• Sat. May 17th, 2025

24×7 Live News

Apdin News

முதல்வர் ஸ்டாலின் மே 24-ல் டெல்லி பயணம்: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக தகவல் | Chief Minister Stalin to visit Delhi on May 24

Byadmin

May 17, 2025


சென்னை: பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் உள்ளார். நிதி ஆயோக் சார்பில் பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். கடந்த 2015-ல் தொடங்கி இதுவரை 9 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாக குழு கூட்டத்தை டெல்லியில் பிரதமர் தலைமையில் வரும் 24-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கும் இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் அவர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2024 ஜூலை 27-ம் தேதி நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாக குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இடம்பெறாதது, தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள நிதிகளை மத்திய அரசு விடுவிக்காதது ஆகிய காரணங்களால் இக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது குறி்ப்பிடத்தக்கது.

இந்த சூழலில், இந்த ஆண்டுக்கான கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் பங்கேற்க உள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கான நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவார் என தெரிகிறது.



By admin