• Wed. Feb 12th, 2025

24×7 Live News

Apdin News

முட்டிப் பார்த்த பொலிஸார்! எட்டி உதைத்த மக்கள்!! (படங்கள் இணைப்பு)

Byadmin

Feb 12, 2025


யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றிப் பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி மாபெரும் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு அச்சுறுத்தல்கள், கெடுபிடிகள், எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இந்த விகாரைக்கு எதிராக நேற்று மாலை முதல் ஆரம்பமாகிய போராட்டம், இரண்டாவது நாளாக இன்று மாபெரும் போராட்டமாக இடம்பெற்றது.

விகாரைக்கு முன்பாகப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களும், பொதுமக்களும் எனப் பல நூற்றுக்கணக்கானோர் இன்று காலை முதல் ஒன்று திரண்டிருந்தனர்.

இந்தப் போராட்டம் நடைபெறும் இடத்தில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு, தடைகள் போடப்பட்டு புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரமாக இருந்தது.

இவ்வாறான பல்வேறு அச்சுறுத்தல்கள், கெடுபிடிகள், எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் கறுப்புக்கொடிகளுடன் பெருமளவில் திரண்ட தமிழ் மக்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, “அகற்று அகற்று சட்டவிரோத விகாரையை அகற்று, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, இந்த மண் எங்களின் சொந்த மண், எமது நிலம் எமக்கு வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களைப் போராட்டக்காரர்கள் எழுப்பினர்.

இதன்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டதால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டதால் முறுகல் நிலை ஏற்பட்டு பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

எனினும், அச்சுறுத்தல்கள், கெடுபிடிகள், எதிர்ப்புக்குகளுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் விகாரைக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post முட்டிப் பார்த்த பொலிஸார்! எட்டி உதைத்த மக்கள்!! (படங்கள் இணைப்பு) appeared first on Vanakkam London.

By admin