் குடும்ப நல நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
நடுவானில் திடீரென பிரேக் பழுது – 326 பேர் உயிரைக் காப்பாற்றிய விமானியின் சாதுர்யம்
பட மூலாதாரம், Getty Images
தோகாவில் இருந்து வந்த விமானத்தில் நடுவானில் பிரேக் பழுதான நிலையில், விமானியின் சாதுர்யத்தால் அந்த விமானம் சென்னையில் பத்திரமாகத் தரை இறங்கியதாக தினத்தந்தி நாளிதழின் செய்தி கூறுகிறது. இதனால் 326 பேர் உயிர் தப்பியதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தோகாவில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் 314 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என 326 பேருடன் வந்து கொண்டிருந்தது. அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 2.40 மணிக்குத் தரை இறங்க வேண்டும்.
“விமானத்தைத் தரை இறக்குவதற்கு முன்பாக விமானி, இயந்திரங்கள் அனைத்தையும் சரிபார்த்தார். அப்போது விமானத்தின் பிரேக் சரிவர இயங்காமல் இருந்தது. இதனால் விமானம் தரை இறங்குவது ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து, விமானம் அவசரமாகத் தரையிறங்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான நிலைய அவசரக்கால பாதுகாப்பு பிரிவுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஓடுபாதையில் தீயணைப்பு வாகனங்கள், அதிரடிப்படை வீரர்கள், மருத்துவக் குழுவினர், மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்,” என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் “அந்த விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது. கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானி, விமானத்தை மிகவும் பத்திரமாக, குறிப்பிட்ட நேரத்துக்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே நடைமேடை 27இல் பாதுகாப்பாகத் தரையிறக்கி நிறுத்தினார்.
விமானியின் சாதுர்யமான நடவடிக்கையால் விமானத்தில் பயணித்த 314 பயணிகள் உள்பட 326 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் சென்னை விமான நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் நிலவிய பரபரப்பு ஓய்ந்தது” என்று அந்தச் செய்தி கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.