• Sat. Aug 30th, 2025

24×7 Live News

Apdin News

முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணம்: ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் இன்று புறப்படுகிறார் | cm mk stalin tour to germany england starts today

Byadmin

Aug 30, 2025


சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் அவர் இன்று காலை புறப்படுகிறார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் செல்கிறார். துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் செல்கின்றனர். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அங்கு முதலீட்டாளர்களை முதல்வர் நாளை (ஆக.31) சந்திக்கிறார்.

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, செப்.1-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்படுகிறார். 2-ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று, தொழில்முனைவோரை சந்திக்கிறார். 3-ம் தேதி லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் 4-ம் தேதி நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று, பெரியார் படத்தை திறந்து வைக்கிறார். 6-ம் தேதியும் அயலக தமிழர் நலவாரிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இங்கிலாந்தில் இருந்து 7-ம் தேதி புறப்பட்டு, 8-ம் தேதி காலை சென்னை திரும்புகிறார்.

இதற்கிடையே, பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நிறுவனர்களை முதல்வர் சந்திக்க உள்ளார். அப்போது, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

நேற்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில், தனது வெளிநாட்டு பயணம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்துக்கு இதுவரை ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான தொழில்களை ஈர்த்திருக்கிறோம். உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்த, புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாக போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க உள்ளேன். அவரது சிந்தனையை உலகு தொழும் காட்சியை இந்த பயணத்தில் பார்க்கப்போகிறோம். இது தமிழகத்துக்கு பெருமை” என்றார்.



By admin