பட மூலாதாரம், TamilNadu Assembly
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 23) ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலளிக்கும்போது, அவரது சில கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்,
முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது உரையின்போது, தனது அரசியல் பயணம் குறித்து விரிவாக பேசினார். சிங்கப்பெண் சிறப்புப் படை, 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற தமது அரசின் செயல்பாடுகள் சிலவற்றைக் குறிப்பிட்டு பேசினார்.
லஞ்சம் ஊழல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், TamilNadu Assembly
பின்னர், கடந்தகால ஆட்சிகள் குறித்த பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்தார். ‘ஆட்சி செய்ய தெரியாது’ என எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்தார்.
“மக்கள் சேவை செய்ய தெரிந்த அளவு, முறைகேடுகள் செய்யத் தெரியாது” என முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசினார்.
அறிவிக்கப்படாத மின்வெட்டு இல்லாமல் செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். “மக்கள் நலனே முக்கியம்” எனத் தெரிவித்த முதலமைச்சர், “கண்மூடித்தனமாக ஒன்றிய அரசை எதிர்க்கமாட்டோம்” என்றும் “அதேநேரம் தமிழக நலன்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்” எனவும் கூறினார்.
சட்டம்-ஒழுங்கு குறித்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், “முந்தைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி இல்லாமல் இருந்தது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். “அப்போது, போதைப் பொருள் நடவடிக்கையை ஆளும்கட்சி ஏன் தடுக்கவில்லை?” எனவும் கேள்வி எழுப்பினார்,
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், முந்தைய ஆட்சியில் டாஸ்மாக்கில் கட்சி நிதி (Party fund) என்ற பெயரில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டினார்.
இதற்கு தி.மு.க தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அப்போது இடைமறித்த சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், பின்னர் பேச அனுமதி தருவதாக கூறினார். ஆனால், தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பிறகு பேச அனுமதிப்பதாக மீண்டும் மீண்டும் சட்டப்பேரவைத் தலைவர் கூறியும் அவையில் அமளி நிலவியது.
அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், “முதல்வர் பேசி முடித்த பின்னர் பேசும்படி முந்தைய ஆட்சியில் கூறியபடி எதிர்க்கட்சி தற்போது நடந்துகொள்ளவேண்டும்” என வலியுறுத்தினார்.
பட மூலாதாரம், TamilNadu Assembly
பேரவையில் அமைதி காக்கும்படி சட்டப்பேரவைத் தலைவர் கேட்டுக்கொண்ட பின்னரும் தொடர்ந்து அமளி நிலவியது.
கட்சி நிதி என்ற வார்த்தைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், “எதிர்க்கட்சிகள் பல வார்த்தைகளைப் பயன்படுத்தியும் ஆளும்கட்சியினர் அமைதி காத்தனர்” எனக் கூறினார்.
எந்தக் கட்சி என முதலமைச்சர் குறிப்பிடவில்லை என, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில் தெரிவித்தார்.
இதையடுத்து, முதலமைச்சரை தொடர்ந்து பேசுவதற்கு சட்டப்பேரவைத் தலைவர் அழைப்பு விடுத்தார். ஆனாலும் அவையில் அமளி நிலவியது. இதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பேச அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முதலமைச்சர் பேசினால் அது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக கூறினார்.
ஆதாரம் இல்லாமல் பேசப்பட்டிருந்தால் அதை நீக்குவதற்குத் தமக்கு உரிமை இருப்பதாக கூறிய சபாநாயகர், முதலமைச்சர் ஜோசப் விஜயை பேச அனுமதித்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசினார். ஆனால், அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இறுதியில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “ஆளுநர் வரும்போது மரபு மீறப்பட்டு இரண்டு முறை ஏன் தேசிய கீதம் பாடப்பட்டது எனக் கேள்வி எழுப்பினேன். இதில் என்ன தவறு எனக் கேட்டனர். என்னவிதமான சமரசம் அடைந்தீர்கள் எனக் கேட்டேன்” எனக் கூறினார்.
“கலைஞர் படத்திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் வந்தபோது தேசிய கீதம் பாடப்பட்டதாகக் கூறினர்” எனப் பேசிய உதயநிதி, “குடியரசுத் தலைவர் வரும்போது அதற்கென புரோட்டாகால் படியே பாடப்பட்டது” என்றார்.
“நான் முதல்வன் திட்டம் ஏன் முடக்கப்பட்டது எனக் கேட்டபோது என்னென்னமோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மின்வெட்டு குறித்து தி.மு.க மீது பழிபோட்டுள்ளனர்” என உதயநிதி தெரிவித்தார்.
“பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயிகள் போராட்டம் குறித்துக் கேட்டபோது, தி.மு.க தூண்டிவிடுவதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தை முதலமைச்சர் கொச்சைப்படுத்தினார்” எனவும் அவர் விமர்சித்தார்.
சட்டம்-ஒழுங்கு பிரச்னைக் குறித்துக் கேட்டபோது மீண்டும் ஒரே பதிலைக் கூறியதாகக் குறிப்பிட்ட உதயநிதி, ” ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே எல்லாம் மாற்றுவோம் என்றார்கள். முதலமைச்சரின் காவல்துறை என்ன செய்கிறார்கள் என்பது தான் கேள்வி” எனத் தெரிவித்தார்.
ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரத்தை தான் கொடுப்பதாகவும் உதயநிதி கூறினார்.
“நாங்கள் யார் தயவிலும் இல்லை என முதலமைச்சர் கூறுகிறார். அவ்வாறு இல்லாவிட்டால் அ.தி.மு.கவின் ஒரு பிரிவை மட்டும் ஏன் பார்க்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பிய உதயநிதி, ” கட்சித் தலைவரைப் பார்க்கும்போது புது சோபா போனது. பீரோ புல்லிங் போல ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினராக இழுத்துக் கொள்கின்றனர்” என சாடினார்.
இதற்கு எந்தவித பதிலும் இல்லாமல் படப்பிடிப்புக்கு வரும்போது என்ன நடித்துக் கொண்டு போவாரோ அதுபோல முதலமைச்சரின் உரை அமைந்துள்ளதாகவும் உதயநிதி விமர்சித்தார்.
ஆடியோ லாஞ்ச், டிரெய்லர் பாணியை முதலமைச்சர் கடைபிடிப்பதாகக் கூறிய உதயநிதி, “சட்டப்பேரவையில் விசில் அடிக்க ஆரம்பித்துவிட்டனர். அமைச்சர்கள் நடனம் ஆடுவார்கள் என நினைக்கிறேன். சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக வேண்டும் என்ற நினைப்பில் பேசுகின்றனர். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என்றார்.
“சட்டப்பேரவையில் நடிக்கத் தொடங்கிவிட்டனர். பேரவையை ஷூட்டிங் ஸ்பாட் ஆக மாற்றிவிட்டனர். ஊழலுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றம் செல்லட்டும். அவர்கள் இஷ்டத்துக்குப் பேசுவதை அமர்ந்து கேட்டுக் கொண்டு இருக்க வேண்டுமா?” எனவும் கேள்வி எழுப்பினார்.
“தேர்தல் வாக்குறுதியில் வேலையில்லாதவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் கொடுப்பதைப் பற்றியும் மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாய் கொடுப்பதைப் பற்றியும் எரிவாயு சிலிண்டர் கொடுப்பதைப் பற்றியும் எந்தவித அறிவிப்பும் இல்லை” எனவும் உதயநிதி தெரிவித்தார்.
உதயநிதியின் செய்தியாளர் சந்திப்புக்கு தமிழ்நாடு மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” முதலமைச்சர் தலைமையிலான அரசு துறைரீதியாக என்னென்ன மாற்றங்களைச் செய்துள்ளது என்பது உள்பட அனைத்தையும் உள்ளடக்கியதாக அவரது உரை இருந்தது” என்றார்.
நேரலையில் கட்சி நிதி எனக் கூறியதும் முதலமைச்சரைப் பேச விடாமல் தி.மு.க உறுப்பினர்கள் தடுத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
“உள்ளே இருக்க முடியாமல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆனாலும், முதலமைச்சரின் உரையை முழுமையாக எதிர்க்கட்சித் தலைவர் பார்த்துவிட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார்” எனவும் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.
“அனைவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். கலைஞர் பாணியில் அவர் மட்டும் தான் பேச முடியும். எம்.ஜி.ஆர் பேசுவதை எவ்வாறு கிண்டல் செய்தனர் என்பது தெரியும். எம்.ஜி.ஆருக்கு என்ன சொன்னார்களோ அதைத் தான் முதலமைச்சருக்கும் செய்கிறார்கள்” எனவும் தி.மு.கவை அமைச்சர் விமர்சித்தார்.
பள்ளிக்கல்வித்துறை, மின்துறையில் கட்சி நிதி என்ற பெயரில் வசூல் செய்யப்பட்டதாகக் கூறிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், “இந்த நிதி யாருக்குச் சென்றது?” எனக் கேள்வி எழுப்பினார்.
“என்னென்ன வகைகளில் கட்சி நிதி வாங்கப்பட்டது என்பது ஊருக்குத் தெரியும். பணி மாறுதலுக்கு ஒரு ரூபாய் கொடுக்காமல் வாங்கினார்கள் எனக் கூறட்டும். தற்போது ஒவ்வொரு துறையும் நேர்மையாக செயல்படுகிறது” எனவும் அவர் தெரிவித்தார்.
தி.மு.க ஆட்சியில் பொதுமக்களை யாரும் சந்திக்க முடியாத நிலை இருந்தது. தற்போது அமைச்சர்களைப் பார்ப்பதற்கு இரவு எட்டு மணி, ஒன்பது மணி வரை காத்திருந்து பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதிமுகவின் ஒரு பிரிவை மட்டும் முதலமைச்சர் சந்தித்துப் பேசியதாக உதயநிதி முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த அவர், ” எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டோம். உள்கட்சி பிரச்னையில் சந்தித்தால் நன்றாக இருக்காது எனக் கூறினர்” என்றார்.
“அ.தி.மு.கவில் பிரச்னை இருப்பதாகக் கூறியதால் அடுத்தகட்ட தலைவர்களைச் சந்திப்பது என முடிவெடுத்து, மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அவர்களை வைத்துத் தான் இந்த ஆட்சி நடக்கிறதா என்றால் இல்லை” என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் குறிப்பிட்டார்.
தங்கள் கூட்டணியில் 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகவும் அ.தி.மு.கவின் ஒரு பிரிவினரை சந்தித்தில் எந்தவித தவறும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நான் முதல்வன் திட்டம் தொடர்பான சர்சைக்குப் பதில் அளித்த அமைச்சர், ” திரும்பவும் தவறான தகவலைப் பரப்புகின்றனர். அந்தத் திட்டம் முடக்கப்படவில்லை. நான் முதல்வன் என்பதால் குழப்பம் ஏற்படுகிறது. தற்போது திறன் மேம்பாடு எனப் புரியும்படியாக மாற்றப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
த.வெ.கவினர் மீதான குற்றச்சாட்டு குறித்துப் பேசும்போது, “இரண்டு பேர் மீது பாலியல் வழக்கு என்றார்கள். ஒன்றாம் தேதியே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.
யாருக்கும் எந்தவித பாரபட்சமும் இல்லை. முதலமைச்சர் யாரையும் காப்பாற்ற மாட்டார் எனவும் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் குறிப்பிட்டார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு