தமிழ்நாட்டில் இந்தி மொழி குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பள்ளிக்கல்விக்கான நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் கூறியதே அதற்குக் காரணம்.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இதற்கு காட்டமாக பதில் அளித்து வருகின்றனர். மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கக் கூடாது என்று கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் யாரும் இந்தி படிப்பதில்லையா? இந்தி பயில என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? தமிழ்நாட்டில் தமிழை தவிர வேறு எந்தெந்த மொழிகளை பயிலும் வாய்ப்புகள் உள்ளன? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. அந்த வரிசையில் 5 கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு இரு மொழி கொள்கையை பின்பற்றுவதால், பள்ளிகளில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. (திருவள்ளூர் மாவட்டத்தில் வட இந்திய தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளியில் இந்தி மொழியும், இந்தி மொழி வாயிலான கல்வியும் கற்றுக் தரப்படுகிறது. இது விதிவிலக்கானதாகும்).
இந்தி கற்க விரும்புவோர் தாமாக முன்வந்து இந்தி பிரசார சபாவின் மூலம் இந்தி கற்றுக் கொள்ளலாம். தக்ஷிண பாரத் இந்தி பிரசார சபா, இந்தி மொழி பிரசாரத்துக்காக 1918-இல் காந்தியால் உருவாக்கப்பட்டது. சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்தி பிரசார சபா நடத்தும் தேர்வுகளை எழுதி சான்றிதழ் பெறலாம்.
தாமாக முன் வந்து இந்தி கற்பவர்கள் பெரும்பாலும் மாணவர்களாக இருந்தாலும், மூத்த குடிமக்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், ஐடி ஊழியர்கள் போன்றவர்களும் இந்தி மொழியை கற்றுக் கொள்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 1918-ம் ஆண்டு சென்னையில் தக்ஷிண பாரத் இந்தி பிரசார சபாவை காந்தி நிறுவினார்.
தமிழ்நாட்டில் இந்தி கற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதா?
இந்தி பிரசார சபா தரவுகளின் படி, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் மூன்று முதல் நான்கு லட்சம் பேர் இந்தி தேர்வு எழுதுகின்றனர். 2009-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து 27,600 மாணவர்களும் சென்னை தவிர மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து 1.5 லட்சம் மாணவர்களும் இந்தி தேர்வு எழுதினர். அடுத்த 15 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரடிப்பாகியுள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
2024-ம் ஆண்டு இந்தி தேர்வுகளை சென்னையிலிருந்து 1,39,311 பேரும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து 2,11,354 பேரும் எழுதியுள்ளனர். இடையில் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்து, மீண்டும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2014-ம் ஆண்டு சென்னையில் 1.21 லட்சம் பேரும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 3.71 லட்சம் பேரும் இந்த தேர்வுகளை எழுதினர். 2019-ம் ஆண்டு சென்னையில் 1.03 லட்சம் பேரும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து 2.85 லட்சம் பேரும் எழுதினர். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகமானது. சென்னையில் 1.33 லட்சம் பேரும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 3.52 லட்சம் பேரும் இந்தி தேர்வுகளை எழுதினர்.
2021-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை சற்று குறைந்தது. அடுத்து வந்த 2 ஆண்டுகளில் அது மேலும் அதிகரித்தது. 2021-ல் சென்னையில் 1.04 லட்சம் பேரும் மாநிலத்தின் பிற பகுதிகளில் 2.43 லட்சம் பேரும் இந்தி தேர்வு எழுதினர்.
சென்னை மண்டலத்தில் 2022-ம் ஆண்டு 1.14 லட்சம் பேர், 2023-ம் ஆண்டில் 1.25 லட்சம் பேர், 2024-ம் ஆண்டு 1.39 லட்சம் பேர் என இந்தி தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
சென்னை தவிர்த்த தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து 2022-ம் ஆண்டு 2.59 லட்சம் பேரும் , அடுத்த ஆண்டு 2.88 லட்சம் பேரும் எழுதியிருந்தனர். 2024-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2.11 லட்சமாக குறைந்திருந்தது.
தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் இந்தி கற்பவர்கள் அதிகம் – ஏன்?
தென்னிந்தியாவைப் பொருத்தவரை, இந்தி பிரசார சபா நடத்தும் தேர்வுகளை தமிழ்நாட்டில் இருந்தே அதிகமானோர் எழுதுகின்றனர். தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் இந்தி கற்றுக் கொடுக்கும் வகையிலான மும்மொழிக் கொள்கை அமலில் இருப்பதால் தாமாக முன் வந்து இந்தி பிரசார சபா மூலம் இந்தி கற்பவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மொத்தம் 3,50,665 பேர் இந்தி தேர்வுகளை எழுதியுள்ள நிலையில், ஆந்திரா & தெலங்கானாவில் 1,10,376 பேரும், கேரளாவில் 9,110 பேரும் கர்நாடகாவில் 5,584 பேரும் இந்த தேர்வை எழுதியிருந்தனர்.
கடந்த ஆண்டு மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய சில ஆண்டுகளிலும், தென்னிந்திய மாநிலங்களில் இதேநிலை தான் நீடித்தது.
இந்தி பிரசார சபாவின் தேர்வுகள் துறை செயலர் குப்தல் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தமிழ்நாட்டு பள்ளிகளில் மாணவர்கள் இந்தி கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இந்தி தேர்வுகளை எழுதுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கர்நாடகாவில் இந்த எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம் அங்கு மகிளா இந்தி பரிஷத் போன்ற இந்தியை ஊக்குவிக்கும் பல திட்டங்கள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் இந்தி கற்றுத் தர எங்களுக்கு போட்டியாக யாரும் கிடையாது” என்றார்.
தக்ஷிண பாரத் இந்தி பிரசார சபா செயலர் கங்காதரசுவாமி ஹிரேமத் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் இந்தி கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த தேர்வுகளை எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்கள். அவர்களுக்கு பள்ளியில் இந்தி கற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாததால் இந்தி பிரசார சபா மூலம் கற்கின்றனர். மூத்த குடிமக்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், ஐடி ஊழியர்களும் குறைந்த எண்ணிக்கையில் இந்தி கற்றுக் கொள்கின்றனர்.” என்று கூறினார்.
மத்திய அரசுப் பள்ளிகளில் தமிழ் உண்டா?
பட மூலாதாரம், Getty Images
இரு மொழி கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் கற்றுத்தரப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் இந்தி கற்றுத்தரப்படுவது இல்லை (சில விதிவிலக்குகள் உண்டு).
தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. உருது கற்று தரப்படும் அரசுப் பள்ளிகளும் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன.
தமிழ் மொழி கற்றல் சட்டம் 2006-ன் படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் படி, 2024-2025-ம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தமிழ் கற்றுக் கொண்டிருப்பதை பள்ளிகள் உறுதி செய்திருக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது.
ஆனால் பல தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயமில்லை, தமிழுக்கு பதிலாக பிரெஞ்சு உள்ளிட்ட வேறு மொழிகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் உள்ளனர். அப்படி தமிழை தேர்ந்தெடுக்காத மாணவர்களுக்கு ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பில் தமிழ் மொழி கட்டாயமாக கூடுதல் பாடமாக கற்றுத்தரப்பட வேண்டும் என்றும் அதற்கான சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்றும் மாநிலக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உத்தரவு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று இந்த உத்தரவு குறித்து விமர்சிப்பவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. அவற்றில் ஆங்கிலம் மற்றும் இந்தி கட்டாயமாக கற்றுக் கொடுக்கப்படுகின்றது. மூன்றாவது மொழியாக மாநிலத்தில் இயங்கும் பல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்படுவதில்லை, தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் என்னென்ன மொழிகளை கற்றுக் கொள்கின்றனர்?
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் தமிழ் மொழி கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளதால், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் கற்கின்றனர். இவற்றை தவிர் பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளையும் தமிழ்நாட்டு மாணவர்கள் பயில்கின்றனர்.
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பல்வேறு கல்வித் திட்டங்களை முன்னெடுத்து வரும், கல்வியாளர் பாலாஜி சம்பத், நகரங்களில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழி மீதும், இரண்டாம், மூன்றாம் நிலை சிறு நகரங்களில் இந்தி மொழி மீதான ஆர்வமும் மாணவர்களிடம் இருப்பதாக கூறுகிறார்.
“சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பிரெஞ்சு மொழி கற்கும் ஆர்வம் மாணவர்களிடையே அதிகம் இருக்கிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம்- பிரெஞ்சு மொழி தேர்வு எளிதாக இருப்பதால், பொதுத்தேர்வில் பிரெஞ்சு மொழியை பாடமாக தேர்வு செய்கின்றனர். தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை விட பிரெஞ்சு மொழியில் மதிப்பெண்கள் பெறுவது மாணவர்களுக்கு எளிதாக இருக்கிறது. சில மேல் தட்டு குடும்பங்களிடம் பிரெஞ்சு கற்றுக் கொள்வது ஒரு அந்தஸ்தின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.
சிறு நகரங்களில் இந்தி மொழி கற்றுக் கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். வேலை நிமித்தமாக தமிழ்நாட்டை தாண்டி வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று நினைப்பதால், மாணவர்களுக்கு இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது, எனவே தாமாக முன்வந்து நிறைய பேர் இந்தி வகுப்புகளுக்கு செல்கின்றனர். எனினும் வசதிகள் குறைவான குக்கிராமங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரு மொழிகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு மட்டுமே மாணவர்களுக்கு உள்ளது” என்கிறார்.
இவற்றை தவிர வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளுக்காக சீன மொழி மற்றும் ஜப்பானிய மொழி கற்றுக் கொள்ளும் ஆர்வமும் நிலவுகிறது என்கிறார்.