• Tue. Jan 14th, 2025

24×7 Live News

Apdin News

முதல்வர் ஸ்டாலின் குறித்த ஆளுநர் மாளிகையின் பதிவு ‘அநாகரிகம்’ – இடதுசாரிகள் கண்டனம் | Governor RN Ravi tweet post about CM MK Stalin – Communist Parties condemns

Byadmin

Jan 13, 2025


சென்னை: “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய எக்ஸ் பதிவில் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது முதல்வர் பதவியை குறிப்பிடாமல் ஒரு தனி மனிதராக பாவித்து ஒரு பதிவிட்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியதாகும். எனவே, ஆளுநர் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு தான் குறைந்தபட்சம் பொறுப்புணர்வோடும் நாகரிகத்தோடும் நடந்து கொள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். இதேபோல், ஆளுநர் மாளிகையின் அநாகரிக அறிக்கையை வன்மையாக கண்டிப்பதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய எக்ஸ் பதிவில் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது முதல்வர் பதவியை குறிப்பிடாமல் ஒரு தனி மனிதராக பாவித்து ஒரு பதிவிட்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியதாகும். தமிழகத்தின் மரபின்படி தான் நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் பாட முடியுமென்று சொன்னதை, தேசிய கீதமே பாட முடியாது என்று சொன்னதாக புரளி கிளப்புகிறார். நாளை வருகிற இன்னொரு ஆளுநர் இன்னொரு நேரம் பாட வேண்டுமென்று கேட்டால் அப்படி செய்ய முடியுமா?

மேலும், இதனால் அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பு செய்துவிட்டார்கள். அவர்கள் தத்துவமே அப்படித்தான் என்று பதிவிடுவது எல்லாம் அப்பட்டமான ஆர்எஸ்எஸ் பாணி திசைதிருப்பல் வேலையே. ஆளுநரின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், ‘திராவிட மாதிரி என்று எதுவும் இல்லை, திராவிடத் தத்துவம் காலவாதியாகிவிட்டது’ என்று ஒரு நாளிதழுக்கு கொடுத்த பேட்டியை முதன்மைப்படுத்தி வைத்திருக்கும் அளவுக்கு அத்துமீறி நடந்து கொள்பவர் என்பதையும் அதைப் பெருமையாக கருதிக் கொண்டிருப்பவர் என்பதையும் காண முடிகிறது.

ஆளுநராக நியமிக்கப்பட்டாலே வானளாவிய அதிகாரம் இருப்பதாக கருதிக் கொண்டு அடாவடி செய்வதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் சங்பரிவாரம் ஏற்கவோ மதிக்கவோ மாட்டோம் என்று சொன்னதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.எனவே, ஆளுநர் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு தான் குறைந்தபட்சம் பொறுப்புணர்வோடும் நாகரிகத்தோடும் நடந்து கொள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவருக்கு அத்தகைய குணமில்லை எனில் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்,” என்று அவர் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழம சட்டப் பேரவையின் நடப்பாண்டு கூட்டத் தொடர் கடந்த ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்ற வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது அரசியலமைப்பு கடமையை செய்யாமல், பேரவையை விட்டு வெளியேறி, அநாகரிகமாக நடந்து கொண்டார். ஆளுநர் உரையாற்றத் துவங்கும் முன்பு தமிழ் தாய் வாழ்த்து பாடுவதும், உரை நிறைவடைந்ததும் நாட்டுப் பண் பாடுவதும் சில பத்தாண்டுகளாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் மரபாகும்.

வழிவழியாக அமைந்துள்ள இந்த மரபை உடைத்து, தமிழ் தாய் வாழ்த்து பாடும் முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் அடாவடியாக வலியுறுத்தி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டதை நாடு முழுவதும் காண நேர்ந்தது. இருப்பினும், ஆளுநர் உரையை, பேரவைத் தலைவர் அவைக்கு வாசித்தளித்தார். இதனையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் முறையில் தீர்மானம் முன்மொழியப்பட்டு, எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் உரையாற்றி, தீர்மானம் நிறைவேற்றி, அவையின் மரபையும், மாண்பையும் பாதுகாத்துள்ளது.

உறுப்பினர்களின் விவாதத்துக்கு முதல்வர், வழங்கிய பதிலுரை ஆளுநர் நடந்து கொண்டதை குறிப்பிடும் போது “பகைவனுக்கும் அருளும்” உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகை “முதலமைச்சர், அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர், மதிக்காதவர், ஆணவம் கொண்டவர் என மனம் போன போக்கில் அவதூறு மூட்டைகளை அவிழ்த்து கொட்டி, இழிவு படுத்தி சுய மகிழ்வு கண்டிருக்கிறது. ஆளுநர் மாளிகையின் அநாகரிக அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது, என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.



By admin