சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 50-வது திருமண நாளை முன் விட்டு, கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடம், மனைவி துர்காவுடன் சென்று வாழ்த்து பெற்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் – துர்கா தம்பதியினர் தங்களின் 50-வது ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடினர். இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் மற்றும் துர்கா ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். முதல்வரும். இரவு விருந்து அளித்தார்.
தொடர்ந்து, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் – துர்கா தம்பதியினருக்கு குடும்பத்தினர். அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, இருவரும் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றனர். அங்கு கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். அதன்பின், முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து இருவரும் வாழ்த்து பெற்றனர். அங்கிருந்து, மெரினா கடற்கரை சென்று, அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முதல்வருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, சிவசங்கர், ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருமண நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “அரை நூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக, என்னில் பாதியாக, துர்கா நுழைந்து, தன்னுடைய அன்பால் மண வாழ்வை மன நிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார். அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி. எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக் கொடுத்தலும், இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறாம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்” என தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் வாழ்த்து: இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், “அம்மாவும் – அப்பாவும் இல் வாழ்வில் இன்று பொன்விழா காண்கின்றனர். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவு செய்கின்றனர்.
மணமான சில மாதங்களிலேயே மிசா சிறைவாசம், இடைவெளியில்லா சுற்றுப்பயணங்கள், கடும் அரசியல் சூழல்கள், தொடர் மக்கள் பணி என எல்லாவற்றிலும் அப்பாவுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறார் அம்மா. அம்மாவின் உணர்வுகள், நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் குடும்பத் தலைவராக அவருக்கு பக்கபலமாக திகழ்கிறார் அப்பா. பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப்பிள்ளை, அம்மா என்றால் கண்டிப்பு. இப்போது. அப்பா கண்டிப்பவராகவும், அம்மா அன்பு காட்டி அரவணைப்பவராகவும் பொதுவாழ்வில் என்னை வழிநடத்துகின்றனர். அம்மா, அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் – முத்தங்கள்” என தெரிவித்துள்ளார்.