சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் வைக்கப்பட்டிருந்த மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய #GetOut கையெழுத்து பதாகையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று (பிப்.26) தொடங்கியது. இதில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணரும் ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேடைக்கு அருகே மும்மொழி கொள்கையையும், மத்திய, மாநில அரசுகளையும் விமர்சிக்கும் வாசகங்களுடன் #GetOut கையெழுத்து பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதில் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டு #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அடுத்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கையெழுத்திட்டார்.
பின்னர் பேனாவை பிரசாந்த் கிஷோரிடம் கொடுத்த போது அவர் தான் கையெழுத்திட மாட்டேன் என்று தலையாட்டி பேனாவை வாங்க மறுத்து விட்டார். அதன் பிறகு ஆதவ் அர்ஜுனா அந்த பேனரில் கையெழுத்திட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.