• Tue. Dec 30th, 2025

24×7 Live News

Apdin News

முல்லைத்தீவில் சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம்

Byadmin

Dec 30, 2025


உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 21.12.2025 அன்று முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசிக்கும் குகநேசன் டினோயா எனும் 13 வயது சிறுமி சாதாரண உணவு ஒவ்வாமை காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார்.

குறித்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரியும், இனியும் இவ்வாறானதொரு இழப்பு ஏற்படாதிருக்கவும் முல்லைத்தீவு மக்கள் சமூகத்தினரால் இன்று திங்கட்கிழமை (29)  காலை 10 மணியளவில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தில் டினோயாவுக்கு நடந்த கொலை தொடர்பான உண்மைத்தன்மையினை பணிப்பாளர் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும், கொலைசம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர், தாதியர்களுக்கு அரசசேவையில் தொடர அனுமதியளித்துள்ளீர்களா? இவ்வாறாக நீதிநெறிமுறைக்கு முரணாக செயற்படும் வைத்தியர்கள், தாதியர்களுக்கு எவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல நூற்றுக்ககணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சாதாரண ஒவ்வமைக்காக நடந்து வந்த உன்னை நடைப்பிணமாக மாற்றினார்கள். பைத்தியமா? வைத்தியமா?எங்கே அந்த கொலைகாரர்கள்.? நீதி வேண்டும்,

ஒன்றாக சந்தோசமாக வாழும் நாட்டில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இவ்வாறான சதிவேலைகளை செய்து ஏன் மக்களை ஏமாற்றுகின்றீர்கள்? ஒன்றோ இரண்டோ பிழைகளை விடுகின்றீர்கள்? ஏன் மக்களை ஏமாற்றுகின்றீர்கள்? நீதி பெறும் வரை எங்கள் குரல் ஓயாது?சிறுமியின் கனவுகள் மருத்துவ அலட்சியத்தால் முடிந்ததா?ஊழலற்ற அரசாங்கத்தில் ஊழல் நிறைந்த சிகிச்சை முறையை கொடுக்கவேண்டாம்?உயிரை காக்க வேண்டிய கைகள் உயிரை வாங்கலாமா? என்ற கோசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்திற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன், பிரதேசசபை தபிசாளர் ,உறுப்பினர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள் , சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர், இதன்போது வைத்தியசாலை பணிப்பாளர் , பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிற்கான மகஜர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களினால் கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தின் பின்னர் முல்லைத்தீவு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜாதிபதி செயலகத்திற்கும் அதன் பிரதிகள் சுகாதார அமைச்சர் கொழும்பு, செயலாளளர் நாயகம், சுகாதாரபணிமனை கொழும்பு, வடமாகாண ஆளுனர் அலுவலகம்,முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, முல்லைத்தீவு போன்றவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டாலும் என்ற நோக்கத்தில் கலகம் அடக்கும் பொலிஸாரும் ,பாதுகாப்பு கடமையில் பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர்.

By admin