மும்பையின் போவாய் பகுதியில் நபர் ஒருவர், ஆடிஷன் நடத்துவதாக 17 குழந்தைகளை வர வைத்து அக்குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்நபர் ரோஹித் ஆர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். போவாய் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் அமோல் வக்மாரே நடத்திய துப்பாக்கிசூட்டில் ரோஹித் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ரோஹித் ஆர்யா இதுதொடர்பாக ஓர் காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார், அதில் சில கோரிக்கைகள் மற்றும் சில நபர்களிடம் பேச வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
தன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
இதையடுத்து, உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறை அந்த இடத்திற்கு சென்றனர். அதிகாரிகள் கதவை திறக்குமாறு அவரிடம் கூறியும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.
இதையடுத்து, அப்பகுதியில் அதிகமான போலீஸார் வரவழைக்கப்பட்டனர், ரோஹித் ஆர்யா இருந்த இடத்துக்குள் போலீஸார் கழிவறை வாயிலாக நுழைந்தனர்.
மும்பை இணை காவல் ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சத்யநாராயண் சௌத்ரி, 17 குழந்தைகள் மற்றும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் அனைத்து குழந்தைகளும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், BBC/ApleshKarkare
என்ன நடந்தது?
போவாய் மரோல் பகுதியில் மஹாவீர் கிளாசிக் எனும் கட்டடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
நடிப்பு சம்பந்தமான ஆடிஷன் எனக்கூறி இந்த சிறுவர்கள், சிறுமிகள் ரோஹித் ஆர்யாவால் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் மும்பை முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இந்த செய்தி வெளியானதையடுத்து, அக்குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பலரும் அப்பகுதியில் திரண்டனர்.
மதியம் 3-3.30 மணியளவில் குழந்தைகள் அக்கட்டடத்தின் கண்ணாடி வாயிலாக உதவி கேட்டுள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்பகுதியில் அதிகளவிலான போலீஸார் நிறுத்தப்பட்டனர்.
அந்நபர் யார், அவரின் நோக்கம் என்ன என்பதையும் போலீஸார் அறிந்துகொள்ள முயன்றனர். மேலும், குழந்தைகளை பாதுகாப்பாக மீட்கவும் அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
சுமார் இரண்டரை மணிநேரமாக போலீஸ், மற்ற பாதுகாப்பு படையினர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால், அந்நபர் ஆக்ரோஷமாக இருந்ததால், அவர் கதவை திறக்க தயாராக இல்லை.
தொடர்ந்து அவருடன் பேசுவதற்கு போலீஸார் முயன்றனர்.
போலீஸுடனான பேச்சுவார்த்தையில் ரோஹித் சில கோரிக்கைகளை தெரிவித்துள்ளார். குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் போலீஸார் கூறியுள்ளனர். எனினும், அந்நபர் அதை ஏற்கவில்லை.
இதையடுத்து, கழிவறை ஜன்னல் வாயிலாக அந்த அறைக்குள் போலீஸார் நுழைந்தனர்.
இதன்பின், போலீஸார் அங்கிருந்த முதியவர் ஒருவரின் உதவியுடன் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.
காவல்துறை கூறியது என்ன?
குழந்தைகளை அடைத்து வைத்திருந்த ரோஹித் ஆர்யா புனேவை சேர்ந்த தொழிலதிபர்.
அந்நபரிடமிருந்து ஒரு ஏர் கன் மற்றும் சில பொருட்களை பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு துணை ஆணையர் தத்தா நலவாடேவும் உடனடியாக சென்றார். அவர் ஊடகங்களிடம் பேசுகையில், ”இந்த நடவடிக்கை எங்களுக்கு மிகுந்த சவாலாக இருந்தது. ஒருபுறம், அவரிடம் குழந்தைகள் சிக்கியுள்ளனர், மற்றொருபுறம் குற்றம் சாட்டப்பட்ட நபர் இருக்கிறார். இறுதியில், மும்பை காவல்துறை வழியை கண்டறிந்து குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்,” என்றார்.
எனினும், ரோஹித் முதலில் துப்பாக்கியால் சுட்டதாகவும், போலீஸ் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறுகிறது.
ரோஹித் ஏன் அப்படி செய்தார்?
ரோஹித் ஆர்யாவின் நோக்கம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனினும், சில ஊடக செய்திகளின்படி, சிவ சேனா கட்சியை சேர்ந்த தீபக் கேசர்கர் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, ரோஹித்துக்கு பள்ளி திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கிடைத்துள்ளது. ஆனால், அந்த திட்டத்துக்கான பணம் ரோஹித் ஆர்யாவுக்கு கிடைக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
முதல்கட்ட தகவலின்படி, தீபக் கேசர்கர் அமைச்சராக இருந்தபோது அவருடைய வீட்டுக்கு வெளியே ரோஹித் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, அரசு எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. அதனால் இதுதொடர்பான கவனத்தைப் பெற ரோஹித் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
தீபக் கேசர்கர் டிவி9 சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் தனிப்பட்ட முறையில் அவருக்கு உதவினேன். பணத்தை காசோலையாகவும் வழங்கினேன். எனினும், இரண்டு கோடி ரூபாய் அப்படியே நின்றுள்ளது, அப்படியானால் சம்பந்தப்பட்ட துறையை தொடர்புகொண்டு, திட்டத்தை முடித்திருக்க வேண்டும்.” என்றார்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் விஜய் வடேட்டிவார் அரசை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “இது தொடர்பாக இன்னும் எவ்வளவு பெரிய சம்பவங்கள் நடக்கும்? அரசின் ஒழுங்கற்ற நிதி திட்டமிடலால் அப்பாவி குழந்தைகளின் உயிர் இன்று போயிருந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? கேசர்கர் அல்லது அப்போதைய அரசு அதற்கு பொறுப்பேற்குமா?” என்றார்.
பட மூலாதாரம், Rohit Arya/ BBC
வீடியோவில் ரோஹித் கூறியது என்ன?
இதுதொடர்பாக, முன்னதாக ரோஹித் வெளியிட்ட வீடியோவில்,
“எனக்கு பல கோரிக்கைகள் இல்லை. எளிமையான கோரிக்கைகளே உள்ளன. அவை மிகவும் தார்மீக கோரிக்கைகள்.”
“எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. நான் பயங்கரவாதி இல்லை, எனக்கு பணமும் தேவையில்லை. நான் ஒழுங்கற்றவன் அல்ல. எனக்கு உரையாடல் வேண்டும். அதனால்தான் குழந்தைகளை பணயக்கைதிகளாக எடுத்துள்ளேன்.”
மேலும், அவர் கூறுகையில், “உங்களின் எந்தவொரு சிறிய தவறுக்காகவும் என்னை தூண்டினால், நான் இந்த இடத்தையே எரித்துவிடுவேன். நான் சாவேனா என தெரியவில்லை, ஆனால் நிச்சயம் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.” என கூறினார்.
“என்னை இதற்காக குற்றம் சொல்லாதீர்கள். தேவையில்லாமல் என்னை தூண்டியவர்கள் மீது குற்றம் சுமத்துங்கள். நான் பேச நினைக்கும் சாமானியர். நான் பேசிய பின்னர் வெளியே வருவேன். நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பலரை பலமுறை சந்தித்தேன். நான் இன்று முதல் கடுமையான உண்ணா நிலை போராட்டத்தை தொடங்கியுள்ளேன். இப்போது நான் தண்ணீர் கூட அருந்தவில்லை. இதன் தீவிரத்தை புரிந்துகொண்டால் நல்லது.”