சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழாவான தேவர் ஜெயந்தியை பள்ளி, கல்லூரிகளில் மாணவர் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என தமிழக அரசை பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: `தேசியம் என் உடல், தெய்வீகம் என் உயிர்’ என்ற உயர்ந்த சிந்தனையுடன் தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், தனி மனித ஒழுக்கத்துக்கும் இலக்கணமாக வாழ்ந்து மறைந்த, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
தமிழக மாணவ சமுதாயம் பாரதத்துக்கும், உலகுக்கும் வழிகாட்டும் விதமாக மாற, வாழ்ந்து மறைந்த தலைவர்களின் வாழ்க்கையை அறிந்து தெளிவு பெற்று மிளிர வேண்டும்.
மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என தேச நலனுக்காக சிந்தித்து செயல்பட்டு, வாழ்ந்து மறைந்த அனைத்து தலைவர்களின் தியாகங்களையும், வாழ்வியல் முறைகளையும், கருத்துகளையும் மாணவர்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க அரசு தீவிர முனைப்பு காட்ட வேண்டும்.
எனவே மாணவர் சமுதாயத்தை முன்னேற்றும் வகையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளான அக்டோபர்.30-ம் தேதி ‘ஒழுக்கம், ஒற்றுமை, ஒருமைப்பாட்டு தினம்’ என அறிவித்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர் திருவிழாவாகக் கொண்டாட தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.