2
நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நேபாள அரசால் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணி திரண்டு, தலைநகர் காத்மாண்டுவில் திங்கட்கிழமை (08) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது.
கலவரத்தில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்ஷ்மி சித்ராகர், நேற்று செவ்வாய்க்கிழமை (09) உயிரிழந்தார்.
காத்மாண்டுவிலுள்ள டல்லு பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதில் வீடு தீக்கிரையானது.
மிகுந்த சிரமத்துக்கிடையே உயிருடன் வெளியே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்யலக்ஷ்மி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் தகவலை அவரது குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சமூக ஊடகங்களுக்கான தடையால் குறைந்தது 19 பேர் கொலை
நேப்பாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 400 பேர் காயமுற்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (05) Facebook, YouTube மற்றும் X உட்பட சில சமூக தளங்களை அந்நாட்டு அரசாங்கம் தடை செய்தது.
அதை எதிர்த்து காத்மாண்டு நகரிலும் நேப்பாளத்தின் மேலும் சில பகுதிகளிலும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
நாடாளுமன்றத்திற்கு அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் சிலர் அத்துமீற முயன்றனர்.
அவர்கள் மீது ரப்பர் தோட்டா, கண்ணீர்ப் புகை, தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனம் ஆகியவற்றை பொலிஸார் பயன்படுத்தினர்.
இதில் பொலிஸார் சுமார் 100 பேர் உட்பட கிட்டத்தட்ட 400 பேர் காயமுற்றதாக காத்மாண்டு பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த மாதமே சமூக ஊடகங்களை நேப்பாளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருந்தது.
அதற்கு 7 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. நிறுவனத்தைத் தொடர்புகொள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
பதிவு செய்யாத 26 தளங்கள் தடை செய்யப்பட்டன.
மீண்டும் செயல்பட்ட சமூக தளங்கள்
இளைஞர்களின் ஆர்ப்பாட்டத்தையடுத்து, நேப்பாளத்தில் சமூக ஊடகத் தடை மீட்டுக்கொள்ளப்பட்டது.
முக்கிய சமூக ஊடகத் தளங்கள் அனைத்தும் மீண்டும் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவசர அமைச்சரவைச் சந்திப்புக்குப் பின்னர் தடை மீட்டுக்கொள்ளப்பட்டதாக நேப்பாளத்தின் தொடர்புத்துறை அமைச்சர், உள்ளூர் ஊடகத்திடம் கூறினார்.
பிரதமர் பதவி விலகல்
நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் நேப்பாளப் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.
நேப்பாளத்தில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டதன் விளைவாக நாடாளுமன்றுத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படவிருப்பதாக ஷர்மா ஒலி கூறியிருக்கிறார்.