• Tue. Feb 11th, 2025

24×7 Live News

Apdin News

முல்லை பெரியாறு பிரச்சினையில் ‘எல்லை தாண்டும்’ கேரளா – களத்துக்கு வராத தமிழக கட்சிகள் | about Mullai periyar Dam issue and politics explained

Byadmin

Feb 11, 2025


குமுளி: முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் நிர்ணயிக்கப்பட்ட எல்லையை கடந்து கேரள அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக விவசாயிகளே தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக கட்சிகள் இப்பிரச்சினையை கண்டுகொள்ளாமலேயே இருக்கின்றன.

முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கப்பட்ட நிலையில் 1979-ம் ஆண்டு அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக கேரளாவில் வதந்தி பரவியது. ஆகவே அணையின் உச்ச அளவு நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு மாநிலங்களுக்கும் அணை தொடர்பான சர்ச்சை தொடங்கியது. பல்வேறு போராட்டங்கள், பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. உச்ச நிகழ்வாக 2011-ம் ஆண்டு தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையில் பெரும் போராட்டம் தொடங்கியது. இதில் கேரளாவுக்கான போக்குவரத்தை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அரிசி, பால், காய்கறி உள்ளிட்ட எந்த பொருளும் கேரளாவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்தது. இதனைத் தொடர்ந்து இரு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தை நாடின.

2014-ம் ஆண்டு விசாரணை முடிவில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் அணையை பலப்படுத்த கேரள அரசு தொடர்ந்து பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. இதனால் நீதிமன்ற உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக-கேரள எல்லையில் பதற்றமும் சர்ச்சையும், போராட்டங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. குமுளி இருமாநில எல்லையாக இருப்பதால் இங்கு போராட்டம் நடத்தினால் பிரச்சினை பெரிதாகி விடும் என்பதால் இருமாநிலங்களிலும் ‘போராட்டத்துக்கான எல்லைகள்’ நிர்ணயிக்கப்பட்டன. இதன்படி தமிழக விவசாயிகள் குமுளியில் இருந்து

கேரள விவசாயிகள் குமுளியில் நடத்திய போராட்டம்.

7 கி.மீ. தொலைவில் உள்ள லோயர்: கேம்ப்பிலும், கேரள பகுதியைச் சேர்ந்தவர்கள் குமுளியில் இருந்து 12 கி.மீ. தூரம் உள்ள வண்டிப்பெரியாறு பகுதியிலும் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கப்பட்டன. ஆனால், இந்த விதிமுறையை கடந்த பிப்.4-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு குழுவினர் மீறினர். குமுளியில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இரு மாநிலங்களிலும் சர்ச்சைக்குரிய பிரச்சினை இது. இருப்பினும் ‘எல்லை தாண்டிய’ இந்த போராட்டம் தமிழக விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை கேரள அரசு இன்றுவரை பின்பற்றவில்லை. அதனால் பேபி அணையை பலப்படுத்தவோ, இடையூறான மரங்களை வெட்டவோ முடியவில்லை. தொடர்ந்து அணையின் பராமரிப்புப் பணிக்காக செல்லும் கட்டுமானப் பொருட்களை தடுப்பது, அணை பாதுகாப்புக்கான கண்காணிப்பு கேமராவை நிறுவ விடாமல் செய்வது, தமிழக கட்டுப்பாட்டில் உள்ள அணையில் கேரள அதிகாரிகளை நுழைய அனுமதிப்பது, தமிழக நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி என்று தொடர்ந்து கேரளாவின் எதிர்மறை போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதும், கண்டன போராட்டங்களை நடத்துவதுமாக உள்ளனர். ஆனால் அரசியல் கட்சியினர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. பிரச்சினைகள் மாநில அளவில் எதிரொலிக்கும்போது கண்டன அறிக்கையை மட்டும் விடுகின்றனர். மற்றபடி ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அனைத்து கட்சிகளும் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என்ற வாக்குறுதிகள் தவறாமல் இடம்பிடித்து வருகின்றன.

களத்துக்கு வராத அரசியல் கட்சிகளால் விவசாயிகள் மட்டுமே மாநில உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் விவசாயிகளின் போராட்டம் காரணமாகவும், நீதிமன்ற உத்தரவுகளாலும் ஏதேனும் சாதகமான அறிவிப்புகள் வந்தால் அவற்றுக்கு சொந்தம் கொண்டாட மட்டும் கட்சிகள் போட்டிபோட்டு விழா நடத்திக் கொள்கின்றன.

அப்பாஸ்

இதுகுறித்து 5 மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் அப்பாஸ் கூறியதாவது: 2011-ல் வைகோ மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். தற்போது அணையின் மீதான தமிழகத்தின் உரிமையை மீட்க பல கட்சிகளும் ஆர்வம் காட்டுவதில்லை.

போராட்டத்துக்கு வருவதும் இல்லை. ஆனால் கேரளாவில் அணை விஷயத்தில் அனைத்து கட்சிகளும் ஒருங் கிணைகின்றன. இங்கும் அதுபோன்ற நிலை ஏற்பட வேண்டும். குறைந்தபட்சம் விவசாயிகளின் போராட்டத்திலாவது பங்கேற்க வேண்டும் என்றார்.

கொடியரசன்

முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத் தலைவர் கொடியரசன் கூறுகையில், சிறிய விஷயங்களுக்கு ஆயிரக்கணக்கான பேரை திரட்டி போராட்டம் நடத்தும் கட்சிகள் ஏனோ அணை விஷயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. கட்சிகளின் ஆர்வ மின்மையால் தமிழக உரிமைகளை மீட்க விவசாயிகளே போராட வேண்டிய நிலை உள்ளது என்றார்.



By admin