பட மூலாதாரம், Getty Images
“சமுதாயத்தின் ஒரு பிரிவுக்கு இழப்பு ஏற்படுத்தி மற்றொரு பிரிவுக்கு தூய்மையான சூழலை தரும் சமூக அமைப்பு ஏதும் இருக்கக் கூடாது.”
மும்பையை தினமும் தூய்மைப்படுத்தும் 580 தூய்மைப் பணியாளர்களை நிரந்தப் பணியாளர்களாக நியமித்து, 2023ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மிலிந்த் ஜாதவ் உத்தரவு பிறப்பித்தபோது கூறிய வார்த்தைகள் இவை.
இதன்மூலம், சுமார் 25 ஆண்டுகள் போராடிய பணியாளர்களின் போராட்டம் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு முடிவுக்கு வந்ததாக தெரிந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக மும்பை மாநகராட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
1996 ஆம் ஆண்டு முதல் தங்களது உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் 580 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக நின்று நீதிமன்றத்தில் வாதாடிய தொழிலாளர் சங்கமும் (கச்ரா வஹாதுக் ஷ்ரமிக் சங்) நம்பிக்கை இழக்காமல் நீதிமன்றத்தில் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர்.
இந்த விவகாரத்தில், 2025ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஹ்சனுதின் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த 580 தூய்மைப் பணியாளர்களும் 1998ஆம் ஆண்டு முதல் ஊழியர்களாக கருதப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
நகரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பை தங்கள் தோள்களில் சுமந்துகொண்டிருக்கும் இந்த தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக இத்தனை ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது ஏன்?
அவர்கள் சந்தித்த பிரச்னைகள் என்ன? உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
‘நிரந்தர தொழிலாளர்களாவதை தடுப்பதற்கான நடைமுறை’
“அந்த தொழிலாளர்களுக்காக நாங்கள் குறைந்தது 28 ஆண்டுகள் போராடிக்கொண்டிருக்கிறோம். முதலில் அவர்களுக்கு குடிநீர் வழங்க போராடினோம். அங்கு தொடங்கிய பயணம் இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அடைந்துள்ளது.” என மும்பையில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் பிரச்னைகளுக்காக போராடி வரும் ‘கச்ரா வஹாதுக் ஷ்ரமிக் சங்’-இன் பொதுச்செயலாளர் மிலிந்த் ராணடே பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த தொழிலாளர்கள் மும்பையை 1996ஆம் ஆண்டு முதல் தூய்மைப்படுத்தி வந்திருக்கின்றனர். ஆனால் அப்போது அவர்கள் எந்த தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழும் வரவில்லை.
“இந்த தொழிலாளர்கள் மும்பை மாநகராட்சியால் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் நிரந்தர தொழிலாளர்களாவதை தடுப்பதற்கு ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆவணங்களில் அவர்கள் தன்னார்வலர்களாக பதிவு செய்யப்பட்டனர், ஒப்பந்த தொழிலாளர்களாக அல்ல,” என்றார் ராணடே.
“தொழிலாளர் நலச் சட்டங்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தப்படாமல் இருப்பதற்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த தொழிலாளர்கள் பெற்ற பணம் ஊதியம் அல்ல. மாறாக அது மதிப்பூதியம் என அழைக்கப்பட்டது. 18 தொழிலாளர்களின் பெயர்கள் மட்டுமே ஒப்பந்ததாரரிடம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
“ஏனென்றால் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டால், அவர்களுக்கு தொழிலாளர் சட்டப்படி பி.எஃப், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பிற வசதிகள் வழங்கப்பட வேண்டும்,” என்கிறார் அவர்.
“ஆவணங்களில் ஒப்பந்ததாரர்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டன. எனவே, ஆவணங்களின்படி இந்த தூய்மைப் பணியாளர்கள் ஊழியர்கள் அல்ல. அதன் மூலம், இந்த தொழிலாளர்கள் தன்னார்வலர்களாக பணியாற்றினர் என்றும் அவர்களுக்கு ஊதியத்துக்கு பதிலாக மதிப்பூதியம் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் வாதிட்டனர்,” என்றார் ரணடே.
அவர்கள் தொழிலாளர்களாக பதிவு செய்யப்படாததால், அவர்களுக்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் பொருந்தாது. இத்துடன், ‘கச்ரா வஹாதுக் ஷ்ரமிக் சங்’, இந்த பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு காண்பதற்கு பல வழிகளை ஆய்வு செய்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
அந்த ஒரு மாற்றம்…
ராணடே கூறுகையில், “இந்த தொழிலாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஊதியம் அளிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு வருகைப் பதிவேடு ஏதும் இல்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதில்லை. அவர்களுக்கு குடிநீர், கையுறைகள், முகக்கவசம், ரெயின் கோட், எதுவும் வழங்கப்படுவதில்லை. அதனால்தான் முதலில் இந்த தொழிலாளர்களுக்கு குடிநீர் வழங்க நாங்கள் போராடினோம். நாங்கள் எதை கேட்டாலும், அவர்கள் தொழிலாளர்கள் அல்ல என மாநகராட்சி சொல்லும். அவர்கள் தன்னார்வலர்களாகத்தான் பணி செய்வதாக வாதிடுவார்கள்.”
“இந்த தொழிலாளர்களை 1997ஆம் ஆண்டு நாங்கள் ஒருங்கிணைத்தோம். 1999ஆம் ஆண்டு அகஸ்ட் 15ஆம் தேதி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்த தூய்மைப் பணியாளர்களை நாங்கள் அழைத்துச் சென்றோம். இந்த தொழிலாளர்களுக்கு குறைந்தது ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக இருந்தது. நாங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கேட்க தொடங்கினோம். அந்த நேரத்தில் அவர்கள் ஆண்டுக்கு 365 நாளும் வேலை செய்ய வேண்டியிருந்தது, ஒரு நாள் கூட விடுப்பு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையரிடம் வலியுறுத்தினோம்,” என நினைவுகூறுகிறார் ரணடே.
“தொழிலாளார்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டதால், அந்த வேலையை செய்ய புதிதாக தொழிலாளர்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் ஒவ்வொரு 18 தொழிலாளர்களுக்கும், 3 புதிய தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர், ஒவ்வொரு ஒப்பந்ததாரரின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது. இதனால் அவர்கள் அனைவருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் பொருந்தும்,” என்றார் அவர்.
பட மூலாதாரம், Facebook/Kachra Vahatuk Shramik Sangh
அவர்கள் ஊதியம் என்னவாக இருக்கும்?
மும்பையில் ஒரு தூய்மைப் பணியாளராக இருக்கும் தாதாராவ் படேகர் கூறுகையில், “நாங்கள் பணியாற்ற தொடங்கியபோது, நாங்கள் தினமும் 30-40 ரூபாய் சம்பாதித்தோம். அந்த பணத்தை கொண்டு எங்கள் குடும்பத்தை காப்பாற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. உண்ண உணவு கூட இல்லாமல் இந்த நகருக்கு வந்த எங்களைப் போன்ற தலித்துகளுக்கு வேலை பெறுவதற்கு தேவையான கல்வியோ, பெரிய மனிதர்களின் தொடர்புகளோ இல்லாததால், தூய்மைப்படுத்துவதை தவிர வேறு வாய்ப்புகள் இருக்கவில்லை.”
“நாங்கள் இதேபோல் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்திருக்கிறோம். சில நேரங்களில் குடிநீருக்காகவும், பணியாற்ற கையுறைகளுக்காகவும் நாங்கள் போராடவேண்டியிருந்தது.சில நேரங்களில் ஊதியத்தை பெறுவதற்கு ஆறு மாதம் தாமதமாகும். ஆனால் நாங்கள் பின்வாங்கவில்லை,” என்றார் தாதாராவ்.
“நகரை தூய்மைப்படுத்தும் தொழிலாளார்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்தான். அவர்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடைப்பதில்லை, மக்கள் அவர்களை மனிதர்களாக கூட கருதுவதில்லை. நாம் கால்வாய்களை தூய்மைப்படுத்துகிறோம், சாலைகளை பெருக்குகிறோம், ஆனால் மக்களின் பார்வையில் நாங்கள் குப்பைக்கு சமமானவர்கள். ஆனால், இந்த வேலையை செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, நாங்கள் தொடர்ந்து போராடினோம், இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றோம்,” என்றார் தாதாராவ் படேகர்.
இந்தத் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்கக் கோரி, 2017ஆம் ஆண்டு கச்ரா வஹாதுக் ஷ்ரமிக் சங் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. ”240 நாட்களுக்கு மேல் பணியாற்றிய தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது,” என்றார் மிலிந்த் ராணடே.
“இந்த தொழிலாளர்கள் அனைவரும் மும்பை மாநகராட்சியின் நிரந்தர தொழிலாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இது மட்டுமல்ல, அவர்கள் அனைவரும் 1998 ஆம் ஆண்டு முதல் பணி செய்வதாக கருதப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது,” எனவும் அவர் கூறினார்.
“இந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள அனைத்து ஊதியங்களும் தேசிய ஊதிய உயர்வு ஆணையத்தின்படி 1998 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு 50 முதல் 60 ரூபாய் சம்பாதித்த தொழிலாளர்கள், இப்போது அவர்கள் மாதம் 70,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள்,” என்றார் ராணடே.
உச்ச நீதிமன்றம் மும்பை மாநகராட்சி மனுவை தள்ளுபடி செய்தது. 580 தொழிலாளர்களை மாநகராட்சி ஊழியர்களாக சேர்க்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு