பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், நிதின் ஶ்ரீவத்சவா
- பதவி, பிபிசி ஹிந்தி ஆசிரியர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோதி 25 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததைப் பற்றிப் பரவலான விவாதங்கள் நடந்து வருகின்றன.
குஜராத் முதலமைச்சராகவும், பின்னர் இந்திய பிரதமராகவும் இருந்து அவர் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மோதியின் ஆதரவாளர்கள் இதைக் கொண்டாடி வரும் நிலையில், மோதியின் அமைச்சரவையும் அவரைப் பாராட்டும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
ஆனால் மறுபுறம், விமர்சகர்கள் கடந்த சில ஆண்டுகளில் மோதியின் பொது வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனித்து மதிப்பீடு செய்து வருகின்றனர். மோதியும் ஜவாஹர்லால் நேருவும் தவிர தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவி வகித்த வேறு யாரும் நாட்டில் இல்லை.
பொதுவாக, மூன்றாவது ஆட்சிக் காலம் என்பது சவால்கள் அதிகரிக்கத் தொடங்கும் காலமாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும். பழைய முடிவுகளோடு சேர்ந்து பல புதிய முடிவுகளையும் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒவ்வொரு முடிவையும் குறிப்பிட்ட நோக்கிலும், விரிவான பார்வையிலும் மதிப்பிடத் தொடங்கும் காலம் இது.
இந்நிலையில், தற்போது நரேந்திர மோதி அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் பத்து முக்கிய பிரச்னைகளை, பிபிசி ஹிந்தி ஆசிரியர் நிதின் ஸ்ரீவத்சவா இந்தக் கட்டுரையில் விவரித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
1. தேர்தல் அமைப்பு
கடந்த சில காலமாக தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேர்தல்களின் நடுநிலைத் தன்மை குறித்து மக்களின் மனதில் சந்தேகங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன.
இந்த அமைப்பில் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாகக் கருதப்படும் இரு தேர்தல் ஆணையர்கள், தலைமைத் தேர்தல் ஆணையரின் முடிவுகள் குறித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து அமைச்சரவை செயலரிடம் முறையிடும் அளவுக்கு நிலைமைகள் இருக்கின்றன.
அதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையுடன் டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் ஆணையம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி என்ன பதில் அளிப்பார் என்பதை நாடு முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
2. பொருளாதாரம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
இரண்டாவது அம்சம் நாட்டின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான அளவுகோலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் தொடர்புடையது. நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி தரவுகளின் உண்மைத்தன்மை குறித்து தேசிய அளவிலான விவாதத்தைத் தொடங்கியது அரசின் பெரிய துறை எதுவும் அல்ல; ஓய்வுபெற்ற ஓர் அரசு ஊழியர்தான்.
அவர் எழுப்பிய விவாதம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அரசின் கூற்றுகளுக்கும், களத்தில் காணப்படும் நிதர்சனத்திற்கும் இடையிலான இந்த முரண்பாடு பொருளாதார நிபுணர்களையும், பொது மக்களையும் சிந்திக்க வைத்துள்ளது.
டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் சூழலில், அரசின் பொருளாதாரக் கூற்றுகள் எந்த அளவுக்கு உண்மை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பங்குச் சந்தைகளில் தொடர்ந்து நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது. வெளிநாட்டு முதலீடுகளும் வேகமாகக் குறைந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் வெளியிடப்படும் ஜிடிபி புள்ளிவிவரங்கள் நம்பகமானவை என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பது அரசுக்கு ஒரு சவாலாக மாறியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
3. பணவீக்கம்
மூன்றாவது அம்சம் நேரடியாக உங்கள் பணப்பையுடன் தொடர்புடையது. இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயரக்கூடும் என்று கூறுகிறது. அதோடு ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. விலைவாசியும் உயர்ந்து வருகிறது. இந்திய வங்கிகள் வெளிநாடுகளில் இருந்து வைப்புத் தொகைகளை திரட்டியுள்ளன.
இதை எப்படிப் பார்க்கலாம்?
மிகவும் கடினமாகப் படித்தும் தேர்வில் குறைந்த மதிப்பெண்களைப் பெறுவது போன்ற நிலை இது. அதாவது, கடுமையாக உழைத்தாலும் அதன் பலன் வெளிப்படையாகத் தெரியவில்லை.
பணவீக்கம் நேரடியாக மக்களின் பணப்பையைப் பாதிக்கிறது.
தேநீர், பெட்ரோல், மளிகைப் பொருட்கள் போன்ற அன்றாடத் தேவைகளின் விலைகள்கூட உயர்ந்து வரும் நிலையில், அரசுக்கு எதிராக உருவாகும் பொது மக்களின் அதிருப்தியை இந்த அரசு எவ்வாறு கையாளப் போகிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
4. அரசியல் எதிர்க்கட்சிகள்
நான்காவது அம்சம் அரசியல் சூழ்நிலையுடன் தொடர்புடையது.
தற்போதைய எதிர்க்கட்சிகளும், குறிப்பாக ராகுல் காந்தியின் தாக்கத்துடன் கூடிய அரசியல் அணுகுமுறையும், அரசுக்கு கூடுதல் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன.
தேசிய தலைநகர் டெல்லியில் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது.
மறுபுறம், ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை இந்த விவகாரம் குறித்துப் பரவலான விவாதங்கள் நடந்து வருகின்றன.
5. இளைஞர்கள் மற்றும் சமூகப் பிரச்னைகள்
ஐந்தாவது அம்சம் நாட்டின் இளைஞர்கள் மற்றும் சமூகப் பிரச்னைகள் தொடர்புடையது. இன்றைய இளைஞர்கள் அரசின் கொள்கைகளையும் முடிவுகளையும் குறித்து வெளிப்படையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வலதுசாரி ஆதரவாளர்கள் இணையதளத்திலும், நேரடியாகவும் முன்வந்து அவர்களைத் தடுக்க முயன்றபோதிலும், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் இருந்து இளைஞர்கள் பின்வாங்கத் தயாராக இல்லை.
நீட் தேர்வு பிரச்னைகள் முதல் அரசுப் பள்ளிகளின் நிலை வரை, ஒவ்வொரு விவகாரத்தையும் சமூக ஊடகங்கள் வழியாகவே பொது சர்ச்சையின் மையமாக மாற்றி வருகின்றனர்.
நீட் தேர்வு சர்ச்சைகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் வீதியில் இறங்கி கல்வி அமைப்பின் வெளிப்படைத்தன்மையை கேள்வி எழுப்பினர். இளைஞர்களின் கோபத்தை இனிமேலும் புறக்கணிக்க முடியாது என்பதற்கான சான்றாக இது பார்க்கப்படுகிறது.
டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் வாரக்கணக்கில் போராட்டம் நடத்தி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியதையே எதிர்க்கட்சிகள் தங்களது முக்கிய அரசியல் வெற்றியாகக் கருதுகின்றன.
6. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசியலின் உட்புற நிலை
ஆறாவது அம்சம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் நிலவும் அரசியல். கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள்கூட இப்போது அரசுக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன. இதைப் புறக்கணிக்க முடியாது.
பிஹாரில், சிராக் பாஸ்வான் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து அரசை நேரடியாகக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
மறுபுறம், உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளைப் பிரிப்பது குறித்து பிரதமருடன் பேசியதாக ஓம் பிரகாஷ் ராஜ்பர் ஊடகங்களிடம் கூறி வருகிறார்.
ஆனால், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
கூட்டணிக் கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிரான கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்து வரும் நிலையில், அவர்களை ஒருங்கிணைப்பதற்காக அரசு இன்னும் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டிய தேவை இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
7. அரசின் மதிப்பும் நற்பெயரும்
ஏழாவது அம்சம், ஒரு காலத்தில் மிகவும் தீர்மானகரமானதாகக் கருதப்பட்ட அரசின் மதிப்பு மற்றும் நற்பெயர் தொடர்புடையது.
ஆனால் இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்துப் பல மாதங்களாக குழப்பம் நிலவி வருகிறது.
கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்தும் கொள்கை தொடர்பான விவகாரத்திலும் குழப்பம் ஏற்பட்டபோது, பலரும் அதை முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதமாகவே கருதினர்.
8. அமைச்சரவை மாற்றம்
எட்டாவது அம்சம் அமைச்சரவை மாற்றம் தொடர்புடையது.
அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும் அல்லது காலியாக உள்ள பதவிகள் நிரப்பப்படும் என்று நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக நீண்டகாலமாகக் காணப்படும் அலட்சியமான அணுகுமுறை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
முக்கிய அமைச்சகங்களில் நிரந்தரமான, முழுநேர தலைமையின் பற்றாக்குறை இருப்பது, கொள்கை ரீதியாக தேவையான வேகம் குறைவதற்கு மட்டும் வழிவகுப்பதில்லை; சம்பந்தப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகளையும் நேரடியாக பாதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாஜக ஆளும் மாநிலங்களில்கூட அமைச்சரவை மாற்றம் மற்றும் பதவிகள் தொடர்பாக அடிக்கடி ஊகங்கள் எழுந்து வருகின்றன.
பட மூலாதாரம், Getty Images
9. நாட்டிலுள்ள முதலீடுகள்
ஒன்பதாவது அம்சம், நாட்டின் முதலீட்டாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருடன் தொடர்புடையது. ஒருபுறம், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், தென் கொரியா, சீனா போன்ற உலகின் முக்கிய நாடுகளின் பங்குச் சந்தைகள் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றன.
ஆனால், மோதி மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்திய பங்குச் சந்தை மதிப்புகள் தற்போது தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. சந்தைகள் தொடர்ச்சியான மந்தநிலையை எதிர்கொண்டு வருகின்றன.
கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க மக்கள் தாங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை SIP திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். அவர்களின் இந்த முதலீட்டுப் பழக்கத்தை அரசும் பாராட்டியுள்ளது. ஆனால், தற்போதைய பிரச்னையைப் புறக்கணிப்பது, தானே அமர்ந்திருக்கும் கிளையை வெட்டுவதற்கு ஒப்பானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதாவது, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) இந்திய சந்தையில் இருந்து வேகமாக வெளியேறி வரும் நிலை, அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்போது, மறுபுறம் சாதாரண சில்லறை முதலீட்டாளர்கள் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்தப் பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது ஒரு பெரிய சிக்கலாகக் கருதப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
10. சர்வதேச உறவுகள்
இறுதியாக, பத்தாவது அம்சம் சர்வதேச உறவுகள் தொடர்புடையது. இன்று உலக அரங்கில் இந்தியாவின் நிலை, கடந்த சில தசாப்தங்களில் இருந்த நிலையைப் போன்றதல்ல.
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, இந்தியாவின் மூலோபாயத் தன்னாட்சி சார்ந்த முடிவுகள் வெளிப்படையாகச் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு மேலாக, யுக்ரேன் போர், பதற்றத்தில் இருக்கும் மத்திய கிழக்கு பிராந்தியம், மோசமடைந்து வரும் எரிசக்தி சந்தைகள் மற்றும் பாகிஸ்தான் தொடர்பான ராஜதந்திர சிக்கல்கள் ஆகியவை இந்தியாவின் சவால்களை மேலும் அதிகரித்துள்ளன.
வர்த்தக சுங்கங்கள் அல்லது மூலோபாய விவகாரங்கள் தொடர்பாக உலக வல்லரசுகளிடம் இருந்து தொடர்ந்து அழுத்தம் வரும்போது, நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் ராஜதந்திர அணுகுமுறைக்கு முன் மிகப்பெரிய கேள்விகள் எழுகின்றன.
வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு அல்லது இலங்கை என தெற்காசிய நாடுகள் எதைக் எடுத்துக்கொண்டாலும், அந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியாவின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகப் பல நிபுணர்கள் இன்னும் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், 1935ஆம் ஆண்டு நிகழ்த்திய ஓர் உரையில், “வரலாற்றை எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொள்கிறோமோ, அவ்வளவு தெளிவாக எதிர்காலத்தைப் பார்க்க முடியும்” என்று கூறியிருந்தார்.
இத்தகைய கருத்துகளும், இத்தகைய தொலைநோக்குப் பார்வையும் அரசியலில் எப்போதும் பாராட்டத்தக்கவையாகவே கருதப்படுகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு