2
இங்கிலாந்தில் இலங்கைப் பெண் ஒருவரை 27 முறை கத்தியால் குத்தி கொலை செய்த இலங்கை நபருக்கு, இங்கிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 37 வயதான திசாரா வெரகல என்பவரே இந்த தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
கடந்தாண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி, கார்டிஃப் நகரில் அமைந்துள்ள கார் நிறுத்துமிடமொன்றில், தனது முன்னாள் மனைவி நிரோதா நிவுன்ஹெல்லா என்பவரை திசாரா வெரகல கொடூரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தின் போது சுமார் 15 சென்டிமீட்டர் நீளமுள்ள கூர்மையான கத்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இருவரும் 2017ஆம் ஆண்டு இலங்கையில் திருமணம் செய்து பின்னர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கு வாழ்ந்த காலத்தில் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, நிரோதா அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், வேறு ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையிலேயே குற்றவாளி திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.