பட மூலாதாரம், Getty Images
(இது, சமீபத்திய செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பில் உள்ளகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜராகியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவிடம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
தனது மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு , அரச நிதியை பயன்படுத்தி விஜயம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்திருந்தது.
இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சென்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்துக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 09 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்றைய தினம் கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
முதல் சந்தர்ப்பம்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக முன்னான் ஜனாதிபதி ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் 1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டமே தற்போது நாட்டில் அமலில் உள்ளது.
இந்த அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு அதிவுயர் அதிகாரமான நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டு வரப்பட்டதன் பின்னர், ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு பின்னர் தற்போது அநுர குமார திஸாநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளில் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
எனினும், வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
பட மூலாதாரம், PRADEEPA MAHANAMAHEWA
முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய முடியுமா?
முன்னாள் ஜனாதிபதி ஒருவரை கைது செய்யும் அதிகாரம், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் பிபிசி தமிழ், மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாமஹேவாவிடம் வினவியது.
”ஜனாதிபதி ஒருவருக்கு விசேட சிறப்புரிமை உள்ளது என 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 7வது சரத்தில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்புரிமையின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அவரது பதவி காலத்தில் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை பதிவு செய்ய முடியாது என 35/1 சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.” என்றார்.
எனினும், அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய, அவரது பதவிக் காலத்திற்குள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கும் பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்று தாக்கல் செய்ய முடியாத பட்சத்திலும் அவருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியும் என அவர் விளக்குகிறார்.
”ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலத்திற்குள் மாத்திரமே சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியாது. அவரது பதவியிலிருந்து அவர் விலகியதன் பின்னர் அல்லது ராஜினாமா செய்த பின்னர் அவர் பதவிக் காலத்தில் விடுத்த சிவில் அல்லது குற்றவியல் தவறுகளுக்கு வேறொரு தரப்பினரால் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதில் எந்தவித தடங்கல்களும் இல்லை. நீதிமன்றத்தில் பீ (B) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதியின் பிரத்யேக செயலாளர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கோட்டை நீதவானின் அனுமதியுடனேயே முன்னாள் ஜனாதிபதியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.” என அவர் தெரிவித்தார்.
அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்பது தெரியவரும் பட்சத்தில், போலீஸாரினால் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் போலீஸ் பிணை அவருக்கு வழங்க போலீஸாருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் கூறுகிறார்.
“அதனாலேயே நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார். 1999ம் பிணை சட்டத்திற்கு அமைய அவருக்கு பிணை கோரிக்கை முன்வைக்கப்படும்.” எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
நீதவான் நீதிமன்றத்திற்கு பிணை வழங்கும் அதிகாரம் உள்ளதா?
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படும் பட்சத்தில், அவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் போலீஸாருக்கு கிடையாது என்ற நிலையில், நீதவான் நீதிமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் உள்ளதா என பிபிசி தமிழ், சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவாவிடம் வினவியது.
”நீதவான் நீதிமன்றங்களுக்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் போலீஸாரினால் முன்வைக்கப்படுகின்ற விடயங்களின் அடிப்படையிலேயே பிணை வழங்குது அல்லது பிணை வழங்காதிருப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். இதற்கு முன்னர் இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. இது முதலாவது சந்தர்ப்பமாக காணப்படுகின்றது” எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு