பட மூலாதாரம், Getty Images
இன்றைய ( 26/02/2025) நாளிதழ்கள், இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
வட மாநில அரசுப் பள்ளிகளில் மும்மொழி கொள்கை அமலாக்கப்படும் விதம் குறித்து இந்து தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், அங்கே மூன்றாவது மொழியில் பூஜ்ய மதிப்பெண் பெற்ற மாணவர்களும் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புகளுக்குச் செல்வதாக கூறப்பட்டுள்ளது.
அந்த செய்தியில், “புதிய கல்விக் கொள்கை 2020-ல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளை மூன்றாவதாக போதிக்கலாம். எனினும், பெரும்பாலான அரசு பள்ளிகளில் மூன்றாவது மொழியாக உருது அல்லது சமஸ்கிருதம் மட்டுமே போதிக்கப்படுகின்றன. இவற்றில் உருதுவை முஸ்லிம்களும், சமஸ்கிருதத்தை முஸ்லிம் அல்லாதவர்களும் பயில்கின்றனர்.
வட இந்திய மாநிலங்களில் மூன்றாவது மொழியில் மாணவர்கள் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றாலும் அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்லும் வாய்ப்பு மறுக்கப்படுவதில்லை. அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, பெரும்பாலான வட மாநிலங்களில் மூன்றாவது மொழித் தேர்வு பெயரளவில் மட்டுமே நடத்தப்படுவதாகப் புகார் உள்ளது.
வட இந்தியாவின் பெரும்பாலான அரசு பள்ளிகளில் இந்தி மொழி ஆசிரியரே சம்ஸ்கிருத பாடத்தையும் நடத்துகிறார். ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, உருது பாடம் போதிப்பதற்கு அருகிலுள்ள முஸ்லிம் மதரஸாக்களுக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மூன்றாவது மொழிக்கான ஆசிரியர்களை நியமிக்க நிதி ஒதுக்கப்படாததால், பல மாநில அரசுகள் மூன்றாவது மொழிக்கான ஆசிரியர்களை நியமிப்பதில்லை.” என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பேசுகையில், ”தேசிய கல்வி கொள்கையில் இதர மொழிகளுக்கு வாய்ப்பு இருந்தும் வட மாநில அரசுகளும், மாணவர்களும் இந்தி, சமஸ்கிருதத்தையே விரும்புகின்றனர். மத்திய அரசு சமக்கிரு சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநில அரசு பள்ளிகளின் அனைத்து செலவுகளுக்கும் நிதி வழங்குகிறது. இதில் ஆசிரியர்களை நியமிக்க ஏற்படும் நிதிச் சிக்கல்களை தெரிவித்தால் அதற்கான தீர்வு காணப்படும்” என்று கூறியதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.
கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட்
பட மூலாதாரம், Getty Images
கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள கலை, அறிவியல் கல்லூரிக்கு புதிதாக கட்டிடம் கட்ட கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி டி ஆர் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்ததாக கூறும் அந்த செய்தியில், “சோமநாதசுவாமி கோயிலுக்கு நிலத்தை குத்தகைக்கு விட ரூ.3.19 லட்சம் மட்டுமே வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் ரூ.5.12 லட்சம் வாடகையாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதனால் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று டி ஆர் ரமேஷ் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என் ஆர் ஆர் அருண் நடராஜன், கோயில் நிலத்தை குத்தகைக்கு விடுவது என 2022-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அப்போது என்ன வழிகாட்டி மதிப்பீடு இருந்ததோ அதன் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகையை மாற்றியமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வரும் அக்டோபரில் வாடகை மறுநிர்ணயம் செய்யப்படும் என்றார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசின் இந்த முடிவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஓமனில் சித்ரவதை” – 4 ஆயிரம் கி.மீ. கடலில் பயணித்து வந்த தமிழக மீனவர்கள்
பட மூலாதாரம், Getty Images
உணவு, சம்பளம் வழங்காமல் சித்ரவதை செய்ததாகக் கூறி ஓமனில் இருந்து படகில் தப்பி வந்த தமிழ்நாடு மீனவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியின்படி, கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மல்பே மீன்பிடித் துறைமுகத்தின் அருகே கடல்பரப்பில் செயிண்ட் மேரீஸ் தீவு உள்ளது. இந்த தீவுப்பகுதியில் ஓமன் நாட்டுப்படகு டீசல் இன்றி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும். இதனைப் பார்த்த உள்ளூர் மீனவர்கள் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
கடலோர காவல்படையினர் படகில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது, இவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பிராங்கிளின் மோசஸ் (50), டெரோஸ் அல்போன்சோ (38), மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த ராபின்ஸ்டன் (50) என்பது தெரிய வந்ததாகவும். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி அவர்களின் ஓமன் நாட்டு உரிமையாளர் மூன்று பேருக்கும் சம்பளம் மற்றும் உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்து வந்ததாகவும், மூன்று பேரின் பாஸ்போர்ட்டுகளையும் வாங்கி வைத்துக் கொண்டு திரும்ப கொடுக்காமல் மிரட்டியும் வந்தாகவும் மீனவர்கள் தெரிவித்ததாக தினத்தந்தி செய்தி கூறுகிறது.
“இதனால் மூன்று மீனவர்களும் மீன்பிடிப்பதற்காக சென்ற போது உரிமையாளரின் படகுடன் ஓமனில் இருந்து கடல் மார்க்கமாகவே தப்பி வந்துள்ளனர். சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடல் வழியாக பயணித்த அவர்கள் இந்தியக் கடல் பகுதியை அடைந்துள்ளனர். கார்வாரைக் கடந்து மல்பே அருகே செயின்ட் மேரீஸ் தீவுப் பகுதியில் வந்த போது படகில் டீசல் தீர்ந்துள்ளது. இதனால் நடுக்கடலில் தவித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது” என தினத்தந்தி செய்தி குறிப்பிடுகிறது.
“கடலோர காவல்படையினர் ஓமன் நாட்டுப்படகை பறிமுதல் செய்ததோடு, பாஸ்போர்ட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டுப் படகில் எல்லையைத் தாண்டியதாக வழக்குப்பதிவு செய்து மூன்று மீனவர்களையும் கைது செய்தனர். மருத்துவ சிகிச்சைக்குப் பின் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.” எனவும் தினத்தந்தி கூறியுள்ளது.
சாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை – போலீஸ் ஆணையம் பரிந்துரை
பட மூலாதாரம், Getty Images
பள்ளிகளில் சாதி உணர்வை ஒழிப்பதற்காகவும், மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வை வளர்ப்பதற்காகவும் தமிழ்நாடு போலீஸ் ஆணையம், மாநில அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
5வது போலீஸ் ஆணையம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள அந்த செய்தியில்,” அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சாதி பாகுபாடு நடவடிக்கைகள் அதிகமாக காணப்படுவதால் பள்ளிகல்வித்துறை நுட்பமாக செயல்பட வேண்டும். இத்தகைய பிரச்னை இருக்கும் பள்ளிகளில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருக்கக் கூடாது. சாதி பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தொலைதூரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்களை சரியான திசையில் வழி நடத்துவதில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது” என போலீஸ் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
“அரசுப் பள்ளிகளில் சாதியுடன் தொடர்புடைய வண்ணப்பட்டைகளை மாணவர்ளும், ரிப்பன்களை மாணவிகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளை அல்லது கறுப்பு நிற ரிப்பன்களையே சீருடைகளில் அனுமதிக்கலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு, சக மாணவர்களை துன்புறுத்துபவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்” என்ற பரிந்துரைகளையும் போலீஸ் ஆணையம் வழங்கியுள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான இந்த 5 வது போலீஸ் ஆணையம் பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் உள்ளடக்கியது. வருவாய், காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் இதில் அங்கம் வகிக்கின்றனர். பள்ளிகள் மட்டுமல்லாது சாதி ரீதியாக ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க கிராம வாரியான நடவடிக்கைகளை எடுக்க போலீஸ் ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியதாகவும் தி இந்து ஆங்கில நாளிதழின் செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை: பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்பை உருவாக்கி தர கோரிக்கை
பட மூலாதாரம், Facebook/Kathiraveelu Shanmugam Kugathasan
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 92 ஆயிரம் பெண் தலைமை குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே எஸ் குகதாசன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியதாக இலங்கையின் வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “வடக்கு மற்றும் கிழக்கில் 92,000 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் நிலையான வருமான வழிமுறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் விசேடத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. பெண் தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருவாய் பெறக்கூடிய சுய தொழில்களை உருவாக்கிக் கொடுக்க புதிய திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.குகதாசன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு