பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் பல பகுதிகள், வேறு ஒரு தீர்ப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக (நகலெடுக்கப்பட்டுள்ளதாக) கூறி சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அத்தீர்ப்பை ரத்து செய்துள்ளது.
ரயில்வே சரக்கு வழித்தடத்தை நிர்வகிப்பதற்காக வழங்கப்பட வேண்டிய தொகை தொடர்பாக, பல நிறுவனங்களுக்கு இடையே பிரச்னை இருந்துள்ளது. இந்திய அரசு 2017 ஆம் ஆண்டில் சரக்கு வழித்தட நிர்வாகத்திற்கான குறைந்தபட்ச தொகையை அதிகரித்தது. இது கூடுதல் தொகை தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுத்தது. இது குறித்த வழக்கு தீபக் மிஸ்ரா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள இரண்டு நடுவர் மன்றங்கள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள ஒரு நடுவர் மன்றம் என, மூன்று நடுவர் மன்றங்களில் ஒரே சமயத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றங்கள் அனைத்துக்கும் மிஸ்ரா தலைமை நடுவராக செயலாற்றினார்.
நடுவர் மன்றம் என்பது நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்னைகளை தீர்க்கும் ஒரு வழிமுறையாகும். இதில் இருதரப்பினரும் தாங்களாகவே நடுவர்கள் எனப்படும் நடுநிலை நிபுணர்களின் குழுவைத் தேர்ந்தெடுத்து பிரச்னைகளை தீர்த்துக்கொள்கிறார்கள்.