சேலம்: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் சேலத்தில் இன்று (மே 14) காலமானார். அவருக்கு வயது 91. அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு சேலத்தைச் சேர்ந்தவர். சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகரில் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக, வெங்கடாசலம் (91) அவரது இல்லத்தில் இன்று மதியம் காலமானார். மறைந்த வெங்கடாசலத்தின் மனைவி பேபி சரோஜா , மூத்த மகள் பைங்கிளி, கடைசி மகன் அருட்புனல் ஆகியோர் ஏற்கெனவே இறந்துவிட்டனர். மகள்கள் பைங்கிளி, இன்சுவை ஆகியோர் கல்லூரி பேராசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள்.
மகன்கள் திருப்புகழ், இறையன்பு ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவரான வெங்கடாசலம் தன் குழந்தைகள் அனைவருக்கும் தூய தமிழில் பெயர் வைத்து அழகு பார்த்தவர். மேலும் நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றை தனது குழந்தைகளுக்கு போதித்து வளர்த்தவர். ஓவியத் திறமையும் கொண்டவரான வெங்கடாசலம், லிப்டன் டீ கம்பெனியில் பணியாற்றியவர். மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த வெங்கடாசலம் அதனை தன் குழந்தைகளும் பின்பற்ற ஊக்குவித்தவர்.

சேலம் சூரமங்கலத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வெங்கடாசலத்தின் உடலுக்கு அமைச்சர்கள் ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தினர். மேலும், உறவினர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இறையன்புவின் தந்தை மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
வெங்கடாசலம் சாமானிய பின்னணியில் இருந்து, தனது உழைப்பால் தனது இரு மகன்களை இந்திய ஆட்சிப் பணியாளர்களாகவும், மகள்களைப் பேராசிரியர்களாகவும் உருவாக்கி, சமூகத்துக்கு அளித்த பொறுப்புமிக்க தந்தை ஆவார். தமது பிள்ளைகள் அனைவருக்கும் தூய தமிழில் இனிமையான பெயர்களைச் சூட்டித் தமிழ்ப் பற்றையும் வெளிப்படுத்தி அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். அவரை இழந்து தவிக்கும் இறையன்பு, திருப்புகழ் உள்ளிட்ட அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.