காஞ்சிபுரம்: சாம்சங் நிர்வாகம் பணியில் சேர்த்து கொள்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த சாம்சங் ஊழியர்கள் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படாத நிலையில் பலர் பணிக்கு திரும்ப முடிவு செய்த நிலையில் மற்றவர்களும் போராட்டத்தை முடித்துக் கொண்டதாக ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு சிஐடியு தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதனிடையே பணி நேரத்தில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 23 சிஐடியு தொழிற்சங்க ஊழியர்களை சாம்சங் நிர்வாகம் தற்காலிக இடைநீக்கம் செய்தது.
இதனால் விரக்தியடைந்த மற்ற ஊழியர்கள் சாம்சங் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு காஞ்சிபுரம் அருகே தொடர் போராட்டமும் நடத்தி வந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்யப்பட்டது. இந்தப் போராட்டம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், சாம்சங் ஊழியர்கள் அனைவரும் தொழிற்சாலை முன்பு வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் தொழிற்சாலை முன்பு பரபரப்பான சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில் சாம்சங் நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு வந்தால் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்களுக்கு சாம்சங் நிர்வாகம் அடையாள அட்டை தடை நீக்க கோரிக்கை என அச்சிடப்பட்ட விண்ணப்ப படிவத்தை வழங்கியது. இதனைப் பெற்று ஊழியர்கள் பூர்த்தி செய்தனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 23 பேர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இன்று முதல் ஊதியம் வழங்கப்படும் என்றும் சாம்சங் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.
இன்று முதல் குழுக்களாக அவரவர் மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பப்பட்டு பயிற்சி வழங்கி அதன் பிறகு பணியில் சேர்க்கப்படுவர் என்றும் சாம்சங் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. பயிற்சி அளித்து பணி என்று சாம்சங் நிர்வாகம் கூறி இருப்பதால் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் துறை மாற்றப்படுவார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.